Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமா களத்தில் சிவாஜி வாரிசுகள்...! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

15 ஆக, 2012 - 10:28 IST
எழுத்தின் அளவு:

நாடக அரங்குகளில் தன் நடிப்பை பட்டை தீட்டிக்கொண்ட வி.சி.கணேசன், பராசக்தி படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவக்கினார். வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். கடவுள்களையும், சரித்திர சாதனையாளர்களையும் தமிழ் மக்களின் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி தமிழ் சினிமா சரித்திரத்தில் பெரும் பக்கங்களை தன் சாதனைகளால் நிரப்பினார். அவருக்கு பின்னால் நடிப்புலகில் அவர் பெயர் சொல்ல யார் என்ற கேள்வி எழுந்தபோது அவரது மகன் பிரபு வந்தார். ஆரம்பத்தில் சிவாஜிக்கு தன் வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வருவதில் அத்தனை விருப்பம் இல்லை. மூத்த மகன் ராம்குமாரை சிவாஜி பிலிம்சின் நிர்வாகத்தை மட்டுமே கவனிக்கச் செய்தார். இளைய மகன் பிரபுவை போலீஸ் அதிகாரியாக்கி பார்க்கும் ஆசை கொண்டிருந்தார். ஆனால் காலம் பிரபுவை சினிமாவுக்கு அழைத்து வந்தது.

இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அப்போது சங்கிலி என்ற படத்தை துவக்கி இருந்தார். அது ஒரு இந்திப் படத்தின் தழுவல், சிவாஜிக்கு சமமான பவர் கொண்ட ஒரு இளம் கேரக்டர் தேவை. அப்போதைய சில இளம் ஹீரோக்களை யோசித்து அவர்களின் போட்டோக்களுடன் சிவாஜியை சந்தித்தார் ராஜேந்திரன். சிவாஜி போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்தப் பக்கம் வந்தார் பிரபு. அப்போது சி.வி.ராஜேந்திரன் "அண்ணே நம்ம தம்பிய நடிக்க வச்சா என்ன?" என்று கேட்டிருக்கிறார் ராஜேந்திரன். அப்போது பெரிதாக சிரித்த சிவாஜி "அவன் போலீசாகணும்னு உடம்ப வளர்த்துக்கிட்டிருக்கான் அவனைப்போயி அப்பனை மாதிரி அரிதாரம் பூசச்சொல்ற சரி என்னமோ பண்ணிக்கோ" என்றாராம்.

பிரபு சங்கிலி படத்தில் அறிமுகமானார். அப்பாவுக்கே சவால், அவருடன் சண்டை என்று படம் பட்டையை கிளப்பியது. அதற்கு பிறகான பிரபுவின் வளர்ச்சி அபாரமானது. ஹீரோவாக 100 படங்களைத் தாண்டி இப்போது அடுத்த ரவுண்டிற்கு வந்து விட்டார். தென்னிந்திய மொழிகளின் முக்கிய கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளில் ஒருவராகிவிட்டார். ஒரு படத்தில் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜியின் மேனரிசம், அவரின் குரல், என்று மீண்டும் தனது படங்களின் மூலம் சிவாஜியை தரிசிக்க வைத்தார் பிரபு.

