'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு, இசையில் அறிவு, தீ பாடிய தனிப் பாடலான 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யு டியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 48 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற அந்தப் பாடலின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி சந்தோஷ் நாராயணன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் புது சர்ச்சை ஒன்றையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
அந்த வீடியோவில், “என்ஜாய் எஞ்சாமி பாடல் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்தப் பாடலுக்காக நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. அந்தப் பாடலுக்கான 100 சதவீத உரிமை, வருவாய் என்றுதான் அதை வெளியிட்ட நிறுவனம் எங்களை அணுகியது. அந்தப் பாடல் அனைத்து தளங்களிலும் சேர்த்து பில்லியன் முறை 'ஸ்ட்ரீம்' ஆகியுள்ளது. அந்தப் பாடலுக்காக மூன்று கலைஞர்களின் உழைப்பிற்காக, இதுவரையில், நாங்கள் எவ்வளவு வருமானம் பெற்றோம் என்பதை சொல்ல ஆசைப்படுகிறேன்.
அதற்காக நாங்கள் '0' வருமானத்தையே பெற்றுள்ளோம். அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால், இதுவரையில் எந்த வருமானமும் வரவில்லை. இந்த அனுபவத்தால் நான் என்னுடைய சொந்த ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளேன். இந்தியக் கலைஞர்கள் அவர்களது திறமையைக் காட்ட, வருமானத்தைப் பெற வெளிப்படையான மென்மையான தளத்தைப் பெற வேண்டுமென விரும்புகிறேன். இந்த சிக்கலில் என்னுடைய யு டியூப் சேனல் வேறு திருடப்பட்டது. அந்த சேனல் மூலம் அதே நிறுவனம் இன்று வரை வருமானத்தைப் பெற்று வருகிறது. இது முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இதுதான் என்னுடைய முதல் பதிவு. இந்தியக் கலைஞர்களே வருத்தப்படாதீர்கள், உங்கள் நிலுவைத் தொகை சரி செய்யப்படும்,” என்று பேசியுள்ளார்.
அதற்கடுத்து அவர் மற்றுமொரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “எனது அன்புக்குரிய ஏஆர் ரகுமான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த 'மாஜ்ஜா சர்ச்சையில்' எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த தவறான வாக்குறுதிகள் மற்றும் தீமைகளுக்கு பலியாகியுள்ளார். மிக்க நன்றி சார். அறிவு, எஸ்விடிபி, தீ மற்றும் பலர், நான் உட்பட யாரும் எங்களது வருமானத்தை இதுவரை பெறவில்லை, ஈமெயில்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தத் தருணத்தில் இந்தியக் கலைஞர்களை ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
எனது வழிகாட்டி பா ரஞ்சித் மற்றும் அறிவு ஆகியோருடன் மீண்டும் வரும் நாட்களில் பணி புரிவேன். உங்கள் அனைவருக்குமே தெரியும், அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகள். அனைத்து இந்தியக் கலைஞர்களுமே விரைவில் அவர்களது நிலுவையைப் பெறுவார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை கோடிகள் பார்வைகளைப் பெற்ற பாடலுக்கு அதன் உருவாக்கத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் இதுவரை ஒரு பைசா கூட வருமானமாகப் பெறவில்லை என சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ் நாராயணனின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தப் பாடலை வெளியிட்டுள்ள 'மாஜ்ஜா' என்ன பதிலளிக்கப் போகிறது என இசை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.