Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

முண்டாசுப்பட்டி

முண்டாசுப்பட்டி,Mundassupatti
02 ஜூலை, 2014 - 18:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முண்டாசுப்பட்டி

தினமலர் விமர்சனம்


கிராமத்துல இருக்கிற எல்லாரும் முண்டாசு கட்டி இருக்கிறதால படத்துக்குப் பேரு முண்டாசுப்பட்டியாம். அப்ப வேட்டி மட்டும் கட்டியிருந்தால் வேட்டிப்பட்டி...அப்புறம்...வேண்டாம் இதோட நிறுத்திக்குவோம். கற்பனையான ஒரு கிராமத்துல நடக்கிற அதி கற்பனையான ஒரு விஷயம்தான் படத்தோட கதை.


தலைக்கு உள்ள சில பல சுவாரசியமான விஷயங்களை யோசிச்ச இயக்குனர் ராம்குமார் தலைக்கு வெளிய இருக்கிற தலைமுடியைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை. அவனவன் அமெரிக்காவுல இருந்து மேக்கப் மேனையும், ஹேர் டிரஸ்ஸரையும் கூட்டிட்டு வந்து அப்படியே யதார்த்தமா இருக்கிற மாதிரி கெட்-அப்பையே மாத்தறாங்க. இவங்க என்னடான்னா, ஆதி கால சினிமாவுல பயன்படுத்தின அதே விக்கை எடுத்து மாட்டிக்கிட்டு ஃபேன்சி டிரஸ் காம்படிஷன் நடத்தியிருக்காங்க.


1980-கள்னா ஒண்ணு இளையராஜா பாட்டு பின்னணியில பாடணும், இல்லை பெல்பாட்டம் பேண்ட் போடணும், ஸ்டெப் கட்டிங் தலைமுடி இருக்கணும்னு இதுதான் இவங்களுக்குத் தெரிஞ்சது போல. ஆனால், அதையும் மீறி உணர்வுன்னு ஒரு விஷயம் இருக்கிறது இவங்க கண்ணுக்குலாம் தெரியலை.


ஒரு காலத்துல முண்டாசுபட்டி கிராமத்துல ஒரு வெள்ளைக் காரன் வந்து போட்டோ புடிச்சதாலதான் கிராமத்துல இருக்கிற பலர் வித்தியாசமான நோய் வந்து இறக்கறாங்கன்னு ஒரு பீதி. அப்ப எங்க இருந்தோ வந்து விழுற ஒரு எரி கல், அப்படியே கரெக்டா அவங்க கிராமத்து கோயில்ல போயி செட் ஆகிடுது. அந்த சாமிதான் இவங்கள காப்பாத்துனதா நினைச்சி அந்த ஊர்ல இருக்கிற யாருமே போட்டோ எடுத்துக்கறதில்லை. அப்படி போட்டோ எடுத்தால் அவங்களுக்கு ஆயுசு முடிஞ்சிடும்னு ஒரு நெனப்பு.


இப்படிப்பட்ட கிராமத்துக்கு இறந்து போன ஊர் பெருசை போட்டோ எடுக்க போட்டோகிராபரான விஷ்ணு விஷால் அவர் உதவியாளர் காளி வெங்கட்டோட ஊருக்குள்ள வர்றாரு. அப்புறம் என்ன வழக்கம் போல ஊர் பெரிய மனுஷர் மகளான நந்திதாவைக் காதலிக்கிறாரு. அப்புறம் எப்படி ஊர் மனசை மாத்தறாருங்கறதுதான் படத்தோட கதை.

