ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தமிழ் திரையுலகில் மற்ற நடிகர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு எம் ஜி ஆருக்கு எப்போதும் இருப்பதுண்டு. அவரது திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பிற்கும், பாடல்களுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு முதன்மையானதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாக படத்தில் இடம் பெறும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற திடமான எண்ணம் உடையவர்தான் எம் ஜி ஆர்.
தான் பேசும் வசனம் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களை நல்வழிப்படுத்தி, பண்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டக் கூடியவராக இறுதிவரை கடைபிடித்து, தனது கலையுலகப் பயணத்தில் முழு வெற்றியையும் பெற்ற எம் ஜி ஆரின் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம்தான் “தாய் சொல்லைத் தட்டாதே”.
1956ம் ஆண்டு “தாய்க்குப் பின் தாரம்” என்ற ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படத்தை எம் ஜி ஆரை வைத்து தயாரித்திருந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர், தனது “தேவர் பிலிம்ஸ்” சார்பில் எம் ஜி ஆரை நாயகனாக வைத்து தயாரித்த இரண்டாவது திரைப்படம்தான் இந்த “தாய் சொல்லைத் தட்டாதே”. 1961ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இத்திரைப்படம்தான் எம் ஜி ஆருக்காக வசனகர்த்தா ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முதல் திரைப்படம்.
இதற்கு முன்னர் சிவாஜியின் “பாசமலர்” என்ற ஒரு வெள்ளிவிழா திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்திருந்த இவருக்கு, சிவாஜியின் படத்திற்கு வசனம் எழுதியதால் தன்னைப் பற்றி எம் ஜி ஆர் என்ன நினைப்பாரோ என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைந்து கொண்டிருக்கையில், ஒரு நாள் எம் ஜி ஆருக்கு வசனத்தைப் படித்துக் காட்டு என படத்தின் தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் அவரிடம் சொல்ல, ஆரூர்தாஸூம் எம் ஜி ஆருக்கான வசனத்தைப் படித்துக் காண்பித்தார்.
அந்த வசனம், “எங்க அப்பா இறந்ததுக்கப்புறம் எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுத்துக்கிறது வழக்கம் இல்லை, பொதுவா கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுணம்னு சொல்லுவாங்க, ஆனா நான் விடிஞ்சதும் முதலில் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதுனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம்! அந்த தாய் சொல்லைத் தட்டமாட்டேன்” என எம் ஜி ஆர் பேசி நடிக்க வேண்டிய வசனத்தை ஆரூர்தாஸ் படித்துக் காட்டியதும், உடனே எம் ஜி ஆர் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டு என அவரைப் பார்த்துக் கூற, ஆரூர்தாஸ் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டியவுடன், நீங்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவரா? என்று எம் ஜி ஆர் அவரைப் பார்த்துக் கேட்க, அவரும் ஆம் என பதில் தந்திருக்கின்றார்.
தாயைப் பற்றி நீங்க எழுதியிருக்கின்ற இந்த வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்கு பொருந்துகின்றது. இது எனக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கு. என் தாய்தான் எனக்கு தெய்வம். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என கூறியதைத் தொடர்ந்து அவரது பல வெற்றித் திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பினையும், அவரது அன்பினையும் பெற்றவரானார் ஆரூர்தாஸ். 1961ம் ஆண்டு நவம்பர் 7 அன்று, தீபாவளி வெளியீடாக வந்த “தாய் சொல்லைத் தட்டாதே” திரைப்படம் 100 நாள்களுக்கும் மேல் ஓடி, பெறும் வெற்றியை பெற்றுத் தந்தது “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்திற்கு.