Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சிகரம் தொடு

சிகரம் தொடு,Sigaram Thodu
21 செப், 2014 - 14:51 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிகரம் தொடு


தினமலர் விமர்சனம்


கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, விக்ரம்பிரபு நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், தூங்காநகரம் பட இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், யுடிவி மோஷன் பிக்சர்ஸின் இந்த வாரத்து ரிலீஸ்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் சிகரம் தொடு. வசூலிலும், வரலாற்றிலும் தொட்டதா சிகரம்.? பார்ப்போம்...


ஒரு கலவரத்தில் தன் ஒற்றை காலையும், உமையொரு பாகமான மனைவியையும் இழந்து தவிக்கும் போலீஸ்காரர் சத்யராஜின் வாரிசு விக்ரம் பிரபு. தன் ஒற்றை வாரிசை போலீஸ் துறையில் பணியமர்த்தி ஒரு போலீஸ்காரனாக தன்னால் சாதிக்க முடியாததை தன் மகன் விக்ரம்பிரபு மூலம் சாதிக்க ஆசைப்படுகிறார் அப்பா. தன் தாயையும், அப்பா, தன் காலையும் இழக்க காரணமானது போலீஸ் துறை தான் என்பதால் அத்துறையை வெறுக்கும் விக்ரம் பிரபு, அப்பாவின் திருப்திக்காக உடற்பயிற்சி, போலீஸ் தேர்வு என ஒருபக்கம் போலீஸ் வேலைக்கு முயற்சித்துக் கொண்டே, மற்றொரு பக்கம் வங்கி பணிக்கான முயற்சிகளிலும் தீவிரமாக இருக்கிறார்.


இந்நிலையில் ஒரு வடக்கு இந்திய ஆன்மிக யாத்திரையில் கதாநாயகி மோனல் கஜாரை சந்திக்கும் விக்ரம் பிரபு, அவர்வசம், தன் நிசத்தை இழக்கிறார். டாக்டரான மோனலுக்கும், போலீஸ் புருஷன் என்றால் உவ்வே என்று குமட்டிக்கொண்டு வருகிறது. இதுமாதிரி சூழலில் ஒருகட்டத்தில், நாயகருக்கு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கிடைக்கிறது. ஒருமாத காலம் அப்பாவிற்காக பணியில் இருந்துவிட்டு, அதன்பின் தன் காதலிக்காகவும், வங்கி பணி கனவிற்காகவும் போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிடும் முடிவில் வேலையில் சேருகிறார் விக்ரம்! ஆனால் எதிர்பாராத விதமாக சென்னை சிட்டியே தேடும் ஏடிஎம்., கொள்ளையர்களான கெளரவ்(படத்தின் இயக்குநரே தான்...) கோஷ்டியினரை துரத்தி பிடிக்கும் ஹீரோ, அவர்களால் தொடர்ந்து போலீஸ் பணியை விரும்பி வேட்கையுடன் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார். அது எப்படி.? ஏன்.? எதற்கு? என்பதற்கும், காதலி மோனல் கஜாரும் கட்சி மாறினாரா.? விக்ரமின் காதல் நிறைவேறியதா.? காட்சிகள் மாறியதா..? என்பதற்கும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது.! சிகரம் தொடு படத்தின் மீதிக்கதை!


முரளி பாண்டியனாக வரும் விக்ரம் பிரபு, நிஜத்தில் பிரபுவின் மகன் என்றாலும், உயரம், உருவம், கம்பீரம்... உள்ளிட்டவைகளில் சத்யராஜின் மகனாகவும், சிகரம் தொடு படத்தில் சக்கைபோடு போட்டிருக்கிறார். போலீஸ் கட்டிங், டிரையினிங் உள்ளிட்ட காட்சிகளில் அவர் காட்டும் மிடுக்கு... இன்றைய இளம் நிஜ போலீஸ் அதிகாரிகளையே கண்முன் நிறுத்துகிறது. காதல் காட்சிகளிலும், சதீஷூடன் பங்கெடுக்கும் காமெடி காட்சிகளிலும் தான் ஒரு பாரம்பரியமிக்க தேர்ந்தெடுத்த நடிகன்... என்பதை ஃபிரேம் டூ ஃபிரேம் நிரூபித்திருக்கிறார் விக்ரம் பிரபு.


கதாநாயகி மோனல் கஜார், அழகு பதுமையாக ஹோம்லி குல்கந்தாவாகவும், கிளாமர் கிளியாகவும் ரசிகர்களுக்கு பி.பீ எகிற செய்கிறார்.