படத்துல இருக்கிற ஒரு பெரிய ஆறுதலே தேவையில்லாத காதல் காட்சிகள், காதல் பாடல்கள், முட்டல் மோதல் இப்படி எதுவும் இல்லாததுதான். அதே சமயம் அதுவே ஒரு மைனஸ் பாயின்டாவும் ஆயிடுது. முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைக் கதையில காதலுக்குலாம் கூட பெரிய முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியலை. மூடநம்பிக்கையை எதிர்க்கறோம்னு உஷாரா ஃபிராடா இருக்கிற மத்தவங்க மேலயும், பல்லி மேலயும் காட்சிகளை வச்சி எதுக்கு வம்பும்னு தப்பிச்சிக்கறாங்க.


விஷ்ணு விஷால், அவருக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஒரு விக், பொருத்தமில்லாத ஒரு பேண்ட், சட்டையோட முடிஞ்சவரைக்கும் முட்டி மோதி பார்த்திருக்காரு. டயலாக் டெலிவரியை நிதானமா சொல்லி புரியற மாதிரி பேசறதுல கொஞ்சம் தப்பிச்சிக்கிறாரு. அதுலயும், சத்தமேயில்லாம நந்திதாவை சைட் அடிக்கிறதுல சான்ஸே இல்லை. ஆனாலும், நடிப்புத் திறமையை கொட்டறதுக்கு படத்துல எந்த காட்சியும் இல்லை. அப்படியே இருந்துட்டாலும்னு நீங்க கேக்கறது புரியுது. நம்பிக்கையை தளர விடாதீங்க விஷ்ணு, இப்படியே கொஞ்சம் கொஞ்சமா போனால் விஷால் மாதிரி ஆகிடலாம்.


அட்டகத்தி நந்திதா, முண்டாசுபட்டி கிராமத்தோட ஊர் பெரிய மனிதரோட ஒரே செல்லப் பொண்ணு. அப்புறம் கேக்கணுமா, கண்டிப்பா ஹீரோவைத்தான் லவ் பண்ணும். நீலம், சிகப்பு, பச்சை கலர்ல பாவாடை தாவணி, காமாட்சி டாலர் செயின் இதுதான் 80களோட ஹீரோயின் தோற்றம்னு இயக்குனர் ஃபிக்ஸ் ஆகிட்டாப்ல, என்ன பண்றது. ஆனாலும், நந்திதாவுக்கு இந்த கதாபாத்திரமும் அழகு. இப்படி நல்லா நடிக்கிற பொண்ணை அப்படியே சும்மா பார்க்கிறதுலயும், நடக்கிறதுலயும் மட்டுமே விட்டுட்டாரு இயக்குனர்.


படத்தோட கலகலப்புக்கு ரெண்டு பேர் உத்தரவாதம். ஒண்ணு காளி வெங்கட், இன்னொண்ணு ராமதாஸ். காளி வெங்கட் , விஷ்ணுவோட உதவியாளர் அப்பப்பட சரியான சமயத்துல சரியா பேசி கொஞ்சம் சிரிக்க வைக்கிறாரு. ஆனாலும் , நகைச்சுவையில இவரை ஓவர் டேக் பண்ணிடறாரு ராமதாஸ். சினிமா ஆசையில முனீஷ்காந்த்-னு பேரை வச்சிக்கிட்டு கிராமத்துல இவர் பண்ற அட்டூழியம் அப்பப்ப கொஞ்சம் பொறுமைய சோதிச்சாலும் சில காட்சிகள்ல சிரிக்க வைக்குது.


ஷான் ரோல்டன் இசையில் “இது என்ன.... பாடலும், “ராசா மகராசா...” பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் வாசித்துத் தள்ளுகிறார். சில இடங்களில் வசனங்கள் கூடப் புரியவில்லை. கிராமத்துக் காட்சிகளில் ஷங்கரின் ஒளிப்பதிவு பாராட்ட வைக்கிறது.


முண்டாசுப்பட்டி - வண்ணக் காலத்தில் ஒரு கருப்பு வெள்ளை...!


