இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு மகள் சாரா, மகன் அர்ஜுன் என இரு குழந்தைகள். மூத்த மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டருக்குப் படித்துள்ளார். டாக்டருக்குப் படித்து முடித்திருந்தாலும் சாராவுக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் கனவாம்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்பவர்களுக்கு அது நன்றாகவே புரியும். அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார் சாரா.
24 வயதான சாரா விரைவில் ஹிந்திப் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதற்காக அவர் நடிப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளாராம். தங்களது மகள் விருப்பத்திற்கு பெற்றோர் சச்சின், அஞ்சலி எந்தத் தடையும் சொல்லவில்லையாம்.
ஏற்கெனவே சாரா ஹிந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அப்போது அதை சச்சின் மறுத்தார். தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். இப்போது சாரா அறிமுகமாவது பற்றிய செய்திகள் மீண்டும் வெளிவந்துள்ளன. விரைவில் சாரா அறிமுகமாக உள்ள படம் பற்றிய தகவல் வெளியாகலாம் என்கிறார்கள்.