வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை |
பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல் டிஸ்கோ கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்தாண்டு ஆக., 5 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. உடல்நிலை தேறி வந்த நிலையில் செப்., 25ல் மறைந்தார். அவரது மறைவு மொழி தாண்டி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எஸ்.பி.பி. இல்லாமல் அவரின் 75வது பிறந்தநாள் இன்று(ஜூன் 4) கொண்டாடப்படுகிறது.
அவரின் பிறந்தநாளில் அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946ல் ஜுன் 4ல் -எஸ்.பி.சாம்பமூர்த்தி என்பவருக்கு மகனாக தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். காளகஸ்தியில் எஸ்எஸ்எல்சியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் பியுசியும் முடித்து, ஜேஎன்டியு காலேஜ் ஆப் என்ஜினியரிங்கில் பி.இ படிப்பதற்காக சேர்ந்தார். உடல் நிலை பாதிப்பால் படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து ஏஎம்ஐஇ பிரிவில் சேர்ந்து படித்தார்.
இசை பயணம்
1968 ஆம் ஆண்டு நடந்த அனைத்து கல்லூரி போட்டியில் இவர் பாடிய பாடலைக் கேட்ட மறைந்த ஓவியர் பரணி, இவரை இயக்குநர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைக்க, அவர் மூலம் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனை சந்தித்து, அவரிடம் சில பாடல்களை பாடி காட்டியிருக்கிறார் எஸ்.பி.பி. தமிழ் தெரியுமா என்று எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்பிபி.,யைப் பார்த்து கேட்க தனக்கு பேசத் தெரியும் படிக்க தெரியாது என்று கூறியிருக்கின்றார்.
அதன் பின் எம்எஸ்விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த "சாந்தி நிலையம்" திரைப்படத்தில் பி.சுசிலாவுடன் இணைந்து இயற்கை என்னும் இளைய கன்னி... என்ற பாடலை பாடி தமிழ் திரையுலகின் பின்னணி பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இவர், பாடிய முதல் தமிழ் பாடல் "சாந்தி நிலையம்" படத்தில் என்றாலும் முதலில் வெளிவந்தது அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற ‛ஆயிரம் நிலவே வா படப் பாடல் தான். எப்படி எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரு டிஎம்.சௌந்தர்ராஜனோ. அதுபோல் அடுத்த தலைமுறை கதாநாயக நடிகர்களான ரஜினி, கமல்ஹாசனுக்கு இவருடைய குரலே மிகப் பொருத்தமானதாக மாறியது.
பன்முகத் தன்மை வாய்ந்த இந்தப் பாடகர் பாடல்கள் மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என அனைத்திலும் முத்திரை பதித்த ஒரு சாதனையாளர். "சிகரம், கேளடி கண்மணி, குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், ரட்சகன், பிரியமானவளே" போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்பிற்கு சான்றாகவும், ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "துடிக்கும் கரங்கள்" மற்றும் இவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த "சிகரம்" என்ற இந்த இரு திரைப்படங்களையும் இவருடைய இசையமைப்பிற்கு சான்றாகவும் கூறலாம்.