மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
எம்ஜிஆர் நடித்த வெளிவந்த மாபெரும் வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமான படம் 'அன்பே வா'. ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையைமப்பில் இந்தப் படம் ஜனவரி 14, 1966ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன், டிஆர். மகாலிங்கம், நாகேஷ், மனோரமா, முத்துலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
எம்ஜிஆரை வைத்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரே படம், எம்ஜிஆரை வைத்து ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய ஒரே படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
இந்தப் படம் வழக்கமான எம்ஜிஆர் படம் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்தது. பொதுவாக, எம்ஜிஆர் அவருடைய கதாபாத்திரத்தை ஏழைக் கதாபாத்திரமாகவோ, அல்லது மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரமாகவோகத்தான் வைத்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் அவர் ஒரு பணக்காரராக நடித்திருப்பார். அதோடு, எம்ஜிஆர் படங்களில் இருக்கும் வழக்கமான சென்டிமென்ட்டான தாய், தங்கை, தந்தை சென்டிமென்ட் எதுவுமே படத்தில் கிடையாது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..' பாடலை யாராலும் மறக்கவே முடியாது. கிராஃபிக்ஸ் எல்லாம் இல்லாத காலத்திலேயே ஒரே இடத்திலேயே மிகவும் அழகான ஒரு பாடலைப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். ஒரே ஒரு ரிக்ஷாவைத்தான் அந்தப் பாடலுக்காக அவர் பயன்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து எம்ஜிஆர், திருலோகச்சந்தரை தனக்காக படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டும், சிவாஜி நடித்த படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கியதால் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படத்தைத்தான் அவரால் இயக்க முடிந்தது.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் வாங்கிய சம்பளம் 3 லட்சம், சரோஜாதேவி வாங்கிய சம்பளம் 90 ஆயிரம் ரூபாய். இப்படத்தின் படப்பிடிப்பு, சிம்லா, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முதல் கலர் படம் இதுதான். படத்திற்கான மொத்த செலவு 30 லட்ச ரூபாய், வசூலான தொகையோ 60 லட்ச ரூபாயாம். இந்தப் படத்தை வெள்ளி விழா வரை திரையரங்கில் ஓட்டாததால் ஏவிஎம் நிறுவனத்திற்கும், எம்ஜிஆருக்கும் மனக் கசப்பு வந்து, அதன் பின் அவர் ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
1966ம் ஆண்டில் மட்டும் எம்ஜிஆர் நடித்த 9 படங்கள் வெளிவந்தன. “பெற்றால்தான் பிள்ளையா, பறக்கும் பாவை, தனிப் பிறவி, தாலி பாக்கியம், முகராசி, சந்திரோதயம், நாடோடி, நான் ஆணையிட்டால், அன்பே வா” ஆகியவைதான் அந்த 9 படங்கள். அதில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது 'அன்பே வா' படம் மட்டும்தான்.
'அன்பே வா' படத்தின் கதையும் மிகவும் சுவாரசியமான ஒன்றுதான். மிகப் பெரும் பணக்காரரான எம்ஜிஆர் ஓய்வெடுப்பதற்காக அவருடைய சிம்லா பங்களாவிற்குச் செல்வார். ஆனால், அங்கு அவருடைய பங்களாவின் வேலையாளான நாகேஷ், சரோஜாதேவி குடும்பத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்த பங்களாவை வாடகைக்கு விட்டிருப்பார். தன்னை முதலாளி என்று காட்டிக் கொள்ளாமல், அதே பங்களாவில் மற்றொரு அறையில் எம்ஜிஆர் தங்குவார். அதன் பின் எம்ஜிஆரும், சரோஜாதேவியும் சந்தித்துக் கொள்ள இருவரது சந்திப்புக்களும் மோதலாகவே தொடரும். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும், அவர்களது வீண் சண்டையால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலே இருப்பார்கள். அதன் பின் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் காதல் மன்னனாகவே உலா வந்திருப்பார், அதோடு நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார். அவருக்கு ஈடு கொடுத்து சரோஜா தேவியும் அழகாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அவருடைய கொஞ்சம் கிளிப் பேச்சு ரசிகர்களை அதிகமாகவே கட்டிப் போட்டது.
நாகேஷ், மனோரமா, டிஆர்.ராமச்சந்திரன், முத்துலட்சுமி ஆகியோரின் நகைச்சுவையும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
ரஜினிகாந்தை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் இந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். சிம்லாவின் அழகை ஒளிப்பதிவாளர் மாருதிராஜ் அழகாகப் படமாக்கியிருப்பார். ஆரூர்தாசின் வசனம் இந்தப் படத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்று.
இந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே மிகவும் இனிமையான பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களைப் பாடியிருந்தார்கள்.
“அன்பே வா...., அன்று வந்ததும்..., லவ் பேர்ட்ஸ்..., நான் பார்த்ததிலே..., ஏ...நாடோடி..., புதிய வானம்..., ராஜாவின் பார்வை...” ஆகிய இனிமையான பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்தப் படம் 1963ம் ஆண்டில், ராக் ஹட்சன், ஜினா லொல்லோபிகிடா நடித்து, ஹாலிவுட்டில் வெளிவந்த 'கம் செப்டம்பர்' என்ற படத்தின் மூலக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு படம்.
இன்று பொன்விழா ஆண்டில் நுழையும் 'அன்பே வா' படம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மட்டும் மறக்க முடியாத படமல்ல, திரையுலக ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படம்தான்.