புரியாத புதிர்,puriyatha puthir

புரியாத புதிர் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

விஜய் சேதுபதி - காயத்ரி ஜோடி, சற்று நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடிக்க, ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் தங்க மீன்கள், தரமணி" படங்களில் இயக்குனர் ராமின் உதவியாளராக இருந்த ரஞ்ஜித் ஜெயக்கொடியின் இயக்கத்தில், முதன்முதலாக வந்திருக்கும் திரைப்படம் தான் "புரியாத புதிர்".

இசை பொருட்கள் விற்பனையகத்தில் நிர்வாகியாக வேலை பார்க்கும் கதிர் - விஜய் சேதுபதிக்கு, அவரது இசை விற்பனையகத்திற்கு இசைக்கருவி ஒன்றை வாங்க வரும் மீரா - காயத்ரி மீது காதல் வருகிறது. காயத்ரிக்கும் அப்படியே காதல் கண் சிமிட்ட, இருவரும் ஒருத்தருக்கொருத்தர் லவ்வை சொல்லிக் கொள்ளாமலே லவ்வுகின்றனர்.

இந்நிலையில் காதலி மீரா - காயத்ரி, குளிக்கும்போதும், உடை மாற்றும் போதும் எடுக்கப்பட்ட ஆபாச புகைப் படங்களும், வீடியோக்களும் காதலன் விஜய்சேதுபதியின் மொபைலுக்கு வாட்ஸ் - அப்பில் வருகின்றன. அது கண்டு, அந்த படங்களை எடுத்து அனுப்பும் அயோக்கியன்? யார்..? என கண்டுபிடிக்க ஆக்ஷ்னில் குதிக்கும் விஜய் சேதுபதிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு சேர அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவை என்ன? ஏது..? என்பது தான் "புரியாத புதிர்" படத்தின் கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம். ஆனால் அவை கொஞ்சமே கொஞ்சம் புரியாத புதிராக ஆங்காங்கே ரசிகனை படுத்துவது தான் சற்றே பலவீனம்.

மற்றபடி கதிராக, கதாநாயகராக விஜய் சேதுபதி வழக்கம் போலவே தன் பாத்திரத்தை அசால்ட்டாக செய்திருக்கிறார். அதிலும் காதலியை காப்பாற்ற, கொட்டும் மழையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நிர்வாணமாக நிற்பதில் தொடங்கி, க்ளைமாக்ஸில் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொள்ளும் காதலியை காப்பாற்ற ஒடி ஆடி போராடுவது வரை.... சகலவிதமான நடிப்பிலும் சதம் போட்டிருக்கிறார்... மேலும், "சுவாரஸ்யம் மட்டும் வாழ்க்கை இல்ல... நிம்மதியாகவும் வாழணும்..." என்றெல்லாம் அவர் பேசும் யதார்த்த "பன்ச்"களும், "சபாஷ் சேது" என ரசிகனை கூவ விடுகின்றன... என்றால் மிகையல்ல ...!

நாயகி மீராவாக வரும் காயத்ரிக்கு இப்படக் கதைப்படி, நாயகர் விஜய் சேதுபதியைக் காட்டிலும் வல்லிய ரோல். அதை விஜய் சேதுபதிக்கு ஈடு கொடுத்து நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகி காயத்ரியின் வாய் வழியாகவே அடிக்கடி தேவதை என வர்ணிக்கப்படும் மிருதுளா - மஹிமா, கொஞ்ச நேரமே வந்து கொடூரமான முடிவைத் தேடிக் கொண்டாலும் ரசிகனின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்.

காமெடிக்கு அர்ஜுன், புரியாத புதிராக வந்து பொது மக்களிடமும் போலீஸிடமும் அடி வாங்கி போகும் ரமேஷ் திலக், கோவை இசைக் கல்லூரி முதல்வர் பெராரே, மிருதுளா - மஹிமா வின் சந்தேக புத்தி... உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.

பவன்ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பில் ரமேஷ் திலக் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் புரியும்படி கோர்க்கப்பட்டிருந்தால் புரியாத புதிர் சாமான்ய ரசிகனுக்கும் சுலபமாக புரிந்திருக்கும். ஆனால், அவ்வாறு இல்லாதது குறை.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் ஒரு குறையுமில்லை. சாம்.சி எஸ்.ஸின் இசையில், "நீ தாங்க மாட்டாய் எனத் தெரியம் பெண்ணே....", "மழைக்குள்...", "இருக்கும் களத்தில்..." உள்ளிட்ட பாடல்கள் கதைக்கேற்ற கருத்தாழமிக்க பாடல்கள். அதனால், அதனால் (அவற்றால்...) ரசிகனை பெரிதாக ஈர்க்க முடியாதது பலவீனம். ஆனாலும் பின்னணி இசையில் சாம், தன் சவுண்டால் மிரட்ட முயன்றிருக்கிறார். பேஷ், பேஷ்!

ரஞ்சித் ஜெயக்கொடியின் எழுத்து, இயக்கத்தில் மீரா வசிக்கும் அவ்வளவு பெரிய ப்ளாட்ல வாட்ச்மேன்களே இல்லாமல் இருப்பது, ரமேஷ் திலக்கின் பாத்திரம் காயத்ரியின் செட்-அப்பா? அல்லது யதேச்சையாக கதை ஓட்டத்தில் வரும் பாத்திரமா...? அப்படியென்றால், விஜய் சேதுபதியை நிர்வாணமாகச் சொல்லி மிரட்டும் ஆண் குரல் யாருடையது? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இப்படத்தில் விடை இல்லாமல் இருப்பது... உள்ளிட்ட இன்னும் சில, பல லாஜிக் மிஸ்டேக்குகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாது, தவிர்த்துவிட்டு, "நாம் ஒன்றை இழக்கும் வரை மற்றொருவரின் இழப்புடைய வலி நமக்கு தெரிவதில்லை....", "இந்த உலகமே அடுத்தவங்க பெட்ரூம எட்டி பார்க்குறதிலதான்டா குறியா இருக்கு... நீங்களும் அப்படி தான்டா..." என்பது உள்ளிட்ட தத்துவார்த்த வசனங்களுக்காகவும், படம் முழுக்க பரவி, விரவிக் கிடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லருக்காகவும், "புரியாத புதிர் - திரைப்படத்தை புரிந்து கொண்டால்... ரசிக்கலாம்! ஒரு முறை பார்க்கலாம்!

 

பட குழுவினர்

புரியாத புதிர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