ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் | 5 வருட காதலை வெளிப்படையாக அறிவித்த அருண் - அர்ச்சனா |
தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்கரவர்த்தி இசையமைப்பில், ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார், செம்மலர் அன்னம், சுபத்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாத்திசை'. இப்படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 7ம் நூற்றாண்டு காலத்தில் நடக்கும் கதையைக் கொண்ட சரித்திரப் படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 21ம் தேதியன்று வெளியாக உள்ளது. இரண்டு நாட்களில் 37 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இப்படத்தின் டிரைலர் பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலர் பாராட்டி வருகின்றனர்.
பிரம்மாண்டமான காட்சிகள், அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் கதாபாத்திரங்கள், தமிழ் வசனங்கள், போர்க்களக் காட்சிகள் என டிரைலரில் பல விஷயங்கள் மிரட்டலாக அமைந்துள்ளன. படம் பற்றி இயக்குனர் தரணி ராஜேந்திரன் கூறுகையில், “ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரப் பாண்டியன் என்ற பாண்டிய இளவரசரைப் பற்றிய புனைவுக் கதையுடன் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றுடன் கதை சொல்லப்பட்டுள்ளது. களப்பிரர்கள் காலம் முடிவுக்கு வந்த பின் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையேயான போட்டியில் பாண்டிய மன்னனான ரணதீரப் பாண்டியன் சேரர்களையும், சோழர்களையும் போரிட்டு வீழ்த்துகிறான்.
வடக்கில் பல்லவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்க, கீழே சோழ தேசத்தில் இருந்து ரணதீரன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். போரில் தோல்வியுள்ள சோழர்கள் காட்டுக்குள் பதுங்கி விடுகிறார்கள். பேரரசுகளுக்கிடையே போர் நடைபெறும் போது சிற்றரசர்களும், சிறு சிறு கூட்டத்தினரும் ஆதரவாக வருவார்கள். அது போல சோழர்களுக்கு, எயினர்கள் என்ற பழங்குடி கூட்டத்தினர் ஆதரவாக வருகிறார்கள். ஆனால், பாண்டியர்களை உங்களைப் போன்ற சிறு கூட்டத்தினருடன் சேர்ந்து வெல்ல முடியாது என சோழன் தயங்குகிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதும் படத்தின் கதை.
இந்தப் படத்தின் மையம் 'அதிகாரம்' தான். அதிகாரத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், போர்கள் என வடிவமைக்கப்பட்டுள்ளது. தேனி, கம்பம், செஞ்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் படமாக்கியுள்ளோம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஷக்தி மித்ரன், சேயோன் உள்ளிட்ட பலர் புதுமுகங்கள் தான். குரு சோமசுந்தரம், சுபத்ரா என ஒரு சிலர் தான் தெரிந்த முகங்கள்.
இதற்கு முன்பு ஓவியர் வீர சந்தானம் நடித்த 'ஞானச் செறுக்கு' என்ற படத்தை இயக்கியுள்ளேன். கொரானோ பிரச்சினையால் அப்படத்தை வெளியிட முடியவில்லை. பல திரைப்பட விழாக்களில் அந்தப் படம் பங்கு கொண்டுள்ளது. அடுத்து இயக்கியுள்ள படம்தான் இந்த 'யாத்திசை'. இப்படி ஒரு சரித்திரப் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இயக்கியுள்ளேன். படத்திற்காக தயாரிப்பாளர் நிறைவான அளவில் பொருட் செலவு செய்துள்ளார்,” என்கிறார் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.
சோழர்களின் பெருமை பேசும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவர உள்ள நிலையில், பாண்டியர்களின் பெருமை பேசும் 'யாத்திசை' ஏப்ரல் 21ம் தேதி வெளிவர உள்ளது. அப்போது இரண்டு படங்களைப் பற்றிய ஒப்பீடும் அதிகம் வர வாய்ப்புள்ளது.