நம் இந்திய குடியரசு விழா தின தருணத்தில் முழுக்க, முழுக்க தேசப்பற்றுடன் வெளிவந்திருக்கும் படம் மூன்றாம் உலகப்போர்.
வேத் சங்கர் இசையில் புதுமுகங்கள் நடிக்க, சுகன் கார்த்தியின் எழுத்து, இயக்கத்தில், 2025ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவுக்கும், சீனாவுக்குமிடையில் பொருளாதார போர் நடக்குமென்றும், அதில் இந்தியாவே ஜெயிக்குமென்றும் சொல்லி வந்திருக்கும் திரைப்படமான மூன்றாம் உலகப்போர் படத்தின் கதைப்படி, இந்திய - சீன எல்லையில் நடக்கும் ஒரு இராணுவ அத்துமீறலில் இந்திய இளம் இராணுவ மேஜர் சரவணன் காணாமல் போகிறார்.
இந்திய இராணுவமும் அவரது குடும்பமும் அவர் இறந்து விட்டதாக கருதுகிறது. ஆனால், சீன இராணுவத்திடம் சிக்கிய அவர், சித்ரவதைகளுக்கு உள்ளாகிறார். கூடவே, அவர் சீனா, இந்தியா மீது நடத்த திட்டமிட்டிருக்கும் பொருளாதர போரை சாமர்த்திய்மாக தடுத்து நிறுத்தி, தன் அழகிய மனைவி மற்றும் பெற்றோரின் நினைவுகளுடன் நாட்டுப்பற்றோடுஉயிரை விடும் தேசப்பற்று மிக்ககதை தான் மூன்றாம் உலகப்போர் படத்தின் கதை மொத்தமும்.
நாட்டுப்பற்றுமிக்க இளம் இராணுவ மேஜர் சரவணனாக புதியவர் சுனில்குமார் அனுபவ நடிகர் போல் அசத்தியிருக்கிறார்.
இராணுவ வீரரின் இளம் மனைவியாக அகிலா கிஷோர், செம செலக்ஷன், செம ஆக்டிங் ரியாக்ஷன். இப்படத்தில் படம் முழுக்க அகிக்கு நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், சரியாக முயற்சித்தால் தமிழ்சினிமாவில் நல்லதொரு இடம் பிடிக்கலாம் அகி!
சீன இராணுவ அதிகாரியாக தமிழ் பேசும் வில்லன் வில்யங் எம்.ஜி, அவினாஷ், காததி ரவி, ஜெனிபர் உள்ளிட்ட எல்லோரும் பாதிரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
தொழில்நுட்ப கலைஞர்களில் வேத் சங்கரின் இசை, தேவாவின் ஒளிப்பதிவு, ரிச்சர்டின் படத்தொகுப்பு உள்ளிட்டவை சுகன் கார்த்தியின் இயக்கத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
2025 ம் ஆண்டுக்கு மேல் இப்படக் கதைப்படி நடைபெறும் மூன்றாம் உலகப்போர் வெறும் வார்த்தைகளாலேயே ஒப்பேற்றபடுவது, போர் காட்சிகள் நிறைய கிராபிக்ஸ் சீன்களாக போரடிப்பது... உள்ளிட்ட பலவீனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இப்படத்தில் தூவப்பட்டிருக்கும் தேசப்பற்று., இன்றைய இளம் சமுதாயத்திற்கு தேவையான ஒன்று எனலாம்!
ஆக மொத்த்தில், புதியவர் சுகன் கார்த்தியின் இயக்கத்தில், எதிரி நாட்டு இராணுவ முகாமில் ஒரு இராணுவ வீரர், அனுபவிக்கும் சித்ரவதை கொடுமைகளை இதுவரை தமிழ் சினிமாவில் காட்டியிராத அளவிற்கு வித்தியாசமும், விறுவிறுப்புமாக காட்டியிருப்பதில் ஜெயித்திருக்கிறது மூன்றாம் உலகப்போர்! மற்றபடி, மூ. உ.போர் - போர்!!