Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர்,aadhalal kadhal seiveer
  • ஆதலால் காதல் செய்வீர்
  • நடிகர்: சந்தோஷ் ரமேஷ்
  • மனிஷா யாதவ்
  • இயக்குனர்: சுசீந்திரன்
17 செப், 2013 - 15:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆதலால் காதல் செய்வீர்

  

தினமலர் விமர்சனம்



‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்ப(பா)டம்! தெரிந்தோ தெரியாமலோ ‘காமம்’ செய்வது தான் காதல் செய்வது... அதனால் வரும் பிரச்னைகள் ஏராளம், குற்ற உணர்ச்சிகள் தாரளம்... ‘ஆதலால் காதல் செய்யாதீர்...’ எனும் கருத்தை வலியுறுத்தியிருக்கும் இப்படம் ஒன்று போதும் இயக்குநர் சுசீந்திரனின் சமூகம் பற்றிய அக்கறை மற்றும் சிந்தனைகளுக்கு சான்று கூற...

கதைப்படி கல்லூரியில் படிக்கும் கார்த்திக் எனும் சந்தோஷூக்கு அதே கல்லூரியில் படிக்கும் தன் தோழி ஸ்வேதா எனும் மனீஷா யாதவ் மீது காதல். நட்பு வட்டத்தின் உதவியுடன் காதலை, நாயகியிடம் வெளிப்படுத்தி சுற்றம் நட்பிற்கு தெரியாமல் அம்மணியுடன் அசந்‌த இசைந்த சந்தர்ப்பத்தில் காமத்தையும் வெளிப்படுத்தி சுகப்படுகிறார். அதனால் மனீஷா சுமை பட்டு சுகவீனப்பட, வீட்டிற்கு விவரம் தெரிய வருகிறது, பிரச்னை ஆகிறது. இருவீட்டு பெரியவர்களும் கூடிப்பேசி திருமணம் செய்ய உத்தேசிக்கின்றனர்.

பையன் வீட்டினர் வயிற்றை கழுவி, கலைத்துவிட்டு வந்தால் கல்யாணம் என்கின்றனர். பெண் வீட்டினர், கலைத்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை... அதனால் கலைக்க முடியாது என்கின்றனர். உருகி உருகி காதலித்து கட்டித்தழுவிய நாயகன், நாயகி இருவருக்குமிடையிலும் இந்த விஷயத்தில் ஈகோ மோதல் எழுகிறது. இருபக்கமும் பேச்சு தடிக்கிறது! அப்புறம்? அப்புறம்மென்ன.?! எனக்கு அவன் வேண்டாம் என நாயகியும், எனக்கு அவள் வேண்டாம் என நாயகரும் முடிவு செய்து பிரிகின்றனர். குழந்தை பிறக்கிறது! அதற்கப்பபுறம்.?! அதற்கப்புறமென்ன.? அதை அநாதை ஆசிரமத்தில் அம்போ என விட்டுவிட்டு நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும், நாயகருக்கு வேறு இடத்தில் பெண்ணும் இந்த இருவரது சம்மதத்துடன் பார்க்கின்றனர் இருவீட்டு பெரியவர்களும்! இன்றைய இளைஞர்களின் காதல் கண்ணாமூச்சி நாடகத்தை சவுக்கால் அடிக்கும் க்ளைமாக்ஸூடன் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன் மெய்யாலுமே ரொம்ப துணிச்சல்காரர் தான்!

