தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛லவ் டுடே'. இதை ஹிந்தியில் ‛லவ் பயா' என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாகவும், ஸ்ரீதேவியின் இளையமகள் குஷி கபூர் நாயகியாகவும் நடித்துள்ளனர். வரும் பிப்., 7ல் இந்தப்படம் திரைக்கு வருகிறது. மீடியாக்களை சந்தித்த ஜுனைத் கான் அளித்த பேட்டி...
* இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்?
தமிழ் படத்தின் ‛லவ் டுடே' ரீ-மேக்கை வைத்திருப்பதாகவும், அதை பார்க்க சொல்லி தயாரிப்பாளர்கள் என்னிடம் சொன்னார்கள். நானும் பார்த்தேன், பிடித்திருந்தது, வித்தியாசமாகவும் இருந்தது. என்னை வைத்து படம் தயாரிக்க அவர்கள் உறுதியாக இருந்ததால் நானும் நடித்தேன்.
* குஷி கபூர் உடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
குஷி உடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவரின் எண்ணமும் ஒத்திருந்தது. நாங்கள் இருவருமே அமைதியானவர்கள் அதிகம் பேசக்கூட மாட்டோம். எனக்கு நினைவிருக்கிறது, படத்தின் இயக்குனர் அத்வைதா உடன் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தபோது நாங்கள் பேசவே இல்லை. படப்பிடிப்பு ஒத்திகையின்போது தான் எங்களுக்குள் நட்பு உருவானது, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம், படத்திலும் அப்படியே பணியாற்றினோம்.
* அப்பா அமீர்கானுக்கு படம் பிடித்ததா, உங்களுக்கு டிப்ஸ் எதுவும் தந்தாரா?
அப்பாவுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது, என் வேலையையும் ரசித்தார். அதனால் தான் இந்த படத்தின் டிரைலரை அவர் வெளியிட்டார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எங்களுடன் அவரும் வந்து படத்தை விளம்பரம் செய்தார். அப்பாவிடம் நிறைய ஆலோசனை பெற்றுக் கொள்வேன். அதேசமயம் என் முடிவுகளை நான் தான் எடுப்பேன். அதற்கான முழு சுதந்திரத்தையும் அவர் வழங்கி உள்ளார்.
* அப்பா போல் தேர்ந்தெடுத்த படங்களில் நடிப்பீர்களா இல்லை நிறைய படங்களில் நடிப்பீர்களா?
தேர்ந்தெடுத்த படங்களில் அல்ல நிறைய படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். 2021ல் மகாராஜ் படம் செய்தேன். அதன்பின் சில ஆண்டுகள் எனக்கு எந்த படமும் இல்லை. 2023ல் இந்த படம் ஆரம்பமானது. 2024 எனக்கு நன்றாகவே இருந்தது. இந்தாண்டு எனது இரு படங்களான லவ் யபா மற்றும் ஏக் தின் ஆகியவை வெளியாக உள்ளன. ஏக் தின் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு ஜுனைத் கான் தெரிவித்தார்.