தினமலர் விமர்சனம் » பெஷாராம் (இந்தி)
தினமலர் விமர்சனம்
கலகலப்பான ரன்பீர்; கலக்கும் காமெடி ஜோடியாக ரிஷிகபூர் - நீத்துகபூர்; தொய்வில்லாத திரைக்கதை; அழகுப் பதுமையாக புது நாயகி... ‘ஜிவ்’வென்று ‘காக்டெய்ல்’ போதையேற்றுகிறது... அபினவ்சிங் காஷ்யப்பின்... பெஷாராம்.
அநாதையான பப்லிக்கு (ரன்பீர் கபூர்) சுவையான லாலிபாப்பும் பிடிக்கும். சொகுசு கார்களைத் திருடுவதும் பிடிக்கும். காரை விற்ற பணத்தைக் கொண்டு, தான் வளர்ந்த அனாதை ஆசிரமத்தை பராமரிக்கிறான் அவன். காவல் அதிகாரி சுல்புல் சவுதாலாவும் (ரிஷிகபூர்), கான்ஸ்டபிள் புல்புல் சவுதாலா (நீத்து கபூர்) குழந்தையற்ற கணவன் - மனைவி. தாரா (புதுமுகம் பல்லவி சாரதா), பப்லியின் மனம் கவர்ந்தவள். வங்கி அதிகாரியாக இருக்கும் தாரா, பப்லியின் காதலை ஏற்க மறுக்கிறாள். பப்லியால், தாராவின் கார் கடத்தப்படுகிறது. ஒரு சூழலில்... தன் தவறை உணரும் பப்லி, காரை மீட்க தாராவுடன் சண்டிகர் புறப்படுகிறான். பீம்சிங் சண்டிலிடம் (ஜாவேத் ஜெஃப்ரி) இருந்து மீட்டு வரும் காருடன், ஹவாலா பணமும் சேர்ந்து வருகிறது. பீம்சிங் துரத்த சுல்புல் உதவியை நாடுகிறான் பப்லி. பீம்சிங் தண்டிக்கப்பட்டானா? பப்லி காதல் என்னவானது? என்பது க்ளைமாக்ஸ்.
ரிஷி - நீத்து ஜோடி பட்டையைக் கிளப்புகிறது. எதற்கும் கவலைப்படாத பப்லி பாத்திரத்தில் ரன்பீர் கபூர் சூப்பர். அறிமுக நாயகி பல்லவி சாரதா, இன்னொரு பிரியங்கா சோப்ரா. காமெடி வில்லன் வேடத்தில் ஜாவேத் ஜெஃப்ரி புது அனுபவம்! லலித் பண்டிட்டின் இசையில், எல்லாமே உற்சாகப் பாடல்கள். ‘‘பெஷாராம்...’’ என்ற முதல் பாட்டில் ஆடும் எல்லோருமே ரன்பீராக இருப்பது கிராஃபிக்ஸின் உச்சம். ‘‘உனக்கு அப்பா இல்லை. எனக்கு பி்ள்ளை இல்லை’’ என்று வருத்தப்படும் ரிஷி, கடைசியில் ரன்பீரையே தத்து எடுத்துக் கொள்வது டச்சிங்.
தவம் செய்திருக்கிறார்... காஷ்யப்! வரமாக கிடைத்திருக்கிறது... வெற்றி!
மொத்தத்தில் ‘பெஷாராம்’ - ‘பேஷ்’ராம்
ரசிகன் குரல்: பல்லவி சாரதா தமிழுக்கு வரணும்ங்கறது என் ஆசை! உனக்கெப்படி மச்சி?----------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ ஒரு கார் திருடன். ஒரு கார் மட்டும் தான் திருடுவானா?ன்னு கேட்கக்கூடாது. கிடைச்ச கார் எல்லாம் திருடுவாரு. ஹீரோயின் ஒரு பெரிய கம்பெனியோட ”சின்ன “ மேனேஜர் . அவர் ஆசை ஆசையா ஒரு புதுக்கார் வாங்கறாரு. இதுக்கு மேல திரைக்கதை எப்படிப்போகும்னு சின்னக்குழந்தை கூட சொல்லிடும் , இதோ இப்போ நான் கூட சொல்லப்போறேன் பாருங்க .
ஹீரோயின் கார்னு தெரியாம ஹீரோ அவரோட காரை திருடி வித்துடறாரு .ஹீரோயினை எதேச்சையா ரோட்ல ஹீரோ பார்க்கறாரு. பார்த்ததும் லவ். பின்னாலயே சுத்தறாரு. ஹீரோயின் கம்பெனிக்கே போய் ஐ லவ் யூ சொல்றாரு. ஹீரோயின் ஆஃபீஸ்ல எல்லாருக்கும் முன்னால அவரை அவமானப்படுத்திடறாரு .பொதுவா பொண்ணுங்க எவ்வளவு அவமானப்படுத்தினாலும் ஆம்பளைங்க குறிப்பா காதல்ல விழுந்த ஆம்பளைங்க அதை கண்டுக்கவே மாட்டாங்க, பொருட்படுத்தவே மாட்டாங்க.
