‛‛ஜாதி மல்லி பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே‛‛ - புலவர் புலமைப்பித்தன் ஒரு பார்வை
08 செப், 2021 - 11:50 IST
கவிஞரும், பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன்(85) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்., சிவாஜி காலம் தொட்டு ரஜினி, கமல் கடந்து இன்றைய தலைமுறை நாயகர்கள் வரை பல நடிகர்களின் படங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். இவரை பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935ல் அக்., 6ம் தேதி கருப்பண்ணன் - தெய்வாணை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ராமசாமி எனும் புலமைப்பித்தன். சிறு வயதிலிருந்தே கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவராக இருந்தார். திருக்குறள் முனுசாமி நடத்திய குறள்மலர் இதழில் "எழு ஞாயிறு" என்ற தலைப்பில் இவருடைய முதல் கவிதை பிரசுரமானது.
எம்ஜிஆர் உடன் புலமைப்பித்தன்(இளம் வயதில்) |
ஒரு பஞ்சாலையில் இரவு நேரப் பணியாளராக பணிபுரிந்து கொண்டே பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தார். அப்போதிருந்தே பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி என்று தன் தமிழை வளர்த்துக் கொண்டார். 1961ல் புலவர் பட்டத்துடன் திருச்செந்தூருக்கு அருகே ஆத்தூர் எனும் ஊரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அந்த சமயத்தில் தன்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரங்களிலும் கலந்து கொண்டார்.
மீண்டும் கோவை திரும்பி அங்கே முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சேர்ந்த சமயத்தில் "இது சத்தியம்" திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடனக்குழுவினர் வழங்கிய நிகழ்ச்சி ஒன்று ஒண்டிப்புதூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார் புலமைப்பித்தன். இயக்குநர் கே சங்கர் முன்னிலையில் நடிகர் அசோகன் தலைமையில் நடந்த அந்த விழாவில் பேசிய புலமைப்பித்தனின்நல்ல தமிழால் மகிழ்ச்சி அடைந்த இயக்குநர் கே சங்கர் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுக்க, சென்னை வந்து சேர்ந்தார் புலமைபித்தன்.
எம்ஜிஆர்., உடன் புலமைப்பித்தன் மற்றும் அவரது குடும்பத்தார். |
மீண்டும் சென்னையில் சாந்தோம் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணி, இடையிடையே படங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு தேடுவதிலும் கவனமாக இருந்து வந்தார். ஒரு நாள் இயக்குநர் கே.சங்கர், புலமைப்பித்தனை தன் காரில் அழைத்துக் கொண்டு குடியிருந்த கோயில் படத்தின் ஒரு பாடல் காட்சியை விவரித்து பலர் பாடல் எழுதியும் திருப்தியாக இல்லாததால் இதற்கு ஏற்ற பாடலை நீங்கள் எழுதி விட்டால் உங்களுக்கு அருமையான எதிர்காலம் உண்டு என்று கூற, அப்படி உருவான பாடல் தான் அப்படத்தில் உருவான நான் யார் நான் யார் நீ யார் என்ற பாடல். இதுவே புலமைபித்தினின் முதல் திரைப்பட பாடலாகும்.
அதன் பின் தொடர்ந்து அடிமைப் பெண், குமரிக்கோட்டம், நினைத்ததை முடிப்பவன், நான் ஏன் பிறந்தேன், பல்லாண்டு வாழ்க என்று எம்ஜிஆரின் படங்களுக்கு பாடல்கள் எழுதி ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை தன் பாட்டுப்பயணத்தை தொடர்ந்த இந்த அற்புத கவிஞர், எம்.எஸ்.விஸ்வநாதன், கே. வி.மகாதேவன், இளையராஜா போன்ற இசை ஜாம்பவான்களின் இசை வார்ப்பில் எண்ணற்ற காவியப் பாடல்களை படைத்திருக்கிறார்.