நாயகர் கார்த்திக் எனும் சந்தோஷ் பாத்திரத்தின் பெயருக்கு ஏற்றபடியே பந்தாவாக நடித்திருக்கிறார் என்பதோடு பாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார் எனலாம்! அதிலும் தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காதலியின் கருவை கலைக்க அலைத்து செல்லும் காட்சியில், ‘‘என்னை இவரது கணவன் என்றால் டாக்டர் நம்பமாட்டார், நீ புருஷனாக போ...’’ என்று நண்பனை காதலி உடன் அனுப்பி வைக்கும் இடத்தில் ‘வாவ்’ சொல்ல வைத்து விடுகிறார் மனிதர்! அதேமாதிரி பைக் ஓட்டத் தெரியுமா? எனும் அப்பாவின் கேள்விக்கு... ’’பைக்கை படுக்க ‌வச்சே ஓட்டுவேன்’’ எனும் பதிலில் இன்றைய இளைய தலைமுறையின் இலக்கு இல்லாத வேகத்தை (முட்டி ‌மோதும்...) எள்ளி நகையாடியிருக்கும் இடங்கள் சூப்பர்ப்!

நாயகி மனீஷா யாதவ், ஸ்வேதாவாக தனது அறிமுகப்படமான ‘வழக்கு எண் 18/9’-ல் நடித்ததை விட பிரமாதமாக நடித்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

நாயகரின் அப்பாவாக ராம்நாத் ஷெட்டி, அம்மா பூர்ணிமா பாக்யராஜ்(ரொம்ப நாளுக்கு அப்புறம்...) நாயகியின் அப்பாவாக ஜெய்பிரகாஷ், அம்மா துளசி, மாமா தருண் மாஸ்டர், நாயகன் - நாயகியின் ஐடியா நண்பர் அர்ஜூன் உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அந்த ஐடியா நண்பர் அர்ஜூன், நமக்கு இப்படி ஒரு நண்பர் இல்லையே என ஏங்க வைக்கிறார். பேஷ், பேஷ்!!

ஆண்டனியின் படத்தொகுப்பு, சூர்யா ஏ.ஆர்.ன் ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஏன ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், சுசீந்திரனின் இயக்கத்தில், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ படத்தை ‘‘ஆதலால் வெற்றி பெற செய்வீர்’’ என ரசிகர்களை சொல்ல வைக்கும் படமாக்கியிருக்கிறது!

ஆகமொத்தத்தில், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ - ‘காமம் செய்வீர்’ - ஆதலால் காதல் செய்யாதீர் எனும் மெஸேஜ் சொல்லும் ப(பா)டம்!!




----------------------------------------------




நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


அமரர் எழுத்தாளர் சாவி எடிட்டோரியல் மீட்டிங்கில் அடிக்கடி சொல்வது போல் ஒரு நல்ல தொடர்கதை என்பது படிக்கும் வாசகனை இன்னும் சில வாரம் வராதா என ஏங்க வைக்கனும், அடடா, அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சா? எனகேட்க வைக்கனும். அதேப்போல் ஒரு நல்ல சினிமா என்பது பார்ப்பவர் மனதில், அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சா? என  ஆச்சரியப்பட வைக்கனும். அப்படி ஆச்சரியப்படுத்திய படம் தான் இது.

ஹீரோ ஒரு சுமாரு மூஞ்சி குமாரு. ஹீரோயின் ஒரு மாநிற தேவதை பிகரு. 2 பேரும் லவ்வறாங்க.  வாலிப வயசுல எல்லா லவ்வர்சும் பண்ற தப்பை பண்றாங்க.  ஹீரோ மேல நேசமா ஃபிகரு மாசமா ஆகிடுது. வீட்டுக்கு மேட்டர்  தெரிஞ்சு பெரிய பஞ்சாயத்து ஆகுது .  தர்மபுரி இளவரசன், சேரன் மகள் காதல் மேட்டர் பர பரப்பா பேசப்படும் கால கட்டத்தில்  இந்த மாதிரி ஒரு படம் வர்றது பெரிய பிளஸ்.

ஹீரோ சந்தோஷ், இவர் புதுமுகம் என்றஎண்ணமே எழாதவண்ணம் ஆங்காங்கே அமர்க்களப்படுத்தி ஆங்காங்கே படுத்தி இருக்கிறார். ஓக்கே. பின் பாதியில் அவர் முகம்  வில்லன்மாதிரி ஆகி விடுவது கேரக்டர் மற்றும் திரைக்கதை அமைப்பால் வெல்டன் இயக்குநர்.

