தினமலர் விமர்சனம்
ஏ வென்நெஸ்டே, ஸ்பெஷல் 26 போன்ற படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே, பயங்கரவாதத்தை மையமாக வைத்து ஆக்ஷ்ன், த்ரில்லராக கொடுத்திருக்கும் படம் தான் பேபி. இந்த பேபி ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்.
மும்பை பயங்கராவாத தாக்குதலுக்கு பிறகு, பெராஸ் அலிகானால்(டேனி) பேபி என்ற ரகசிய டீம் உருவாக்கப்படுகிறது. இந்த டீமின் முக்கிய நோக்கமே பயங்கரவாதத்தை அழிப்பது தான். இந்த டீமுக்கு தலைமை தாங்குகிறார் அஜய்(அக்ஷ்ய் குமார்). இஸ்தான்புல்லில் இருக்கும் ஐஎஸ்ஐ பயங்கரவாதியான ஜமாலை(கரண் ஆனந்த்) கண்டுபிடித்து பயங்கராவாதத்தை அழிக்கும் முயற்சியில் களமிறங்கும் அஜய்க்கு, முகமது ரஹ்மான்(ரஷீத் நாஸ்), ஜவேத்(சுசாந்த் சிங்), பிலால்(கே.கே.மேனன்) உள்ளிட்ட பயங்கரவாதிகள் முட்டுகட்டை போடுகின்றனர். அவர்கள் எல்லோரையும் அஜய், சுக்லா(அனுபம் கெர்), ஜெய்(ராணா டகுபதி) மற்றும் ப்ரியா(டாப்சி) ஆகியோரின் உதவியோடு எப்படி சமாளித்து பயங்கராவாதிகளை அழிக்கிறார் என்பது தான் பேபி படத்தின் விறுவிறுப்பான கதை.
அக்ஷ்ய், வழக்கம் போலவே பிரமாதமாக நடித்து இருக்கிறார். பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் அவர் காட்டும் ஆக்ஷ்ன், உணர்ச்சி எல்லாம் சூப்பர்ப். படத்தில் ஒரு இடத்தில் கூட தனது கேரக்டரை விட்டு விலகவில்லை, முழுக்க முழுக்க அஜய்யாகவே வாழ்ந்திருக்கிறார் அக்ஷ்ய்.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் வௌ்ளாவி பொண்ணு டாப்சி. மற்றொருவர் அறிமுக ஹீரோயின் மாதுரிமா துலி. இவர்கள் இருவரில் டாப்சி தான் அனைவரையும் கவருகிறார். இருந்தாலும் மாதுரிமாவின் நடிப்பு ஓ.கே., என்ற அளவில் இருக்கிறது.
அக்ஷ்ய் போலவே, ராணா டகுபதி, அனுபம் கெர், கே.கே.மேனன், சுஷாந்த் சிங், டேனி, ரஷீத் நாஸ் உள்ளிட்ட எல்லோரும் தங்களது பாத்திரமறிந்து அருமையாக நடித்திருக்கின்றனர்.
கமர்ஷியல் ஹீரோவை வைத்து இப்படி ஒரு கதையை தன்னால் இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நீரஜ். படத்தின் ப்ளஸ்ஸே நீரஜ்ஜின் கதையும், திரைக்கதை வேகமும், அனல் பறக்கும் வசனமும் தான். இயக்குநர்கள் தான் சினிமாவின் கிங் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நீரஜ்.
பேபி படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் தான். அதில், படம் முடியும் போது வரும் பாடல் மனதை நெகிழ வைக்கிறது. பாலிவுட்டில், வலுகட்டாயமாக பாடல்கள் திணிக்கப்பட்டு வரும் வேளையில் இப்படியொரு புதிய முயற்சிக்காக இயக்குநரை பாராட்டலாம், இதுபோன்ற படங்களை வரவேற்கலாம். பேபி படத்திற்கு பெரிய ப்ளஸ் பின்னணி இசை, படத்தில் பாடல்களை குறைத்து பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள்.
ஆர்ட், காஸ்ட்யூம், நீரஜ் பாண்டேயின் இயக்கம் எல்லாம் பேபியை பிரமாதப்படுத்தியிருக்கிறது, ஆனாலும் முன்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, பின்பாதியில் இல்லாதது பேபியை சற்றே டல் அடிக்க வைக்கிறது.
மொத்தத்தில் பேபி - ராக்ஸ்!
ரேட்டிங் - 3.5/5