பல வருடங்களுக்கு முன்பு குடியின் தீமையை விளக்கி 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' என்று ஒரு படம் வந்தது. இப்போது அதையே தன் வாழ்வில் ஒரு அங்கம் என சொல்லியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கி உள்ள படம் 'பாட்டல் ராதா'. இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் நடித்துள்ளனர். வரும் 24ம் தேதி படம் ரிலீசாகிறது. இதை முன்னிட்டு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் மிஷ்கின் பேசியதாவது : சினிமாவில் அதிகமாக குடித்தவனும் நான்தான், குடித்துக் கொண்டிருப்பவனும் நான்தான், அதிகமாக குடிக்க இருப்பவனும் நான்தான். இதை சொல்ல எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு சாரயமே காய்ச்சத் தெரியும், சினிமாவை விட அந்த டெக்னாலஜியை நான் அதிகம் கற்றிருக்கிறேன்.
மன வருத்தம் அடைந்தவர்கள் மது அருந்துகின்றனர். பிறகு அதற்கு அடிமையாகின்றனர். அவர்களை அவமரியாதை செய்வது தவறு. அவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். நான் குடிகாரன் என்றாலும், எப்போதும் குடி என்னை அடிமையாக்கியது இல்லை. எனக்கு வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. குடிபோதையைவிட மிகப்பெரிய போதை சினிமா.
அதைவிட இளையராஜாதான் எனக்கு மிகப்பெரிய போதை. நான் குடிக்கும்போது சைட்டிஷ்ஷாக அவருடைய பாடல்களைத்தான் கேட்பேன். பலபேரை குடிகாரனாக மாற்றியது அவர்தான். குடி இல்லாத நாடே கிடையாது.'பாட்டல் ராதா' படத்தை பார்ப்பவர்கள் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். என்றார்.