''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் ராகேஷ். தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லுாரியில் 2002 ன் கோல்டு மெடலிஸ்ட். மதுரையில் 'சாமானியன்' படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில் நம்மை சந்தித்தார். சாமானியனாக தன்னைப்பற்றி கூறியதாவது:
கல்லுாரியில் பி.பி.ஏ., படிக்கும் போது என்னுள் எழுந்தது இயக்குனர் ஆசை. கவிதை, கதை எழுதும் பழக்கம் இருந்தது. இறுதியாண்டு கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் சேரனிடம் நாசர் என்ற சீனியர் நான் எழுதிய கதை, கவிதைகளைப் படிக்க கொடுத்தார். அதை படித்துவிட்டு சென்னையில் என்னை வந்து பார் என்றார் சேரன். அந்த ஆர்வத்தில் முறைப்படி சென்னை சென்று பிலிம் டெக்னாலஜி படிக்க ஆரம்பித்தேன். தியரி, பிராக்டிக்கல் என இரண்டையும் ஈடுபாட்டோடு செய்ததால் கோல்ட் மெடல் பெற்றேன்.
திரைப்படக் கல்லுாரி சீனியர் இயக்குனர் ராஜா. இவரின் தந்தை எடிட்டர் மோகன், இவரின் இளைய மகன் ஜெயம் ரவி. இவர்களிடம் நன்றாக பழக ஆரம்பித்து குடும்ப உறுப்பினர் போல இருந்தேன். அதனால் ராஜா இயக்கிய மூன்று படங்களுக்கு அசோசியேட்டாக பணியாற்றினேன்.
இந்த அனுபவத்தில் என் முதல் படம் "தம்பிக்கோட்டை" சமூக பிரச்னைச் சார்ந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. 2வது "தகடு தகடு", ரீலீஸ் ஆகவில்லை, மூன்றாவது படம் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன". தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த ஊக்கத்தில் இப்போது 'சாமானியன் படம் ' உருவாகியுள்ளது.
இவரின் முயற்சியால்தான் இந்த கதைக்கு ராமராஜன் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறுவயது முதல் ராமராஜன், விஜயகாந்த் படங்கள் மீது தீராத காதல் கொண்டவன் நான். திரையில் பார்த்து ரசித்த கதாநாயகன் ஒருவரை என் இயக்கத்தில் நடிக்க வைத்த போது நெஞ்சம் குளிர்ந்தது.
ராமராஜனின் பழைய படங்கள் போல் இது இருக்காது. ஆனால் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் உள்ளது. அதைவிட கதாநாயகி இந்த படத்திற்கு இல்லை. இந்த படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் ராமராஜன் வலம் வருவார் என நம்புகிறேன். இளையராஜா இசையில் மூன்று பாடல்கள் மிக அற்புதம். ராமராஜனின் நீண்டநாள் ஆசை இந்த படத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் பணியாற்றிய மதுரை மாவட்டம் மேலுார் கணேஷ் தியேட்டரில் இதுவரை படப்பிடிப்பு எடுத்ததில்லை என்றார்; எனவே ஒரு முக்கியகாட்சி அங்கு படமாக்கப்பட்டது.
இயக்குனர் வாசுவிடம் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு தேடியபோது அவர் என்னிடம், வேறு துறையைத் தேர்ந்தெடுக்காமல் இயக்குனர் துறைக்கு வர ஏன் ஆசைப்படுகிறாய் என்று கேட்டபொழுது " மற்றவர்களின் தலையீடு இல்லாமல் நாம் சிந்தித்ததை உருவாக்க இயக்குனராக இருந்தால் மட்டுமே முடியும்" என்றேன். இப்பொழுதுதான் அதற்கான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளேன்.
முதல் படத்திற்கும் 'சாமானியன்' படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. கேமராவின் பின் நின்று இயக்குவது நின்று விடக்கூடாது என்ற எண்ணம் என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதனால் மனம் தளராமல் விளம்பர படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினேன். என்னைத்தேடி வரும் வியாபாரிகள் நான் எடுத்த விளம்பர படங்கள் ராசியாக இருப்பதாக கூறுகின்றனர்.விளம்பர படம் எளிதான வேலை அல்ல. 60 வினாடிகளில் ஒரு தயாரிப்பு குறித்த அத்தனையும் உள்ளடக்க வேண்டும். காட்சிக்கு காட்சி வேறுபாடு. விளம்பரம் செய்யக் கூடிய பொருட்கள் மக்களுக்கு ஆர்வம் கொடுப்பதாக அமைக்க வேண்டும். குறைந்த நேர கால்ஷீட் கொடுக்கும் நடிகர்கள் நேரத்தை வீணடிக்காமல் எடுப்பது என அதிக கவனம் செலுத்த வேண்டிய துறை.
தோல்விகளைச் சந்திக்கும் போது உறுதுணையாக இருந்தவர் மனைவி. சிறுவயது முதல் நான் படிக்க உதவியவர் பட்டுக்கோட்டையில் உள்ள மூத்த சகோதரர் சண்முகம். ஒரு துறையில் வெற்றி பயணம் மேற்கொள்ள நல்ல குடும்ப பின்புலம் தேவை. அந்த வகையில் நான் கொடுத்துவைத்தவன். மதுரையில் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இங்கு எனக்கு பிடித்தது கோயில்கள்தான். பல நடிகர்கள்,இயக்குனர்கள் இங்கிருந்து வந்தவர்கள்.
தஞ்சையில் பிறந்த ஒருவர் 20 ஆண்டுகள் கழித்து மதுரைக்கு வருவது போலான கதை என்பதால் மதுரையில் படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால் இங்கு பல இடங்கள் படப்பிடிப்பை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. பாலமேடு, ராமகவுண்டன்பட்டி, வெள்ளாளப்பட்டி, மேலுாரின் சில இடங்களிலும் நடத்தினோம். மதுரையில் பல கிராமங்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்ற இடங்கள். கரகாட்டக்காரன் சென்டிமென்ட்டாக சில இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.
சினிமா துறை போட்டி நிறைந்த துறை. இதில் வெற்றி பெற நிறைய அவமானங்களையும், மனக்கசப்பையும் சகித்துக்கொள்ள வேண்டும். பொறுமை இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் சாதிக்க முடியும், சினிமாவிலும்தான் என்றார்.