காமெடி சதீஷ் டபுள் மீனிங்கில் ஆங்காங்கே சந்தானத்தை(இப்படத்தில் இல்லாத...) மிஞ்சி விடுகிறார்.


போலீஸ் டிஜிபி.,யாக வரும் முன்னாள் காவல்துறை அதிகாரி நடராஜன், எஸ்.ஐ., செலக்ஷ்ன் ஆபிஸராகவும், கதாநாயகியின் அப்பாவாகவும் வரும் ரம்மி பட இயக்குநர் பாலகிருஷ்ணன், கோவை சரளா, வங்கி அதிகாரியாக வரும் கமலா திரையரங்கு அதிபர் சிவ வள்ளியப்பன், தாத்தாவாக வரும் கல்யாணமாலை மோகன், காமெடி போலீஸ் மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் நாராயண மூர்த்தி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


டி.இமானின் இசையில் அன்புள்ள அப்பா அப்பா... பாடலில் தொடங்கி அத்தனை பாடல்களும் சுகராகம். இருட்டிலும் மிளிரும் விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு, மணிரத்னம் படங்களையே சில இடங்களில் பீட் செய்து விடுகிறது என்றால் மிகையல்ல! அதுவும் அந்த பீச் ஷாட் யப்பா!! அதேமாதிரி ஹரித்துவார் மற்றும் இமாலய மலை காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறது கேமரா.!!


லைப்புல எல்லோருக்கும் ஜெயிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும், அதை சரியாக பயன்படுத்தி ஜெயிச்சிடணும்..., ஈசிஜி மெஷின் கூட ஏற்ற இறக்கத்தோடு ஓடினால் தான் உயிர் இருக்கிறதா அர்த்தம்., அது ஒரே நேர்கோட்டில் ஓடினா செத்துட்டதா அர்த்தம்... உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற வசன வரிகளிலும், காட்சி அமைப்புகளிலும் நம்மை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் கெளரவ், வில்லனாக ஏடிஎம்., கொள்ளையனாக நடித்து கொல்வதை தவிர்த்திருக்கலாம்!


அம்மாம்பெரிய இன்டர்நேஷனல் லெவல் ஏ.டி.எம்., கொள்ளையை துப்புதுலக்க மொத்த சிட்டியிலும் புத்தம் புதிய எஸ்.ஐ., விக்ரம் பிரபுவை விட்டால் வேறு ஆளே இல்லாத மாதிரி, தமிழ் சினிமா வழக்கப்படி, விக்ரம் பிரபு மட்டுமே அந்த கேஸை டீல் செய்வது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும்... வட இந்திய ஆன்மிக யாத்திரை, ஏடிஎம் கொள்ளை என சிகரம் தொடு - புதுமையாக சிகரம் தொட்டிருக்கிறது!



-------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்


அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . நகர்ல ஆங்காங்கே ஏ டி எம் செண்ட்டர்களில் கொள்ளை நடக்குது. நவீனமான கொள்ளை.அதாவது ஏ.டி.எம்., செண்ட்டர்ல நம்ம ஏ.டி.எம்., கார்டு பாஸ் வோர்டை திருடி, போலி கார்டு ரெடி பண்ணி ரத்தம் இன்றி, யுத்தம் இன்றி சாத்வீகமா சாமர்த்தியமான திருடல்.


இந்தப் பிரமாதமான சப்ஜெக்டை எவ்வளவு த்ரில்லிங்கா பண்ணி இருக்கலாம்? ஒரு பரபரப்பான த்ரில்லர் கம் ஆக்ஷன் பேக்கேஜ் கதையை வெச்சுக்கிட்டு பின் பாதியில் பட்டையைக் கிளப்பும் திரைக்கதை வேகத்தை வெச்சுக்கிட்டு எதுக்குதான் இயக்குநர் அவ்வளவு தடுமாறினாரோ முன் பாதியில்?


ஜில்லாவில் வருவது போல் அப்பாவுக்கு போலீஸ் பதவியில் மகனைப்பார்க்க ஆசை.ஆனா மகனுக்கு அது பிடிக்கலை. காதலிக்கும் போலீஸ் காதலன்னா பிடிக்காது.சம்பந்தமே இல்லாம ஹரித்வார் டூர்ல 4 ரீல் என முன் பாதியில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள்.


ஹீரோவா விக்ரம் பிரபு. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்.நூல் இழையில் அந்த வெற்றியைத்தக்க வெச்சுக்கிட்டார். கொஞ்சம் ஏமாந்திருந்தா இது ஒரு தோல்விப்படம் ஆகி இருக்கும். ஆனாலும் செம ஹிட் படத்தை சாதா ஹிட் படமாக்கிட்டாங்கன்னு தான் சொல்லனும்.போலீஸ் ஆஃபீசர் கெட்டப்பில்

எக்ஸ்ட்ரா கம்பீரம் காணோம்.மழு மழு அமுல் பேபி போல் இருக்கார்.


