Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

லவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)

லவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்),Love Action Drama
09 செப், 2019 - 14:51 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » லவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)

நடிகர்கள்: நிவின்பாலி, நயன்தாரா, அஜு வர்கீஸ், வினித் சீனிவாசன், பிரஜின், சுந்தர் ராமு, மொட்ட ராஜேந்திரன், சீனிவாசன், ரஞ்சி பணிக்கர், மல்லிகா சுகுமாரன், துர்கா கிருஷ்ணா, தன்யா பாலகிருஷ்ணன் மற்றும் பலர்
இசை: ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு: ஜோமோன் ஜான் மற்றும் ரோபி வர்கீஸ் ராஜ்
டைரக்சன்: தயன் சீனிவாசன்

தமிழில் உருவாகியுள்ள மலையாள படம் என்று சொல்லும் அளவிற்கு சென்னையை காதைக்களமாக கொண்டு, 80% தமிழில் படம் பார்க்கும் உணர்வை தரும் விதமாக உருவாகியிருக்கிறது இந்த 'லவ் ஆக்சன் ட்ராமா'. காதலர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, ஈகோ மோதல் இவற்றை மையமாக வைத்துத்தான் இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. இதில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தயன் சீனிவாசன்..? பார்க்கலாம்

சென்னையில் தங்களுடன் வேலை பார்க்கும் தோழி துர்கா கிருஷ்ணா திருமணத்திற்காக கேரளா வருகிறார்கள் நயன்தாரா மற்றும் அவரது பட்டாளம். சொந்த மாமன் மகள் துர்கா கிருஷ்ணாவை காதலித்து அது கைகூடாத விரக்தியில் கல்யாண வீட்டில் சுற்றி வருகிறார் நிவின்பாலி. இந்த சமயத்தில் உனக்கென ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என்று நயன்தாரா, நிவின்பாலிக்கு ஆறுதல் கூறப்போக, அதையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சென்னை வரைக்கும் நயன்தாராவை துரத்திக் கொண்டே வந்துவிடுகிறார் நிவின்பாலி.. கூடவே நண்பர் அஜூ வர்கீஸும். நயன்தாராவின் வீட்டிற்கு எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி கொண்டு அவரது மனதில் இடம் பிடிக்க என்னென்னவோ கலாட்டாக்கள் செய்கிறார் நிவின்பாலி.

அவை ஒருகட்டத்தில் காதலில் வெற்றியையும் கொடுக்க, அடுத்து திருமணத்தை நோக்கி நகரும் வேளையில் எதிர்பாராதவிதமாக வில்லன்கள் இருவரின் சதியால் நயன்தாராவின் மீது சந்தேகம் ஏற்படுகிறது நிவின்பாலிக்கு. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட திருமணமே நிற்கும் அளவிற்கு செல்கிறது.. இவற்றையெல்லாம் தாண்டி இந்த காதல் திருமணத்தில் சென்று முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்..

நீண்ட நாளைக்கு பிறகு நிவின்பாலிக்கே என அளவெடுத்து தைத்த சட்டை போல கச்சிதமான ஒரு கதாபாத்திரம்.. காதலுக்காக என்னவெல்லாமோ போராட்டம் செய்து அதை அடைவதும் அதன்பிறகு விட்டேத்தியாக எந்நேரமும் மது தான் முக்கியம் என்று காதலை கூட தூக்கி எறிய துடிக்கும் இன்றைய இளைஞனின் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் நிவின்பாலி. நயன்தாராவுக்கும் அவருக்குமான லவ் கெமிஸ்ட்ரியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு யதார்த்தம்.

எங்கேயும் தனது சீனியாரிட்டி வெளிப்பட்டு விடக்கூடாது என கவனமாக, ஒரு காதல் தேவதையாக வலம் வந்திருக்கிறார் நயன்தாரா. காதலன் கோக்குமாக்காக ஏதாவது செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பதும் தன்னிடம் கொடுத்த வாக்கை எல்லாம் அடிக்கடி மீறும்போது ஒரு சராசரி பெண்ணாக குமுறுவதுமாக காமெடி, சீரியஸ் என கலவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.. ஒன்றிரண்டு மலையாள வசனங்களை தவிர படம் முழுதும் தமிழிலேயே பேசியுள்ளார்.

படத்தில் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவிற்கு படம் முழுவதும் நிவின்பாலியுடன் நண்பனாக பயணிக்கும் அஜூ வர்கீஸ், நீண்ட நாளைக்கு பிறகு இந்த படத்தில் தனது பார்முக்கு திரும்பியிருக்கிறார்.. தெரிந்தும் தெரியாமலும் நண்பனின் காதலுக்கு என்னவெல்லாம் சிக்கலைக் கொண்டுவர முடியுமோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை கச்சிதமாக பிரதிபலித்திருக்கிறார்

நயன்தாராவுடனே அவரது இணைபிரியா தோழியாக வரும் தன்யா பாலகிருஷ்ணன் தனது க்யூட்டான நடிப்பால் நம்மை கவர்கிறார்.. கேரளத்து மணப்பெண்ணாக வரும் துர்கா கிருஷ்ணா, அவரது தந்தையாக வரும் ரஞ்சி பணிக்கர், நிவின்பாலியின் அம்மாவாக நடித்துள்ள மல்லிகா சுகுமாரன், நயன்தாராவின் தந்தையாக வரும் சீனிவாசன் என அனைவருமே மிக பாந்தமான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

நரித்தனம் கலந்த வில்லத்தனம் காட்டும் சுந்தர் ராமு மற்றும் பிரஜின் இருவருமே மீடியம் ரேஞ்ச் வில்லன்களாக தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.. கிளைமாக்ஸுக்கு சற்று முன்பு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன். தனது தம்பி தான் இயக்குனர் என்பதால் தலைகாட்டி இருக்கிறாரோ என்னவோ..? மொட்ட ராஜேந்திரன் வையாபுரி என தமிழ் முகங்களையும் பார்க்க முடிகிறது

இதுநாள்வரை ஒரு இளம் ஹீரோவாக நடித்து வந்த தயன் சீனிவாசன். இந்தப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக மாறி நிவின்பாலி, நயன்தாரா படங்களில் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை சரியாக பல்ஸ் பிடித்து அதற்கேற்றபடி காட்சிகளை அமைத்திருக்கிறார்.. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நான் ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம் தந்து, முதல் படத்திலேயே வெற்றியையும் தேடிக் கொண்டிருக்கிறார்..

ரசிகர்கள் இதை மலையாள படம் என நினைத்து ஒதுக்கி விடாமல் சென்றால் நேரடி தமிழ் படம் பார்த்த முழு திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ‛லவ் ஆக்ஷன் ட்ராமா' ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் ‛ட்ராமா'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in