நியூயார்க் யுனிவர்சிட்டியில் திரைப்பட கல்வி கற்ற ஹரிதாஸ் இயக்கும் படம்தான் மீண்டும் மீண்டும். இவர் ஏற்கனவே "மூணுல ஒண்ணு' என்ற மலையாள படத்தையும், 8 குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய 8 குறும்படங்களும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருது பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்ற ராஜ் கிருஷ்ணா என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள அஸ்வதா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் நடந்து வருகின்றன.
மீண்டும் மீண்டும் படம் குறித்து அதன் இயக்குனர் ஹரிதாஸ் கூறுகையில் "இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்யவும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யவும் நான் 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். அதன் பிறகே படப்பிடிப்பை தொடங்கினேன். இது வழக்கமான சினிமா அல்ல. இந்த க்ரைம் த்ரில்லர் கதையில் க்ளைமாக்ஸ் வரை அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை அமைத்துள்ளோம். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்பட அனைத்து அம்சங்களும் இதுவரை தமிழில் பார்த்திராத அளவுக்கு புதிய அனுபவத்தைத் தரும், என்றார்.
படத்திற்கு இசையமைப்பவர் ஜவஹர். பாடல்கள் - கவிராஜ். ஒளிப்பதிவு - சூர்யா. படத்தொகுப்பு - இ.எம்.மாதவன். தயாரிப்பு - ட்வென்டி ஃப்ர்ஸ்ட் செஞ்சுரி ஃபிலிம்ஸ்.
- தினமலர் சினி டீம் -