ஹீரோயின் மனீஷா, வழக்கு எண் ஹீரோயின். நந்திதாதாஸ்-ன் ஸ்கின் டோன், சிம்ரனின் உதடு சாயல், சோனியா அகர்வாலின் இடைசாயல் எல்லாம் கலந்த கலவை காதல் வயப்படுவது,  வீட்டில் திருட்டுத்தனமாய் ஃபோன் செய்வது, மெசேஜ் அனுப்பவது, வாமிட் எடுக்கும்போது அம்மாவிடம் பம்முவது , கர்ப்பம் கலைக்க மாட்டேன் என உறுதியாய் நிற்பது என  இவர் சிக்சர் அடிக்கும் காட்சிகள் 18 . சபாஷ்  மனீஷா.


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. நீண்ட இடைவெளிக்குப்பின் ஜஸ்ட் 100  நிமிடங்கள் மட்டுமே ஒடக்கூடிய ஒரு தமிழ்வெற்றிப்படம் தந்தது.

2. எங்கே செல்வராகவன் தான் முன் பாதியை இயக்கிக் கொடுத்தாரோ என எண்ணும் வகையில் முன்பாதி காதல் எபிசோடில் கலக்கியது, மிக இயல்பான காதல் காட்சிகள் ரசிக்க வைத்தது.

3. ஓபனிங்க்  சாங்க் கில் பாலே டேன்ஸ் பாணியில் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கலக்கல்  ரகம். பேக் டிராப்பும் அருமை

4,. பர்த்டே விஷ் பண்ண வரும் தோழிகளில் அந்த ஸ்கைப்ளூ தோழி செம டைட் டிரஸில் வந்து ஆடியன்சை 5 நிமிஷம் டைட் ஆக்கியது.

5.  பர்த் டேவிஷ் பண்ணிய பாய் ஃபிரண்டை அம்மாவுக்கு நாயகி அறிமுகப்படுத்த அதை பார்க்க தவற விட்ட அம்மா இன்னொரு டைம்  வராதா என ஏக்கமா கேட்பது செம அப்பாவித்தனம்.

6.  வாக்கிங்க் போகும்   ஹீரோ - ஹீரோயின் லவ்  எக்ஸ்போசிற்குப்பின்  கோபித்து செல்லும் இடத்தில், தோழி மட்டும் விரைப்பாக செல்ல நாயகிநாயகனை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி செம அப்ளாஸ் தியேட்டரில். (பார்த்து பார்த்து  புளித்துப்போன காட்சி தான் என்றாலும்)

7.  ஹீரோவின் குடும்பம், ஹீரோயின் குடும்பம் இரு தரப்பையும் மிக எதார்த்தமாய் காட்டியது. சினிமாத்தனம் ஒரு சீனில் கூட இல்லை, குட்.  பூர்ணிமா பாக்யராஜ் நாயகனின் அம்மாவாக வரும் சில காட்சிகள் கூட குட்.

8. தனிமை வாய்ப்பு கிடைக்கும்போது வீட்டில் கடலை போடும் லவ் ஜோடி ஆண்ட்டி வீட்டுக்கு வருவதாக அம்மா ஃபோன் பண்ணியதும் டக் என கொரியர் பாய் போல   லவ்வர் மாறுவது செம க்ளாஸ்.

9. மாமல்லபுரம் கில்மா ஹோட்டல் காட்சி என்னதான்செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி உட்பட பல படங்களில் பார்த்திருந்தாலும் செமகிக்.

10 . காதல் மேட்டர் தெரிந்ததும் இரு தரப்பு பெற்றோருக்கு இடையே நடக்கும் மீட்டிங்க் விவாதங்கள் செம யதார்த்தம்.

