தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக் கலையை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் படம் சரித்திரம். மிருகம் பட சூட்டிங்கில் பத்மப்ரியாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட இயக்குனர் சாமி, தடை நீக்கத்துக்கு பிறகு இயக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கிறார். படத்தில் சிலம்ப வாத்தியாராக நடிக்கும் ராஜ்கிரணுக்கு மகனாக நடிக்கிறார் மிருகம் ஆதி. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகை ஸ்ரீதேவிகா. ராமகிருஷ்ணா படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷ் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் தலை காட்டவிருக்கிறார். ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்கிறார். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
கிராமிய பின்னலுடன் படம் எடுப்பதில் வல்லுனரான இயக்குனர் சாமியின் இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்கிறார்கள் சரித்திரம் பட யூனிட்டார்!
சரித்திரம் குறித்து படத்தின் இயக்குனர் சாமி கூறுகையில், அழிந்து வரும் தமிழனின் தற்காப்பு கலையான சிலம்ப விளையாட்டின் சரித்திரத்தை பற்றி சொல்லும் கதைதான் சரித்திரம். படிக்காத பாமரனிடம் மட்டுமே உள்ள இந்த வித்தையை படித்த கணி பொறியாளர்களிடமும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி இது. அழிந்து வரும் இந்த தமிழனின் கலையை மேலை நாட்டினருக்கும் கொண்டு செல்லும் ஒரு செல்லுலாய்டு பதிவு இது. இனி வரும் தலைமுறையினருக்கு சிலம் பற்றிய ஒரு சிறு குறிப்பு தேவைப்பட்டாலும் இந்த சரித்திரமே சிறந்த ஆவணமாய் இருக்கும், என்றார்.
சிலம்பம் பற்றி அறவே தெரியாத நாயகன் ஆதி, களரி செல்வராஜ் என்ற சிலம்ப ஆசானை வரவழைத்து மூன்று மாதங்களுக்கு மேல் பயிற்சி அளித்தார் என்பது கொசுறு தகவல்.
- தினமலர் சினி குழு -