அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ஜவான். இதுவரை 900 கோடி வசூலித்துள்ள இப்படம் 1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்துள்ள அனிருத், சில சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்களை கேட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தனது படத்திற்கும் இதேபோன்று ஹிட் பாடல்களாக தர வேண்டும் என்று அனிருத்தை கேட்டுக் கொண்டார். இப்படியான நிலையில் ஜவான் படத்தில் அனிருத்தின் இசையில் உருவான சலேயா என்ற பாடல் தற்போது உலகின் பிரபலமான பில் போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் 97வது இடம் பிடித்திருக்கிறது. இந்த தகவலை அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பில் போர்டு என்பது உலகளவில் பிரபலமான பாடல்களை பட்டியலிடும் ஒரு தளம் ஆகும். இசையமைப்பாளர்கள் மத்தியில் இந்த தளத்தில் பாடல் இடம் பெறுவது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் அனிருத் பாடல் இடம் பெற்று உள்ளது அவருக்கு கவுரவமாக பார்க்கப்படுகிறது.