-----------------------------------------------------------------

குமுதம் சினிமா விமர்சனம்


கேமராவைக் கண்டாலே பதறும் அப்பாவித் தனமும், ஆ.... பாவித்தனமும் உள்ள மக்கள் நிறைந்த பட்டிக்காட்டில் அந்தக் கேமரா மூலமாகவே காதலியைக் கைப்பிடிக்கும் ஹீரோவின் கதை.


80-களில் நடக்கும் சூப்பர் ஸ்டீஷன் படம். குறும்படம் தந்த நம்பிக்கையில், மூட நம்பிக்கைக் கிராமங்களுக்குள் நுழைந்து, குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி, ஏன் டூயட் கூட இல்லாமல், நகைச்சுவையை எல்லா கேரக்டர்களுடனும் பின்னி ஊடுருவ விட்ட ஒரு காரணத்துக்காகவே இயக்குநர் ராமைப் பாராட்டலாம்.


விஷ்ணு கச்சிதம். தடாலடி காதல் சமாசாரங்கள் செய்து அதெல்லாம் மொக்கை ஆவது ஹா ஹா.


நந்திதா முறைக்கிறார் விறைக்கிறார். காதலிக்கிறாரா இல்லையா என்று தெரிவதற்குள் மண்டை காய்ந்து போகிறது.


மீசைக்காரர், வெட்டியான், போலி சாமி, பூனை சூப் பார்ட்டி, என்று எல்லா பாத்திரங்களும் மனதில் பதிகின்றன.


செத்தவனுக்குப் பதிலாக மத்தவனை ஃபோட்டோ எடுத்த மாட்டிக் கொள்ளும் காட்சியும், ஆடு ஒன்றை புகைப்படம் எடுத்து விட்டு, மறுநாள் அது பிரியாணியான பிறகு, சுப்ரமணியா இது? அடையாளமே தெரியலயே? என்று போகிற போக்கில் சொல்வதும் புன்னகை மழை. ஆனால் சில காட்சிகள் ஜவ்வுமிட்டாய்!


பீரியட் படம் என்பதால் இசை, ராஜாவை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. கேமரா என்றாலே பதறும் கிராமத்தை சங்கரின் கேமரா அழகுபடுத்தியிருக்கிறது.


முண்டாசுப்பட்டி - புன்னகைப் பெட்டி!


குமுதம் ரேட்டிங் - ஓகே


-------------------------------------------------------------------கல்கி சினி விமர்சனம்முண்டாசுப்பட்டி மூடநம்பிக்கை நிறைந்த பட்டியாய் இருப்பதாகப் படம் தொடங்குகிறது. சாராயம் குடித்தவர்கள் செத்துப் போய்க் கிடக்க, வெள்ளைக்காரர் யதேச்சையாக போட்டோ எடுத்ததால் இறந்து போய் விட்டனர் என்று நம்புகிறார்கள் மக்கள். அதே சமயம் கொள்ளை நோயால் பலர் இறக்க, போட்டோ எடுத்தால் இறந்து விடுவோம் என்று நம்பி "யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என்று முடிவு செய்கிறார்கள்.


வானில் இருந்து விழும் விண்கல் ஒன்றை மக்கள் வானமுனி என்று வணங்குகிறார்கள். அந்தக் கல் கனிம வளங்கள் நிறைந்து இருக்கிறது என்பதை வெள்ளைக்காரர் கண்டுபிடித்து குறிப்பெழுதி வைத்துவிட, அந்தக் குறிப்புகளோடு கோமளபட்டி ஜமீன் ஆனந்த்ராஜ் அதைத் திருட திட்டமிட, கதை சுவாரஸ்யப்படுகிறது.


