Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

பாண்டிய நாடு

பாண்டிய நாடு,Paandiya Naadu
07 நவ, 2013 - 13:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாண்டிய நாடு

தினமலர் விமர்சனம்


மதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.

அமைச்சர் (மத்திய அமைச்சரா...? மாநில அமைச்சரா...?) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.

இந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா? பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா? எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்!

விஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே! அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே!

டீச்சர் பாப்பா - லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி!

பாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

விஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் - சூரி, சோமசுந்தரம் - நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் - பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

கிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் - சூப்பரிந்திரன்!

ஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு - பலே நாடு என சொல்ல வைக்கின்றன!


------------------------------------------------------------------


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


வழக்கம் போல வில்லன் ஒரு தாதா. ஹீரோவோட அண்ணன் ஒரு கல்குவாரி பிரச்னையில வில்லனுக்கு குறுக்கே வர்றார். தற்செயலா நடந்த விபத்து மாதிரி செட் பண்ணி வில்லன், ஹீரோவோட அண்ணனை போட்டுத்தள்ளிடறாங்க. ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். ரொம்ப பயந்த சுபாவம். ஆல்ரெடி தன் நண்பன் ஒருத்தன் கூட சேர்ந்து மறைமுகமாக வில்லனை எதிர்க்கிறார். நண்பனையும் வில்லன் கொன்னுடறான். இப்போ ஹீரோ பழி வாங்கணும். ஆனா இவர் ஒரு சாதா ஆள். அதனால பிளான் பண்ணி வில்லனைப்போட்டுத்தள்ளமுயற்சிக்கிறார்.

ஹீரோவோடஅப்பா வீட்டுக்குத்தெரியாம ஒரு ரவுடியை செட் பண்ணி வில்லனை தீர்த்துக்கட்ட பிளான் போடறார். வில்லனுக்கு ஹீரோ அப்பாவை அடையாளம் தெரிஞ்சுடுது. இப்போ ஹீரோ தன் அப்பாவையும் காப்பாற்றி, வில்லனையும் போட்டுத்தள்ளணு. இதை எப்படி செஞ்சார் என்பதே மிச்ச மீதிக்கதை. இந்த ஆக்சன் பிளாக் எல்லாம் லேடீஸ்க்கு ஒத்து வராது என்பதால் ஓப்பனிங்க்ல ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்.

ஹீரோவாக புரட்சித்தளபதி விஷால். இது அவருக்கு சொந்தப்படம், எஸ் தயாரிப்பாளரும் இவரே. எல்லா விஷால் படங்களையும் போலவே இதிலும் இவர் பயந்த சுபாவம் உள்ள, அப்பாவியான பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம் உள்ள ஆள். பின்பாதியில் இவர் போடும் ஃபைட் காட்சிகள் பொறி பறக்குது. டாய், டூய் என கத்தல்கள் ஏதும் இல்லாமல், பஞ்ச் டயலாக்ஸ் ஏதும் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

ஹீரோயின், லட்சுமிமேனன். ஹீரோவுடன் இவர் குறும்புப்பேச்சு பேசும் காட்சிகள் அழகு. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் செயற்கையான உற்சாகமும், பொருந்தாத குத்தாட்ட ஸ்டெப்பும் மைனஸ். ஆனால் இவர் தன் உடலை வெளிப்படுத்தாமல் அணியும் உடைகள், கேமரா கோணம் எப்படி வைத்தாலும் கண்ணியம் மாறாத தோற்றம் தரும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரம்.

பாரதிராஜா ஜீன்ஸில் கம்பீரமாக வருபவர் கதாபாத்திரத்தின் தன்மை கருதி இதில் சாதா நடுத்தர அப்பாவாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனின் இறப்புக்கு கதறும் காட்சியில் அழுகை நடிப்பு அற்புதம்.

வில்லனாக வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி இருக்கிறார். மிரட்டலான தோற்றம். விக்ராந்த் சில சீன்கள் வந்தாலும் நல்லா பண்ணி இருக்கார். புரோட்டா சூரி, ஹீரோவுக்கு நண்பனாக வந்து 6 காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

சி.பி.கமெண்ட் : பாண்டியநாடு - அண்ணனைக்கொன்ற ரவுடியைப்பழி வாங்கும் மாமூல் கதை. முன் பாதி சுமார், பின் பாதி ஸ்பீடு. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு.