ஹீரோயினா மோனல் கஜ்ஜர். ஆந்திரா ஸ்வீட் ஆப்பம். மொழு மொழு கன்னங்கள்.பஞ்சு மிட்டாய் குட்டி உதடு,துக்ளியூண்டு கண்கள் என முதலுக்கு

மோசம் இல்லை (இவன் டிக்கெட்க்கு கொடுத்த 100 ரூபா தான் மொதலாம். அதுக்கு மோசம் இல்லையாம்,அடேய் ;-))பாடல் காட்சிகளில் இவர் கிளாமர் காட்டாதது அதிர்ச்சி அளிக்கிறது.நாம எதுக்கு தான் ஜெர்க் ஆகலை?


ஹீரோவோட அப்பாவா சத்யராஜ். நல்ல கேரக்ட்ர் ரோல்.வில்லனின் காலை விடாமல் பிடிப்பது எல்லாம் ஊமை விழிகள்லயே பாத்துட்டோம் பாஸ்.

ஆனாலும் கண்ணியமான நடிப்பு.


ஈரோடு மகேஷ் இந்தப்படத்துல சப் இன்ஸ்பெக்டரா வர்றார்.யார்யா அங்கே நக்கலா சிரிக்கறது?


வில்லன்களாக வரும் அந்த 3 பேரும் இன்னும் மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கலாம்.


இசை அண்ணன் இமான்.கூச்சமே இல்லாம சுட்டிருக்கார். எதுக்காக கூச்சப்ப்படனும்? யாரும் செய்யாததையா அவர் செஞ்சுட்டார்?


பின்னணி இசை சுமார் ரகம்.2 பாட்டு ஹிட் ஆகிடும்.


ஆக்சன் காட்சிகள்,ஃபைட் காட்சிகள் நம்பகத்தன்மையோட இருக்கு. சினிமாத்தனம் இல்லை. க்ளைமாக்சில் நல்ல விறுவிறுப்பு.


சிகரம் தொடு - முன் பாதி சவ சவ பின் பாதி பர பர.ஏ.டி.எம்., கொள்ளையர் கதை - ஏ பி சென்ட்டரில் சுமாரா ஓடிடும்.




ரேட்டிங் - 2.5 / 5.








-------------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்




மகன் போலீஸ் அதிகரியாக வரவேண்டும் என்பது அப்பாவின் கொள்கை. தனக்குக் கணவராக வருபவர் போலீஸ் அதிகாரியாக இருக்கவே கூடாது என்பது காதலி மோனலின் கொள்கை.


தந்தைக்கும் காதலிக்கும் இடையில் விக்ரம் பிரபு. இந்த பிரச்னைக்குள் ஏ.டி.எம். கொள்ளை, புலன் விசாரணை என்று நுழைந்து திரைக்கதையை விறுவிறுப்பாக்கி விட்டார் இயக்குநர்.


ஏ.டி.எம். பின் நம்பரை கண்டுபிடிக்க உதவும் ஸ்கிம்மர் டிவைஸ், பின்கோல் கேமரா, போலி கார்டுகள் உற்பத்தி என்று ஏ.டி.எம். கொள்ளையை அக்குவேறு ஆணிவேறாக அலசி நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகிறார்கள்.


போலீஸ் அதிகாரிக்கான மிடுக்கு, பாசக்கார மகன், காதலில் குறும்பு என்று பன்முக நாயகனாகிவிட்டார் விக்ரம் பிரபு.


காதலியாக வரும் மோனல் கஜ்ஜார் கிளாமரிலும் நடிப்பிலும் ஓகே ரகம்.


சதீஷ், கோவை சரளா, மனோகர் காமெடி ட்ராக் கதையோடு ஒன்றிப்போவது தேவலை.


ஒளிப்பதிவு இருட்டுக்காட்சிகளிலும் துல்லியம். இமான் இசையில் பிடிக்குதே பாடல் பிடிக்கும். பின்னணி இரைச்சலை ரொம்பவே குறைத்திருக்கலாம்! காதல், காமெடிகளில் கத்திரி போட்டு ஏ.டி.எம். கொள்ளை, புலன் விசாரணைக்குள் ஆழமாகப் போய் க்ளைமாக்ஸில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.




சிகரம் தொடு - உயரம்!




குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in