பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? |

வெற்றி பெறும் என நினைத்து, அல்லும் பகலும் உழைத்து, அணு அணுவாய் ரசித்து எடுத்த எத்தனையோ திரைப்படங்கள் ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி கண்டு பெட்டிக்குள் சுருண்டிருக்கின்றன. அதேபோல் புதுமுகங்களை வைத்து, சிறிய முதலீட்டில் எடுத்து, அவை பெரிய வெற்றியை ஈட்டித் தந்து, பணத்தால் பெட்டி நிரம்பி, படத் தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சியையும் தந்திருக்கின்றன.
இது தொன்றுதொட்டு சினிமாவில் நடக்கும் இயல்பான ஒன்று. சினிமா நுணுக்கங்கள் நன்கு அறிந்த ஜாம்பவான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூட பல முறை இதனை சுவைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இரண்டு திரைப்படங்களைப் பற்றிய சுவாரஸ்யமான ஒற்றுமையைத்தான் இங்கே நாம் பார்க்க இருக்கின்றோம்.
1964ம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று புதுமை இயக்குநர் சிவி ஸ்ரீதர் கதை, வசனம் எழுதி, இயக்கி வெளிவந்த திரைப்படம் தான் “கலைக் கோவில்”. இசையை மையமாக வைத்து எடுத்த இந்த திரைப்படத்தில் எஸ்வி சுப்பையா, ஆர்.முத்துராமன், நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், சந்திரகாந்தா, ராஜஸ்ரீ, ஜெயந்தி, எஸ்என் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

“தங்கரதம் வந்தது வீதியிலே”, “நான் உன்னைச் சேர்ந்த செல்வம்”, “தேவியர் இருவர் முருகனுக்கு”,”முள்ளில் ரோஜா” போன்ற காலத்தை விஞ்சி நிற்கும் இந்தப்பட பாடல்கள், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, பிபி ஸ்ரீநிவாஸ், பி சுசிலா மற்றும் எல்ஆர் ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்க, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் உருவான இவை அனைத்தும் என்றும் செவிக்கினிய தேன் சொட்டுக்கள்.
எம்எஸ் விஸ்வநாதனும், கலை இயக்குநர் கங்காவும் இணைந்து தயாரித்திருந்த இத்திரைப்படத்தில், நாடு போற்றும் வீணை இசைக் கலைஞராக எஸ்வி சுப்பையாவும், அவரது கலை வாரிசாக ஆர்.முத்துராமனும் நடித்திருப்பர். தான் என்ற அகங்காரம் தலைக்கேறிய முத்துராமன், மது போதைக்கு அடிமையாகி, நாட்டியக்காரியாக வரும் ராஜஸ்ரீயிடம் தஞ்சம் புக, முத்துராமனுக்கும், ராஜஸ்ரீக்கும் உள்ள உறவில் சந்தேகம் கொள்ளும் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சந்திரகாந்தா. இவை எல்லாவற்றிற்கும் மேலாக வீணை வித்வான் சிட்டி பாபுவின் வீணை இசை துணை நின்றும், படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
“கலைக் கோவில்” திரைப்படம் வெளிவந்து ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து, 1985ல் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் தனது “கவிதாலயா” தயாரிப்பு நிறுவனத்திற்காக தயாரித்து இயக்கிய திரைப்படம்தான் “சிந்து பைரவி”. இசையை மையமாக வைத்து எடுத்திருந்த இந்த திரைப்படத்திலும் கதையின் நாயகன் நடிகர் சிவகுமார் நாடு போற்றும் ஒரு கர்நாடக சங்கீத பாடகராக, ஜேகேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தெலுங்கு கீர்த்தனைகளை மட்டுமே சபாக்களில் பாடி வரும் வித்யா கர்வம் கொண்ட இவரை, தமிழ் பாடலும் பாடும்படி, நல்ல இசைஞானம் கொண்ட அவரது தீவிர ரசிகை ஒருத்தி தனது விருப்பத்தை தெரிவிக்க, அதிலிருந்து தொடங்கி, பின் அதுவே காதலாகி, மனைவியின் சந்தேகத்திற்கு உட்பட்டு, மதுவிற்கு அடிமையாகும் பாடகர் ஜேகேபியை மீண்டும் எப்படி மீட்டெடுக்கின்றார் அவரது காதலியான அந்த ரசிகை என்பதே இந்தப் படத்தின் கதை.

மனைவியாக நடிகை சுலக்ஷணாவும், ரசிகை மற்றும் காதலியாக நடிகை சுஹாசினியும் நடித்திருந்தனர். மேலும் டெல்லி கணேஷ், ஜனகராஜ், டிஎஸ் ராகவேந்தர், மணிமாலா, இந்திரா, 'கவிதாலயா' கிருஷ்ணமூர்த்தி என பலரும் துணைக் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தவர் 'இசைஞானி' இளையராஜா.
முந்தைய படத்தினைப் போலவே இந்தப் படத்திலும் பாடல்கள் அனைத்தும் முத்தானவை. “கலைக் கோவில்” திரைப்படத்தில் வீணை இசைக் கலைஞனாக வரும் நாயகன், இந்தப் படத்தில் வாய்ப்பாட்டுக் கலைஞனாக வருகின்றான் அவ்வளவே.
இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களின் கதையும் ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் பயணித்திருந்தாலும் முன்னவர் சறுக்கலையும், பின்னவர் சாதனையும் ருசித்திருப்பதை எண்ணிப்பார்க்கும்போது, எந்த ஒரு திரைப்படத்தின் வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிப்பது அந்தப் படத்தின் இயக்குநரோ அல்லது தயாரிப்பாளரோ அல்ல. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் மட்டுமே என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகப் புரிகின்றது.