23ம் புலிகேசி பட வெற்றி விழாவில் ரஜினியிடம் விருது பெற்ற புலமைப்பித்தன். அருகில் சிம்புத்தேவன், வடிவேலு, ஷங்கர். |
எம்ஜிஆர், சிவாஜியைக் கடந்து அடுத்த தலைமுறை நாயகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விக்ரம் என இன்றைய தலைமுறை நாயகர்களுக்கும் தனது தீந்தமிழ் சொற்களால் உயர்ந்த இலக்கிய நயங்களோடு பாக்களை புனைந்தவர் புலவர் புலமைபித்தன். பல பாடல்கள் இன்றும் கேட்கும் ரசிக் உள்ளங்களை கிரங்க வைப்பதோடு, இது கவிஞர் வாலியின் பாடலா அல்லது வைரமுத்துவின் பாடலா என யோசிக்க தூண்டும் அளவிற்கு இளமை துள்ளலோடும், இலக்கியச் சுவையோடும் இசை விரும்பிகள் அனைவரும் அறிந்ததே.
உதாரணத்திற்கு கோயில் புறா" படத்தில் வரும் "வேதம் நீ இனிய நாதம் நீ", "நாயகன்" திரைப்படத்தில் வரும் நீ ஒரு காதல் சங்கீதம், "நீதியின் மறுபக்கம்" படத்தில் வரும் "மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ", "உன்னால் முடியும் தம்பி" படத்தில் வரும் "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு", "அழகன்" திரைப்படத்தில் வரும் "ஜாதி மல்லி பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே", "தங்கமகன்" படத்தில் வரும் "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ", "அண்ணா நகர் முதல் தெரு" படத்தில் வரும் "மெதுவா மெதுவா ஒரு பாடல்", மௌனம் சம்மதம் திரைப்படத்தில் இடம் பெற்ற "கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா" என்று இவரது பாடல்களின் பட்டியல் இன்னும் நீளும்.
நடிகர் கமல்ஹாசன் உடன் புலமைப்பித்தன். |
தமிழக அரசின் சட்ட மேலவையின் துணை தலைவராகவும், அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். எம்ஜிஆர்., திமுக.,வில் இருந்த வரை அந்தக்கட்சியின் பற்றாளராக இருந்த புலமைப்பித்தன், எம்ஜிஆர்., அதிமுக., கட்சியை தொடங்கிய பின்னர் எம்ஜிஆரின் தீவிர பற்றாளராக இருந்தவர். அன்றைய காலத்தில் எம்ஜிஆருக்காக ஏகப்பட்ட பாடல்களையும் இவர் கொடுத்துள்ளார். மறைந்த புலமைப்பித்தனுக்கு தமிழரசி என்ற மனைவியும், புகழேந்தி என்ற மகனும், கண்ணகி என்ற மகளும் உள்ளனர். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதை 4 முறை பெற்றுள்ளார் புலமைப்பித்தன். இவர் மறைந்தாலும் இலக்கிய நயங்களோடு இவர் கொடுத்த பாடல்கள் என்றும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கும்.
புலவர் புலமைபித்தனின் சில தனி மற்றும் ஜோடிப் பாடல்கள் 01. நான் யார் நான் யார் நீ யார் - குடியிருந்த கோயில்
02. எங்கே அவள் என்றே மனம் - குமரிக் கோட்டம்
03. ஓடி ஓடி உழைக்கனும் - நல்ல நேரம்
04. நமது வெற்றியை நாளை சரித்திரம் - உலகம் சுற்றும் வாலிபன்
05. சிக்கு மங்கு சிக்கு மங்கு - உலகம் சுற்றும் வாலிபன்
06. பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
07. ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க
08. பகை கொண்ட உள்ளம் - எல்லோரும் நல்லவரே
09. படைத்தானே பிரம்ம தேவன் - எல்லோரும் நல்லவரே
10. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த - நினைத்ததை முடிப்பவன்
11. நாளை உலகை ஆள வேண்டும் - உழைக்கும் கரங்கள்
12. இந்த பச்சைக்கிளிக்கொரு - நீதிக்கு தலைவணங்கு
13. ஒரு சின்னப் பறவை அன்னையை தேடி - மதன மாளிகை
14. நேருக்கு நேராய் வரட்டும் - மீனவ நண்பன்
15. புதுமை பெண்கள் அழகுப் பெண்கள் - இன்று போல் என்றும் வாழ்க
16. உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
17. பட்டு வண்ண ரோசாவாம் - கன்னிப்பருவத்திலே
18. முத்து முத்து தேரோட்டம் - ஆணிவேர்