11. அனைத்துக்கும்  சிகரம்  வைத்தாற்போன்ற   க்ளைமாக்ஸ் காட்சி , ஆடியன்ஸ் செமகிளாப்ஸ். லவ்வர்ஸ் பாட்டுக்கு ஹேரே போச்சுன்னு லவ் பண்ணி குழந்தை பெத்து  அதை, அநாதையா விட்டுட்டுப்போய்டுவாங்க, அவங்கவங்க வாழ்க்கைல வேறவேற ஆள்  கூட செட்டில் ஆகிடுவாங்க, அந்த குழந்தையின் கதி? என கேட்டு ஒரு பாடல்  வைத்த இயக்குநரின் தைரியத்துக்கு  ஒருஷொட்டு.

12.  ஹீரோயின்  வாமிட் எடுக்கும் காட்சி, அப்போ அம்மா படும்  பதட்டம், அப்பாவுக்கு ஃபோன் பண்ணி வர வைச்சு  வீட்டுல் ஒரு இறுக்கமான சூழல், பதட்டம் அப்போ வரும் பி.ஜி.எம் எல்லாம் அருமை.


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஹீரோ தோழிக்கு ஹீரோயின் லவ் பிடிக்கலை. அவங்க 2 பேரும் பேசும்போது ஃபோனை ஆன்ல வெச்சிரு, எனக்கு கால் போட்டு. நான்  உங்க 2 பேர் பேச்சையும்  கேட்கறேன் அப்டினு  ஹீரோ சொன்னபடி  ஹீரோயின் கேட்கறா. ஆனா அந்த  ஃபோனை  ஹேன்ட் பேக்கில் வைக்காம ஏன் தோழியின் கண்ணில் மானிட்டர்  தெரியும் படி  முன்னாலயே வைக்கனும் ? அட்லீஸ்ட் ஒரு புக்கில் மறைச்ச மாதிரி வெச்சிருக்கலாமே? 

2.  ஹீரோயின் தோழி, ஹீரோயினின் அம்மாவிடம் போட்டுக்குடுக்க நினைப்பவள், இருவரையும்  பார்க்கில் பார்த்தப்பவே சொல்லீருக்கலாமே?   எதுக்கு ஹீரோயின்  வீட்டுக்குவரும் வரை வெயிட்பண்ணனும்? 

3.  கருவை கலைக்க ஹாஸ்பிடல் போகும் லவ்வர்ஸ் அறிமுகம்  இல்லாத ஹாஸ்பிடல் தான் போறாங்க. ஆனா எதுக்காக காதலனின் நண்பனை காதலியின் கணவனாக டாக்டரிடம் ஃநடிக்க வைக்கனும்? இதுக்கு எந்தப் பெண்ணும் ஒத்துக்க மாட்டாளே?

4.  டாக்டரிடம் போய் பேசும் ஜோடிக்கப்பட்ட லவ் ஜோடி, முதல்லியே ரிகர்சல் பார்த்துக்க மாட்டாங்களா?  மேரேஜ் ஆகி எத்தனை வருசம் ஆச்சு என்ற எதிர்பார்க்கப்பட்ட   ஒருசாதா கேள்விக்குக்கூட இருவரும் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளிப்பாங்க்ளா? 

5.  கருவைக்கலைக்க   ஹீரோவிடம்  பணமில்லை.  அக்காவிடம், நண்பர்களிடம் கடன் கேட்கிறான்.  ஆனா ஹீரோவிடமே புதுபைக்  75, 000 ரூபாய் மதிப்புள்ளது. அதை ஏன்  அடமானமா வைக்கலை? மூன்றில் ஒரு பங்கு காசு கூடவா கிடைக்காது?  அது பற்றி  ஹீரோயின் ஏன் எந்தகேள்வியும் கேட்கலை?

6. ஹீரோயின் கருவைக்கலைக்க தோடு , மோதிரம் , செயின் என  3 பவுன்  கொண்டு வந்து தர்றா.  ஒரு பவுன்  22,000 ரூபாய்க்கு விக்குது,  பழைய நகை என்பதால்  18,500  ரூபாய்க்குப்போகும்னு கணக்குவெச்சாலும் ஒண்னே கால் அல்லது ஒன்றரை பவுன்போதுமே?

