கிளாப்,Clap
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிக் பிரின்ட் பிக்சர்ஸ்
இயக்கம் - பிரித்வி ஆதித்யா
இசை - இளையராஜா
நடிப்பு - ஆதி, க்ரிஷா குருப், ஆகான்ஷா சிங்
வெளியான தேதி - 11 மார்ச் 2022 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்கள் இப்படித்தான் இருக்கும், என்ற ஒரு வரையறையை ஓடிடி நிறுவனங்களே ஏற்படுத்திவிட்டன. இம்மாதிரியான படங்கள் தியேட்டர்களில் வந்தால் எத்தனை காட்சிகள் தாங்கும் என்பது மிகப் பெரும் சந்தேகம்தான்.

நேற்று ஓடிடியில் வெளியான இரண்டு படங்களில் ஒன்று 'மாறன்', மற்றொன்று 'கிளாப்'. தனுஷ் நடித்த 'மாறன்' படம் ஓடிடி பக்கம் இனி வருவீர்களா என ரசிகர்களை மிரள வைத்துவிட்டது. இந்த 'கிளாப்' படம் ஒரு குறும்படத்திற்கான நீளத்திலேயே முடிக்க வேண்டிய ஒரு படமாக பொறுமையை நிறையவே சோதித்தது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'எதிர்நீச்சல்' படத்தை எல்லாம் இந்த 'கிளாப்' படத்தின் இயக்குனர் பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. 'எதிர்நீச்சல்' படத்தின் கதைக் கருவை அப்படியே கதாபாத்திரங்களை மாற்றி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இதில் கமர்ஷியல் ஐட்டங்கள் எதுவும் கிடையாது.

ஓட்டப்பந்தய வீரராக வரவேண்டும் என்ற ஆசையை சிறு வயது முதலே கொண்டவர் ஆதி. மாநில அளவிலான போட்டியில் வென்ற பின் விபத்தில் தனது வலது காலை இழக்கிறார், தனது அப்பாவையும் பறிகொடுக்கிறார். அதன்பின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தனது அப்பாவிற்குப் பதிலாக வேலையில் இணைகிறார். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி அடங்காத ஆதி, மாநில அளவில் 400 மீ ஓட்டப்பந்தய போட்டியில் வென்ற க்ரிஷா குருப்-- பை தேசிய அளவிலான போட்டிக்குத் தயார்படுத்த நினைக்கிறார். ஆனால், அவரது மேலதிகாரிகளின் அரசியலால் கஷ்டப்படுகிறார். கடைசியில் தான் நினைத்ததை சாதித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முற்றிலும் சீரியசான ஒரு படம். ஆதியின் வீடு, அலுவலகம், ஒரு மைதானம் என குறுகிய வட்டத்திற்குள் படத்தை முடித்துவிடுகிறார் இயக்குனர். இதற்கு முன் இம்மாதிரியான சில ஸ்போர்ட்ஸ் படங்களைப் பார்த்திருக்கிறோம். இப்படத்தில் புதிதாக எதையும் இயக்குனர் சேர்க்கவில்ல.

அத்லெட்டாக சாதிக்க வேண்டும் என்ற ஆதியின் ஆசையில், விபத்தால் பேரிழப்பு ஏற்படுகிறது. காலை இழந்தாலும் தனது ஆர்வத்தை அவர் இழக்கவில்லை. தன்னால் முடியாத ஒன்றை வேறொருவரை வைத்து சாதிக்க நினைக்கிறார். காலை இழந்த துயரம் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்த அந்தக் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.

படத்தில் ஆதியின் மனைவியாக ஆகான்ஷா சிங் நடித்திருந்தாலும், ஆதி பயிற்சி தரும் க்ரிஷா தான் படத்தின் நாயகி என்று சொல்ல வேண்டும். நிஜமான அத்லெட் போல நடித்திருக்கிறார் க்ரிஷா. கிராமத்து அப்பாவிப் பெண்ணை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

க்ளிஷேவான வில்லனாக நாசர், ஆரம்பத்தில் கொஞ்ச நேரமே வரும் பிரகாஷ்ராஜ் சீனியர் நடிகர்களாக படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

உணர்வுபூர்வமாக இருக்கும் சில காட்சிகளில் இளையராஜாவின் இசை இதமளிக்கிறது. ஓரிரு பாடல்கள் மட்டுமே படத்தில் இருந்தாலும் மனதில் பதியவில்லை.

விளையாட்டு ஆணையங்களில் இருக்கும் அரசியலை சொல்லியிருக்கிறார்கள். ஒரு திறமைசாலியால் அவ்வளவு அரசியலையும் மீறி சாதிக்க முடியும் என்பதை இன்னும் விறுவிறுப்பாய் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம்.

கிளாப் - மெதுவான ஓட்டம்

 

கிளாப் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கிளாப்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