விஷ்ணுவும், காளியும், பள்ளியில் சென்று போட்டே எடுக்க, அங்கு நந்திதா மட்டும் "போட்டோ எடுக்க மாட்டேன் என ஓடி ஒளிய, நந்திதாவை விஷ்ணு காதலிக்க, நந்திதா முண்டாசுப்பட்டியைச் சேர்ந்தவர் என்ற முடிச்சு போட்டு இயக்குனர் ராம்குமார் சாமர்த்தியமாக திரைக்கதையை நகர்த்துகிறார். மரணம் அடைந்த ஊர்ப் பெரியவரை போட்டோ எடுக்கச் செல்லும் விஷ்ணு அங்கு மீண்டும் நந்திதாவைச் சந்திக்க, நந்திதாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தியால் தவிக்கிறான். பெரியவரை எடுத்த போட்டோ சரியாக வரவில்லை என்று கடைக்கு தீ வைப்பது, அவர்கள் கடை தவிர, பக்கத்துக் கடைகள் தீயில் எரிவது, பின் முனீஸ்காந்த ஆக சினிமா நடிகராக வரும் ராமதாஸை வைத்து போட்டோ எடுத்து அதுதான் ஊர் பெரியவர் என்று நம்ப வைக்க, அங்கு வரும் முனீஸ்காந்த் தன்னை ஏமாற்றி, இறந்த சித்தப்பா போல போட்டோ எடுத்து விட்டனர் என்று சொல்ல, அவர்களுக்கு தண்ணீர் வரும் வரை கிணறு தோண்டும் தண்டனை தருகிறார்கள்.


அதன் பின் கனிம வளம் நிறைந்த கல்லைத் திருடினார்களா? விஷ்ணுவும், காளியும் முண்டாசுப்பட்டியில் இருந்து தப்பினார்களா? என்று விறுவிறுப்போடு படம் செல்கிறது. படம் முழுக்க காமெடி திருவிழா. விஷ்ணுவுக்கு அலட்டர் இல்லாமல் முதன்முதலாக காமெடியில் அமர்க்களப்படுத்தியுள்ளார். பாஸ் மார்க் வாங்குகிறார்.


அவருடன் வரும் காளி சோடாபுட்டி கண்ணாடியில் டைமிங் பஞ்ச் பேசி கைதட்டல் வாங்குகிறார். நந்திதா கிராமத்து அழகானப் பெண்ணாக ரெட்டை ஜடையுடன் வந்து மருள மருள விழிப்பதும், கதையுடன் ஒன்றிப் போய் நடித்துள்ளார்.


படத்தின் கலர் 1980 காலகட்டத்துக்கு செம பொருத்தம். கலை இயக்குனர் கோபி ஆனந்துக்குப் பாராட்டுக்கள். அவரோடு கரம் கோர்த்து ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்ர் படத்தின் கதைக்கு உயிரூட்டியுள்ளார்.


ஷான் ரோல்டனின் இசை நன்றாக உள்ளது.


சினிமாவில் நடிக்க அலையும் ராமதாஸ்தான் படத்துக்கு உயிர்நாடியே. அந்த கேரக்டர் ரசிக்க வைக்கிறது. அவர் செய்யும் அலப்பறைகள் சபாஷ் போட வைக்கின்றன. "பூனை சூப் சாப்பிட்டு விஷ்ணுவும், காளியும் வாந்தி எடுக்க, ஆனந்தராஜ் ரசித்துச் சாப்பிட தியேட்டர் கைதட்டல். இயக்குனர் ராம்குமார் இயக்கம், முண்டாசுப்பட்டி மக்கள் அனைவருக்கும் முண்டாசு கட்டி நடிக்க வைத்திருக்கும் ஐடியா என விஷ்ணுவும், காளியும் பைக்கில் செல்ல அவர்கள் வேகத்தை சிறுவன் ஓடி மிஞ்ச விஷ்ணு அப்பாவியாக "நாம அவ்வளவு மெதுவாகவாடா போனோம் என்று சொல்லி நிமிடத்துக்கு நிமிடம் காமெடியில் ரசிக்க வைத்துள்ளார்.
முண்டாசுப்பட்டி - லாஜிக் பார்க்காமல் சிரிக்கலாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

முண்டாசுப்பட்டி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in