7. வீட்டுக்கு லவ் மேட்டர் தெரிஞ்சபின்னும் எப்படி ஹீரோயினால் சர்வசாதாரணமா 40  பவுன் நகையை வீட்டில் இருந்து எடுத்துட்டு வர முடியுது? இந்தக்கால பெற்றோர்கள்  உஷாரா இருக்க மாட்டாங்களா?


மனம் கவர்ந்த வசனங்கள்

1. பைக் வேணும் பைக் வேணும்னு கேட்கறியே, உனக்கு முதல்ல பைக் ஓட்டத் தெரியுமா? பைக் பின்னால உக்கார வெச்சு கூட்டிட்டு போவியா? படுக்க வெச்சுக்கூட கூட்டிட்டுப்போவேன்

2.  எவரெவர் பிகருக்கு எவரெவரோ அவரவர் பிகருக்கு அவரவரே.

3. எப்பவும் ஏதாவது பிராப்ளம்ஸ் பேஸ் பண்ணிட்டே இருப்பவன் தான் தலைவன்.

4. தான் காதலிக்கும் ஆணுடன் பைக்கில் உலா போக எல்லா பொண்ணுங்களும் விரும்புவாங்க. அதனால பொண்ணை கரெக்ட் பண்ண நினைக்கறவங்க முதல்ல பைக் வாங்கணும்

5. பேஸ் டூ பேஸ், ஐ டூ ஐ, லிப் டூ லிப் லவ்வை சொல்லிட்டா நல்லது. அதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்.

6. டென்னிஸ் சம்பந்தமா என்ன டவுட் வேணாலும் கேளு. நான் சொல்லிடுவேன். ஓஹோ, நெட்ல எத்தனை ஓட்டை?

7. லவ்வர்சை பிரிக்க நினைச்சா ஸ்ட்ராங் ஆகிடுவாங்க. அப்டியே விட்டா அவங்களுக்குள்ளே பிரச்னை வந்து அவங்களா பிரிஞ்சுடுவாங்க.

8. லவ் பண்றப்ப சுத்தி இருக்கறவங்க எல்லாம் முட்டாளாத்தான் தெரிவாங்க. ஆனா ஏமாந்த பின் தான் நாம முட்டாள்னு தெரியும்

9. ஏய், மகாபலிபுரம் போலாமா? ம்.. ஆனா லிமிட் தாண்டக்கூடாதுடா, ம்க்கும், நீ தாண்டாம இருந்தா சரிடி அடிங்க்..

10. தப்பு பண்ற வயசுல வாய்ப்பைத் தவற விடாம, மாட்டிக்காம தப்பு பண்ணுனா எதுவும் தப்பில்லை.

11. ப்ரஸ் பொண்ணுங்களை லவ் பண்ணனும்னு நான் நினைக்கலை. லவ் பெய்லியர் பொண்ணுங்கதான் என் டார்கெட். இருட்டுல இருப்பாங்க. சின்ன வெளிச்சமா நாம  இருந்துட்டா போதும்.

12. லவ்வை சொல்லலாம்னு கிட்டே போனாலே கை நடுங்குதுடா. இப்ப இதுக்கே இப்டி நடுங்குனா மத்த எல்லாத்துக்கும் இனி என்னடா பண்ணப்போறே

13. இந்தப்பசங்களை நம்பவே முடியாதுடி.நம்ப வெச்சு கழுத்தை அறுத்துடுவானுங்க

14. டேய் மச்சி உன் அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம். நீ மாமா ஆகிட்டேடா. கூடிய சீக்கிரம் அப்பாவே ஆகப்போறான். அவன் ஆள் கர்ப்பம்

15. அப்போ எங்க கேங்க்ல நீ சேர்ந்ததே ஸ்வேதாவை கரெக்ட் பண்ணத்தானா?

16.  உனக்காக உயிரை விடவும் தயாரா இருக்கேன், ஆனா  உன் ஃபேமிலிக்காக எல்லாம் உயிரை விட முடியாது.

