தமிழகமெங்கும் ஆக்ஷன் - ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியீடு செய்ய, லீப் புரடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் சுஜீத் ஸ்டீபனோஸ் தயாரிப்பில் பினேஷ் ராஜ் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வெளி வந்திருக்கும் படம் தான் "இலை".
தன் மகள், சாதனை பெண்மணிகளின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும்... எனும் லட்சியத்தோடு மகளை படிக்க வைக்கிறார் திருநெல்லி கிராமத்து ஏழை விவசாயி அப்பா. பத்தாங் கிளாஸ் படிக்கும் மகளும், அப்பாவின் லட்சியத்தையே தன் லட்சியமாக கொண்டு படி, படி... என படித்தபடியே இருக்கிறார்.
வீட்டு வேலை, வேறு வேலை... எதுவும் செய்யாது படி, படி... என படிக்கும் மகள் மீது பெற்ற தாயும், தாய் மாமன் மற்றும், நண்டு, சிண்டு... உடன்பிறப்புகள் இரண்டு... உள்ளிட்ட உறவும், ஊர் பெரிய மனிதரும் கொள்ளும் கோப, தாபங்களைத் தாண்டி அந்த ஏழை விவசாயின் செல்ல மகள் படித்து சாதித்தாரா? இல்லையா..? என்பது தான் "இலை" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
இலை எனும் டைட்டில் நாயகியாக, டாக்டர் ஸ்வாதி நாராயணன், தான் புதுமுகம், அறிமுகம் என்பது தெரியாத அளவிற்கு தன்னை ரொம்பவே வருத்திக் கொண்டு படித்திருக்கிறார், நடித்திருக்கிறார். சபாஷ்!
நாயகி இலைக்கு தாலி கட்டுவது ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, அதற்கு இடைஞ்சலாக இருக்கும் இலையின் அப்பாவான தன் அக்கா புருஷனை அடித்து தூக்கவும் திட்டம் வகுத்து தந்து விட்டு பின் நல்லவராகும் தாய்மாமன் மணிகண்டனும், இப்படத் தயாரிப்பாளருமான சுஜித் ஸ்டீபனோஸ்., எக்குத்தப்பான தோறத்துடன் எக்கச்சக்கமாக நடித்திருக்கிறார்.
இலையின் ஏழை விவசாயி அப்பா மாரிமுத்தாக டாக்டர் கிங்மோகன், பிரகாஷ்ராஜ் சாயலில் இருந்து கொண்டு அவர் மாதிரியே பிரமாதமாக நடித்து, பாதியில் மகளை அம்போ என விட்டுப் போகும் போது ரசிகனை அய்யோ என கதற விடுகிறார்.
நாயகியின் தாய் ராமாயியாக வரும் ஸ்ரீதேவி அனில், மல்லி அக்கா - தேவு, நாயகியின் தம்பி அன்பாக வரும் அஸ்வின் சிவா, குட்டித் தங்கை பேபி ஜினியா, அந்த பிட் மாணவி சித்ரா, மகளின் கெளரவத்திற்காக எதையும் செய்யும் அவரது பண்ணையார் அப்பா.. உள்ளிட்டோரும் கச்சிதம்.
"குடலு கூழுக்கு அழுதுச்சாம், கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்...", "அசிங்கத்தை கழுவலாம் அறுவெறுப்பை எப்படிக் கழுவ முடியும்?" , "கட்டைய சுட்டே கரி மிஞ்சல.. தலை முடிய சுட்டா கரி மிஞ்சும்..?", "சட்டத்துக்கிட்ட மறைச்சா தப்ப முடியாது.. அதே, ஒத்துக்கிட்டா ஈஸியா தப்பிச்சுடுலாம்.." எனும் வேலுமணியின் வசனங்கள் இப்படத்திற்கு கூடுதல் பலம்.
டிஜோ ஜோசப்பின் படத்தொகுப்பு தான் இயக்குனர் பேச்சைக் கேட்டு பெருவாரியான இழுவை காட்சிகளை கத்தரிக்காமல் விட்டு பாடாவதி தொகுப்பாக பல் இளித்திருக்கிறது பாவம்.
சந்தோஷ் அஞ்சலின் ஒளிப்பதிவு, ஒவியப் பதிவாக மிளிர பெரிதும் உதவி இருக்கும் இப்பட இயக்குனர் பினேஷ் ராஜின், விஎப்எக்ஸ் எபெக்ட்டுகள் கனகச்சிதம்.
விஷ்ணு வி.திவாகரனின் இசையில், "இலை..." , "என் ஆச அப்பாவே..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் சுபராகம்.
பினேஷ் ராஜின் எழுத்து, இயக்கத்தில், "பொட்ட புள்ளைக்கு படிப்பெதற்கு..." எனும் ஒற்றை வரியை சற்று ஜாஸ்தியாகவே ஜவ்வாக இழுத்து, ஈரானிய கலை படங்கள் ஸ்டைலில் கொஞ்சம் கூடுதலாகவே ரசிகனை படுத்தியிருப்பது தவிர, படத்தில் பெருங்குறை ஏதுமில்லை. ஆனாலும், "உலகத்தின் இருள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஒரு சின்ன தீக்குச்சியின் வெளிச்சத்தை மறைக்க முடியாது" உள்ளிட்ட பொருள் பொதிந்த வசனங்களுக்காகவும், சி.ஜி மற்றும் விஎப்எக்ஸ் வேலை பாடுகளுக்காகவும் இந்த "இலை" யை ஒரு முறை பார்க்கலாம். கொஞ்சம் இழுவைபடுத்தலை பொறுத்துக் கொண்டு ரசிக்கலாம்!
மொத்தத்தில், "இலை - இரண்டு மணி நேர படமென்பது மட்டுமே கொஞ்சம் பெரிய பிழை"