தினமலர் விமர்சனம்
'மலையன்' பட இயக்குநர் எம்.பி.கோபி அடுத்து இயக்கி, வெளிவந்திருக்கும் திரைப்படம், 'அங்காடித்தெரு' மகேஷூடன், கஞ்சா கருப்பும் ஒரு கதாநாயகராகவும் நடித்து, தயாரிப்பாளராகியிருக்கும் திரைப்படம், இது எல்லாவற்றிருக்கும் மேல் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத தண்ணீர் பிரச்னையை தீர்க்க உதவும் போர்வெல் மிஷின் வண்டியை பின்னணி களமாக கொண்ட படம்... இப்படி ''வேல்முருகன் போர்வெல்ஸ்'' படம் பற்றிய எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் அடுக்கி கொண்டே போகலாம். அதில் எத்தனை எதிர்பார்ப்புகளை ''வேல்முருகன் போர்வெல்ஸ்'' திரைப்படம் போரடிக்காமல் பூர்த்தி செய்திருக்கிறது... என்பதை இங்கு பார்ப்போம்...
கஞ்சா கருப்பு வயிற்றை கட்டி வாயை கட்டி அந்த வானம் பார்த்த சீமை ஏரியாவில் வாங்கி விட்டிருக்கும் வண்டி தான் ''வேல்முருகன் போர்வெல்ஸ்'' அந்த வண்டியின் டிரைவர் கம் போர்மென் ஹீரோ மகேஷ், அவருடன் சக ஊழியர்கள் பிளாக் பாண்டியில் தொடங்கி கிளி மூக்கு, வெங்கல்ராவ் உள்ளிட்ட ஐந்து பேர். இவர்கள் ஐந்துபேரும், மகேஷின் காதலுக்கு உதவி செய்யபோய், கஞ்சா கருப்பு அவரது கொழுந்தியா கல்யாணத்திற்காக ஆத்திரா சென்றிருக்கும் போது போர்வெல் வண்டியும், ஹீரோ மகேஷ் உள்ளிட்ட ஆறுபேரும் ஹீரோயின் ஆருஷி ஊரில் சிறை பிடிக்கப்படுகின்றனர். விஷயம் ஆந்திராவில் இருந்து திரும்பியபின் கஞ்சா கருப்புவின் காதுக்கு போகிறது. போர்வெல் வண்டிக்காக பட்ட கடனை அடைக்க முடியாத கஞ்சா, வண்டியை மீட்டு கொண்டுவர கிளம்பி வருகிறார், வந்த இடத்தில் அவரும் சிறை பிடிக்கப்பட, அதன்பின் என்ன.? ஆருஷி - மகேஷின் காதல் நிறைவேறியதா.? எனும் கதையுடன் சமயோஜிதமாக அந்த ஊருக்கு வரும்பெரும் ஆபத்தை இவர்கள் தங்கள் போர்வெல் வண்டி உதவியுடன் தடுக்கும் காட்சிகளையும் கலந்து கட்டி பக்காவாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் கோபி!
இயக்குநரின் எண்ணத்தை உள்வாங்கி கொண்டு 'அங்காடித்தெரு' மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, ஐடி. அரசு வெங்கட்ராவ், ஓ.ஏ.கே.சுந்தர், கிளிமூக்கு நடிகர் உள்ளிட்ட எல்லோரும் பளிச்சென்று நடித்திருக்கின்றனர். மகேஷின் நண்பர்களில் ஒருவர் மட்டும் மிரள மிரள நடித்திருப்பதும், இத்தனை காமெடியர்கள் நிரம்பிய படத்தில் காமெடி காட்சியே இல்லாததும் பலவீனம்!
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், பாடல்கள் பலே சொல்ல வைக்கின்றன. சாலை சகாதேவனின் ஒளிப்பதிவும் பெரிய ப்ளஸ்!
எம்.பி.கோபியின், எழுத்து-இயக்கத்தில் போர்வெல் வண்டியும், அதன் ஊழியர்களும் சிறை பிடிக்கப்பட்ட ஊருக்கு போலீஸ் வராதா எனும்.? கேள்வி எழுந்தாலும் ''வேல்முருகன் போர்வெல்ஸ்'' - தேவையில்லாமல் போரடிக்காதது ஆறுதல்!