-----------------------------------




குமுதம் விமர்சனம்



மதுரைப் பக்கத்து கதை என்றால் தமிழ் சினிமாவில் என்ன இருக்கும்?

பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் அளிக்கவும்!

அரிவாள், கத்தி, ரத்தம், கொலை, பயந்த ஹீரோ, தாதா வில்லன், பழிக்குப் பழி.

இந்தப்படமும் அதே ரத்தத்துக்கு ரத்தம் கதைதான்.

பயந்த சுபாவம் உள்ள விஷாலின் அண்ணனை கிரானைட் குவாரி வில்லன் போட்டுத் தள்ளிவிட, சாது ஒன்று பூதமாகப் புறப்பட்டு அந்த வில்லன் அண்ட் கோ-வை பூண்டோடு, மிளகாயோடு காரசாரமாக அழித்து துவம்சம் செய்வதுதான் பாண்டியநாடு.

சில பல சொதப்பல்களுக்குப் பிறகு மெதுவாய்த் தலை நிமிர்ந்திருக்கிறார் விஷால். சொந்தப் படம் என்பதால் தேவையில்லாத பில்டப், பிஞ்சு போகும் பஞ்ச் டயலாக் என்றெல்லாம் இல்லாமல் ரொம்ப நீட்! காதல், பாசம் என்று அடக்கி வாசிக்கிறார்.

சாதாரண பழிவாங்கும் கதை என்றாலும் ட்ரீட்மென்டில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

லட்சுமிமேனன், விஷாலுக்கு ரொம்பப் பொருத்தம். தன் காதலைச் சொல்லும் போதும், வண்டியில் லிஃப்ட் கேட்கும்போதும் க்யூட்.

மிடில் க்ளாஸ் அப்பாவாக பாரதிராஜா. 100 பேருக்கு நடிப்புக் கற்றுத்தந்த அவரை சும்மா பத்தோடு பதினொன்றாக வைத்திருக்கிறார்களே என்றுதான் முதலில் ஆதங்கம் உண்டாகிறது. ஆனால் மகன் இறந்தபிறகு வீட்டை அடமானம் வைத்து, அந்தப் பணத்துடன் வில்லனைக் கொல்ல கூலிப்படையை அவர் அணுகும்போதுதான் சிங்கம் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது புரிகிறது.

சூரியின் பச்சை சட்டைக் காதல், வேடிக்கை.

தாதா பதவியை யார் பிடிப்பது என்ற காட்சிகள் தெரியாமல் வந்து சிக்கிவிட்டோமோ என்று பயத்தை ஏற்படுத்துகிறது.

சண்டைக் காட்சிகள் எரிமலை! அதுவும் பாரதிராஜாவை ஒரு வண்டியில் கிடத்திக்கொண்டு அடைசலான ஓர் இடத்தில் வண்டியுடன் விஷால் ஓடும் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

தீபாவளியும் அதுவுமாய் படத்துக்குப் போனால் ஆரம்பக் காட்சியே எழவு வீடு, மைக்கில் ஒப்பாரி வைக்கும் கிழவிகள், டெட்பாடி என்று தேவையே இல்லாமல் மங்களகரமான காட்சிகள்! என்ன ரசனையோ?!

ஃபை, ஃபை பாடலும் லட்சுமி மேனனின் குத்தாட்டமும் ஹிஹி ஃபைன்!

யார் அந்த வில்லன்? ஹாரிஸ் ஜெயராஜும், கவுதம் வாசுதேவ் மேனனும் கலந்த மாதிரியான கெட்டப்பில் வித்தியாசம் காட்டுகிறார்.

கரண்ட் இல்லாத நேரத்தில் மொட்டை மாடியில் பொடுசுகள் லவ்ஸ் விடுவதும், தாத்தா ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதும் கலகல.

மொத்தத்தில் பாண்டியநாடு - யுத்ததேசம்

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in