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். அவருக்கு சினிமாவில் நடிப்பதில் அத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அவரை அறுவடைநாள் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஜி.எம்.குமார். அந்தப் படம் வெற்றி பெற்றதும் இனி ராம்குமாரும் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த ராம்குமார். பின்னர் நடிப்பதை கைவிட்டார். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடித்து வருகிறார். அவரது வெள்ளை தலைமுடி, கனத்த உருவம், சிவாஜியை பிரதிபலிக்கும் முகம் ஆகியவை ஷங்கரை கவர்ந்திருக்கலாம். ஐக்கு பிறகு ராம்குமார் பெரிய அளவில் சினிமாவில் வலம்வரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிவாஜி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையும் நடிப்பில் கால் பதித்தது. அப்பா ராம்குமாரைப் போலவே அவர் மகன் துஷ்யந்த்துக்கும் நடிப்பு ராசியில்லாமல் போனது. சக்சஸ் என்ற படத்தில் ஆர்ப்பாட்டமாக அறிமுகமானார் துஷ்யந்த். ஆனால் ஏனோ அதன் பிறகு பெரிதாக நடிக்கவில்லை. ஒருவேளை தந்தைக்கு தற்போது நல்ல ரீ எண்ட்ரி கிடைத்திருப்பதைப்போல அவருக்கும் நாளைக்கு ஒரு வாய்ப்பு அமையலாம்.

ராம்குமார்-மீனா(ஸ்ரீப்ரியாவின் சகோதரி) தம்பதிகளின் மகன் ஜூனியர் சிவாஜி என்ற பெயரில் சிங்ககுட்டி படத்தில் அறிமுகமானார். மகனை ஹீரோவாக்க அம்மா மீனாவே தயாரித்த படம் இது. சிவாஜியின் பேரன் எனக் குறிப்பிட்டு வாலி ஓப்பனிங் சாங்கூட எழுதியிருந்தார். அந்தப் படம் வெற்றிபெறாமல் போகவே ஜூனியர் சிவாஜியின் சினிமா எதிர்காலமும் கேள்விக்குறியாக இருந்தது. இப்போது புதுமுகங்கள் தேவை, நந்தனம் படங்கள் மூலம் மீண்டும் வருகிறார். ஜூனியர் சிவாஜி என்ற பெயரை சிவாஜிதேவ் என்று மாற்றியிருக்கிறார்.

சிவாஜியின் வாரிசாக, அன்னை இல்லத்தின் செல்லக் குழந்தையாக இருந்த பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கும்கி படத்தின் மூலம் அதிரிபுதிரியாக அறிமுகமாகிறார். விக்ரமுக்கும் ஆரம்பத்தில் நடிப்பு மீது பெரிதாக ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் எம்பிஏ படித்தார். திடீரென அவருக்கு ஆர்வம் வர அமெரிக்காவிலேயே நடிப்பு, இயக்கம் படித்தார். அதன் பிறகு சென்னை வந்து அப்பாவிடம் ஆசையைச் சொன்னார். மகன் அறிமுகம் நல்ல  இயக்குனரிடம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் பிரபு. பாலா, அமீர், மணிரத்னம், ஷங்கர் இவர்கள்தான் அவர் மனதில் இருந்த இயக்குனர்கள். இதற்கிடையில் மைனா பெரும் வெற்றி பெற பிரபுவின் பட்டியலுக்குள் வந்தார் பிரபுசாலமன். லிங்குசாமி தயாரிக்க அவர் இயக்கும் கும்கி படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருப்பதை அறிந்த பிரபு தன் மகனின் போட்டோக்களை அவருக்கு அனுப்பினார். அன்னை இல்லத்திலிருந்து அடுத்த வாரிசை அள்ளி வந்து விட்டார் பிரபுசாலமன்.

சிவாஜி குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையும் இப்போது சினிமா களத்தில் குதித்திருக்கிறது. காலத்துக்கேற்ற மாற்றங்களை புரிந்து கொண்ட தலைமுறை இது. அதனால்தான் விக்ரம்பிரபு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகாமல் முதல் படத்திலேயே அழுக்கான ஒரு யானைப்பாகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது நெருங்கிய நண்பன் யானை. யானைக்கு இன்னொரு பெயர் (சிவாஜி)கணேசன். நாளை விக்ரம் பிரபு மகனும் நடிக்க வரலாம். ராம்குமார் பேரனும் நடிக்கலாம். அன்னை இல்லம் என்கிற அமுதசுரபி சினிமா இருக்கும் வரை நடிகர்களை தந்து கொண்டிருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)