ஹீரோயினோட அம்மாவுக்கு உதவி செஞ்சு அவர் மனசுல ஹீரோ இடம் பிடிக்கறாரு. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க , ஃபிகரை கரெக்ட் பண்ண முதல்ல மாமியார் கிட்டே நல்ல பேர் வாங்கனும். ஒரு டைம் ஹீரோயின் முகம் இலியானா மனசு மாதிரி வாடிப்போய் இருக்க, என்ன காரணம்னு ஹீரோ ( வருங்கால ) மாமியார் கிட்டே விசாரிக்கும்போதுதான் கார் திருடு போன மேட்டரும், அந்தக்காரை நாம தானே ஆட்டையை போட்டோம்கறதும் ஹீரோவுக்கு நினைவு வருது .
வாங்க நாம அந்தக்காரை கண்டு பிடிக்கலாம்னு ஹீரோ தன் ஜீப்ல ஹீரோயினைக்கூட்டிட்டுப்போறார். பின் பாதி முழுக்க ஜீப் ட்ராவல் தான். இந்தபயணத்துல பஞ்சும், நெருப்பும் எப்படிப்பத்திக்குது என்பதுதான் திரைக்கதை.
ஹீரோ பர்பி ரன்பீர் கபூர். இவர் துள்ளலான நடிப்பு படத்துக்கு பெரிய பிளஸ் . இவர் மவுன ராகம் , கோபுரவாசலிலே கார்த்திக் மாதிரி பல சீன்களில் பட்டாசைக்கிளப்பினாலும் , சில காட்சிகளில் எஸ் ஜே சூர்யா மாதிரி வரம்பு மீறிட்டே இருக்கார் . ஹீரோயினை படு கேவலப்படுத்துறார் . பெண்ணியவாதிகள் கவனிக்க . இதுல சோகம் என்னான்னா அவர் அப்படி பெண்களை அவமானப்படுத்தும் சீன்களில் பெண்களே கை தட்டுறாங்க . ரஜினி படங்களில் ஹீரோயினை அவர் டீஸ் பண்ணும்போது ரசிகைகள் கிளாப்ஸ் அடிப்பது மாதிரி .
இதுல பெரிய கொடுமை என்னான்னா ஹீரோவுக்கு ஒரு கேவலமான குளியல் காட்சியும் உண்டு , இதுவரை வந்த இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆண் குளியல் காட்சி வந்ததே இல்லை . அந்த சீன்களில் தியேட்டரில் காலேஜ் கேர்ள்ஸ் எல்லாம் கூச்சல் போட்டு ரசிப்பது பெண்களுக்கு எந்த அளவு சுதந்தரம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கு இந்த நாடுன்னு தோணுது .
ஹீரோயின் பல்லவி ஷர்தா . சர்தான் போம்மா அப்டின்னு சொல்லத்தோன்றும் ரொம்ப சாதாரண முகம். தமிழர்களுக்கு அவ்வளவு எளிதில் வசீகரிக்காத நீள் வட்ட முகம் . அவருக்கு நடிப்பே வர்லை.
அப்பா,அம்மா,பிள்ளை மூவரும் நடித்து வரும் முதல் படம் பேஷரம் தானோ? என்று பேர் வாங்க வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்கள் தான் ரிஷி கபூர்,நீது சிங், இருவரும் .ரன்பீர் கபூர் -ன் பெற்றோர் . இந்த லட்சணத்துல காலம் போன காலத்துல இவங்களுக்கு ரொமான்ஸ் காட்சிகள் வேற முடியல.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. ஹீரோயின் கவனத்தைக் கவர அவர் இருக்கும் ஏரியாவில் சலூன் கடை வாசலில் சேர் போட்டு ஷேவிங்க் பண்ணும் காட்சி செம காமெடி . நடை முறை சாத்தியம் இல்லை என்றாலும் ரசிக்க வைக்கிறது .
2. ஹீரோ தன் நண்பனின் சாக்சை தன் பேண்ட்டுக்குள் வெச்சிருந்து எடுத்துத்தருவதும் , நண்பர் அதை துவைச்சே கொடு என்பதும் நாஸ்தியான ரசனை உள்ள மட்டக்காமெடி ரகம் என்றாலும் ஆடியன்ஸ் அதை ரசிக்கறாங்க
3 க்ளைமாக்ஸ் பாட்டு டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட விதமும் நடன இயக்குநரின் உழைப்பும் ஒன்று சேர்ந்து கலக்கி எடுத்திருக்காங்க. அவங்களுக்கு ஒரு ஷொட்டு
4 திரைக்கதை செம ஜாலியாக போர் அடிக்காமல் இளசுகளைக்கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருபதால் இது மினிமம் கேரண்டி படம்
இயக்குநரிடம் சில கேள்விகள் 1. கார் திருடனாக வரும் ஹீரோ ஓப்பனிங்க் சீன்ல கார் திருடி போலீசால் சேஸ் செய்யப்படும் காட்சி படு அபத்தம் . ஒரு தொழில் முறை திருடன் கார் திருடியதும் முதல் வேலையாக கையோடு கொண்டு வந்த மாற்று நெம்பர் பிளேட்டை போட்டுட்டு அடுத்த கட்டமா கார் பெயிண்ட் கலரை மாற்றுவார் . அந்த பேசிக் நாலெட்ஜ் கூட அவருக்கு இல்லையே ?
2. ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல புருஷன் , பொண்டாட்டி 2 பேரும் இன்ஸ்பெக்டராக , ஏட்டாக இருக்கவே முடியாது . சட்டத்தில் அதுக்கு இடம் இல்லை . இதுல மட்டும் எப்படி அந்த ஜோடி ஸ்டேஷன்ல ஒண்ணா ஒர்க் பண்றாங்க? அதே போல் ஒரு இன்ஸ்பெக்டர் அவர் பிறந்த ஊர், அல்லது நீண்ட காலம் வாழ்ந்த ஊரில் டியூட்டி பார்க்க முடியாது , சட்டம் அதை அனுமதிக்காது
3 ஹீரோ பாத்ரூம்ல குளிக்கும்போது க்ளீன் ஷேவ் முகத்தோட இருக்கார் , குளிச்சுட்டு கார்ல ஏறும்போது அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடியோட இருக்கார் . அவருக்கு அவ்வளவு சீக்கிரமாவா முடி வளரும், அய்யகோ.
4 மாஸ்க் போட்டு ஓடும் சேசிங்க் சீன் எல்லாம் ஜிம் கேரி படங்களில் இருந்து சுட்டது , எடுபடலை
5 க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோவின் ஃபிரண்டை கட்டிப்போட்டு மிரட்டிட்டு இருக்கும்பொது லேண்ட் லைன் ஃபோன் அடிக்கடி ரிங்க் ஆகுது . ஒவ்வொரு டைமும் வில்லன் அந்த ரிசீவரை எடுத்து தனியா வைக்கறார். எதுக்கு டைம் வேஸ்ட் ? ஒயரை கட் பண்ணிட்டா மேட்டர் ஓவர் . அந்த காட்சி ரொம்பவே எரிச்சல்
6 ஹீரோ லாக்கப்ல . ஹீரோயின் போலீஸ் கிட்டே வந்து ரூ 25,000 கொடுத்தாலே விட்டுடுவாங்க . சாதா கேஸ் தானே ? போலீஸ் மார்க்கட் ரேட்டே தெரியாம ஏன் அள்ளிக்குடுக்கறார் ? அதுவும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் ?
7 கோடிக்கணக்கான பணம் அந்த போலீஸ் வீட்டில் இருக்கு . அவங்களை திசை திருப்பி ஆட்டையைப்போட ஹீரோ பிளான் போடறாரு . கல் எடுத்து ஜன்னல் உடைக்கறாரு . சாதா மூளைக்கே டவுட் வரும் , போலீஸ்க்கு டவுட் வராதா? அந்த பணத்தை பாதுகாப்பா ஒரு இடத்துல வெச்சு பூட்டிட்டுத்தானே அந்த போலீஸ் கிளம்பனும் , அப்படியா பெப்பரப்பேன்னு விட்டுட்டுப்போவாங்க ?
மனம் கவர்ந்த வசனங்கள் 1. உன்னால இந்த வேலையை செய்ய முடியலைன்னு பணத்தை ரிட்டர்ன் பண்ணிட மாட்டியே? டீலிங்க் முடிக்கறனோ, இல்லையோ பணத்தை ரிட்டர்ன் தர்ற பழக்கமே நமக்கு கிடையாது.
2. என்னை ஃபாலோ பண்றதை நிறுத்து. நான் எங்கே உங்க பின்னால வந்தேன் ? எதிர்ல தானே வந்தேன்?
3. நீ எதுக்காக எனக்கு உதவி செய்யனும் ? நான் உனக்காக செய்யலை, ஆண்ட்டிக்காக.
4. தப்பு செய்யும்போது அதை கண்டிக்கவோ, சுட்டிக்காட்டவோ பெரியவங்களோ, பெற்றோரோ இல்லைன்னா யாரா இருந்தாலும் தப்பு செய்வாங்க.
5. வண்டியைத்திருப்பு, என் வண்டில ரிவர்ஸ் கீயரே கிடையாது, நோ யூ டர்ன். ஹா ஹா!
சி பி கமெண்ட் - மும்பை ஏரியாக்களில் இது ஹிட் ஆகிடும். படம் போர் அடிக்காம போகுது . BESHARAM -ஜாலி லவ் ஸ்டோரி. பையா டைப் கார் ட்ராவலிங் லவ் - ரன்பீர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.