இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ‛இந்திய திரைப்பட ஆளுமை' விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த 18-ம் தேதி அறிவித்தார். அதில், பிரபல பாலிவுட் நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் பிரபல பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், கோவாவில் 52வது சர்வதேச திரைப்பட விழா இன்று (நவ.,21) துவங்கியது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இதன் துவக்க விழாவில் நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகிய இருவருக்கும் ‛இந்திய திரைப்பட ஆளுமை விருது' வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இயக்குனர் கரண் ஜோகர், நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.