19. வேதம் நீ இனிய நாதம் நீ - கோயில் புறா
20. நான் பாடிக்கொண்டே இருப்பேன் - சிறை
21. வென் மேகம் விண்ணில் வந்து - நான் சிகப்பு மனிதன்
22. பாடி அழைத்தேன் உன்னை - ரசிகன் ஒரு ரசிகை
23. எடுத்த சபதம் முடிப்பேன் - ஊர்க்காவலன்
24. அம்மம்மம்மா வந்ததிங்கே - பேர் சொல்லும் பிள்ளை
25. நிலா அது வானுக்கு மேலே - நாயகன்
26. உன்னால் முடியும் தம்பி தம்பி - உன்னால் முடியும் தம்பி
27. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
28. மனமாலையும் மஞ்சலும் சூடி - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
29. ஜாதி மல்லி பூச்சரமே - அழகன்
30. ஆத்தோரத்திலே ஆலமரம் - காசி
31. ஆயிரம் நிலவே வா - அடிமைப் பெண்
32. உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்
33. பொன்னந்தி மாலைப் பொழுது - இதய வீணை
34. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை
35. இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன்
36. நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற - இதயக்கனி
37. இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி
38. சொர்க்கத்தின் திறப்பு விழா - பல்லாண்டு வாழ்க
39. என்ன சுகம் என்ன சுகம் - பல்லாண்டு வாழ்க
40. கொள்ளையிட்டவன் நீதான் - நினைத்ததை முடிப்பவன்
41. சிகப்புக்கல்லு மூக்குத்தி - எல்லோரும் நல்லவரே
42. செண்டு மல்லி பூ போல் - இதயமலர்
43. அழகெனும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன்
44. இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் - நல்ல பெண்மணி
45. ஏரியிலே ஓரு காஷ்மீர் ரோஜா - மதன மாளிகை
46. நால் நல்ல நாள் - பணக்காரப் பெண்
47. வாரேன் வழி பார்த்திருப்பேன் - உழைக்கும் கரங்கள்
48. கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் - மீனவ நண்பன்
49. வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ் - இன்று போல் என்றும் வாழ்க
50. பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே - தீபம்
51. அந்தப்புரத்தில் ஒரு மகராஜா - தீபம்
52. தென்றலில் ஆடும் கூந்தலை கண்டேன் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
53. அமுதோ தமிழில் எழுதும் கவிதை - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
54. இளங்கிளியே இன்னும் - சங்கர்லால்
55. அழகிய விழிகளில் அறுபது கலைகளும் - டார்லிங் டார்லிங் டார்லிங்
56. சந்தத்தில் பாடாத கவிகள் - ஆட்டோ ராஜா
57. தோகை புல்லாங்குழல் - இளஞ்ஜோடிகள்
58. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ - தங்கமகன்
59. தாழம் பூவே - கை கொடுக்கும் கை
60. ஓ... வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
61. மாலைக் கருக்களில் சோலைக் கருங்குயில் - நீதியின் மறுபக்கம்
62. கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு - காக்கி சட்டை
63. மான் கண்டேன் மான் கண்டேன் - ராஜரிஷி
64. வெள்ள மனம் உள்ள மச்சான் - சின்ன வீடு
65. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
66. அந்தி மழை மேகம் - நாயகன்
67. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
68. அடி வான்மதி - சிவா
69. இரு விழியின் வழியே நீயா வந்து போனது - சிவா
70. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - பணக்காரன்
71. தேவ மல்லிகை பூவே பூவே - நடிகன்
72. கல்யாண தேன் நிலா - மௌனம் சம்மதம்
73. மழை வருது மழை வருது குடை கொண்டு வா - ராஜா கைய வச்சா
74. பஞ்சு மெதத கனியே - இம்சை அரசன் 23ம் புலிகேசி