கன்னடத்தில் மட்டுமே புகழ்பெற்றிருந்த நடிகர் யஷ்ஷை வைத்து கேஜிஎப் என்கிற படத்தை இயக்கி அந்த ஒரே படத்தின் மூலம் தெலுங்கின் முன்னணி நடிகர்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படமும் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அந்தவகையில் பிரசாந்த் நீல் கிட்டத்தட்ட பான் இந்தியா டைரக்டர் ஆகிவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் சலார் படத்தை அவர் இயக்கிவந்த சமயத்திலேயே அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கப்போவதாகத்தான் அடிக்கடி செய்திகள் வெளியாகின. அவரும் கூட சூசகமாக அதை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் ராம்சரண் படத்தை இயக்குவதாக எந்தவித யூகமான செய்திகளும் வெளியாகாத நிலையில் திடீரென இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரமாண்டமான ஒரு படத்தை எதிர்பார்த்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் அப்செட் ஆகியுள்ளார்கள் என்பதை சோஷியல் மீடியாவில் அவர்கள் பதிவிடும் கமெண்ட்டுகளின் மூலமே உணரமுடிகிறது.