உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் 1960ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானார். 1962ல் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1977ல் தெலுங்கு, வங்காளம், கன்னட திரைப்படங்களில் நடித்தார். 1981ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
மிகச்சிறந்த நடிகராக விளங்கும் கமல்ஹாசன் பின்னணி பாடகர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ஹேராம், விருமாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி டைரக்டர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கமல், தனது நிறுவனம் சார்பில் ராஜ பார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், உன்னைப் போல் ஒருவன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.
களத்தூர் கண்ணம்மா, மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளையும், 18 பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.