17.  செத்தாலும்  பரவாயில்லை, இந்த  மாதிரி  ஒரு செல்ஃபிஷ்ஷோட வாழமுடியாது

18.  என்னது?  கருவைக்கலைக்க 25,000   ரூபாயா? ஜாஸ்தி உங்க காலேஜ் அப்டிங்கறதால தான் இந்த ரேட்.  வேறன்னா  ரேட் ஜாஸ்தி, இப்போக்கூட உங்க காலேஜ்   பொண்ணுங்க 3 பேரு கலைச்சுட்டுத்தான் போனாங்க.  

19.  எனக்கு ஏன் இந்த லவ் மேட்டர் சொல்லலை? இது என்ன ஒண்டே மேட்சா?   எல்லாருக்கும் அறிவுச்சுட்டு பண்ண. 

20. நீ லவ் பண்ற  பொண்ணை  விட உன்னை லவ் பண்ற பொண்ணை....டேய் சும்மாநிறுத்து  இங்கே  என்னமோ  க்யூகட்டிட்டு பொண்ணுங்க    நிக்க ற   மாதிரி

21. தோளுக்கு மேல வளர்ந்துட்டா பர்மிஷன் கேட்க இப்படி பம்மக்கூடாது. கேட்கும் விதத்தில் கேட்டா எல்லாம் கிடைக்கும்

22  இவன் 6 மாசமா உங்க பின்னாலயே வந்திருக்கான், உங்களூக்கு தெரியாதா? நான் முன்னால போனப்ப அவன் பின்னால வந்தா  எப்படிங்க தெரியும்? 

23. சரி, விடுங்க, ஃபாலோபண்ணத்தெரியாம ஃபாலோவிட்டான். லவ்விடுங்க சாரி,   அண்ணா,  நான் அவர் ஃபிரண்டைத்தான் லவ்வறேன்,  நீங்க தான் சேர்த்து வைக்கனும்

24. நான் 4 மாசம் வெயிட் பண்ணட்டா? உங்க ஜெனரேஷனுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது டா, 2 மாசத்துல பதில் வர்லை ஆள் மாத்திட்டுப்போய்ட்டே இருப்பாங்க 

25. என் லவ் பிரேக்கப் ஆகிடுச்சுடா அடப்பாவி, போன வாரம் தானே பிக்கப்பே பண்ணே? இப்பவெல்லாம் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடற மாதிரி பிரேக்கப்பும் ஆகிடுச்சுடா.


சி.பி.கமெண்ட் - செல்வராகவன் பாணியில் சுசீந்தரனின், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ - ‘ஹைக்கூ’. ஏ, பி செண்ட்டரில் ஹிட். காதலர்கள், பெற்றோர்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.




-----------------------------------------------------------



குமுதம் விமர்சனம்



ஷாப்பிங் மால், கடற்கரை, ஈ.சி.ஆர். போன்ற இடங்களில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாருகளையும், செமை ஃபிகர்களையும்‌ பார்த்து நீங்கள் வயிறு எரிந்திருக்கிறீர்களா? அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒரு நல்ல சிறுகதையைப்படித்ததுபோல படு(!) யதார்த்தமாய் ஒரு படம் பண்ணியிருக்கிறார் சுசீந்திரன்.

மறைந்துபோன தந்தி பாஷையில் கதையைப் பார்க்கலாமா?

கல்லூரி - காதலர்கள் - மகாபலிபுரம் - கர்ப்பம் - பிரச்னை - குழந்தை - அனாதை ஆசிரமம் - நீ யாரோ - நான் யாரோ!

சிலரைப் பார்த்த உடனேயே பிடிக்கும். சிலரைப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். சிலரை எவ்வளவு நேரம் பார்த்தாலும் பிடிக்காது. கதாநாயகன் சந்தோஷ், தயாரிப்பாளருக்கு ஒன்றுவிட்ட தூரத்துச் சொந்தமா என்று யாராவது சொன்னால் தேவலை!

பளிச்சென்று இருக்கிறார் மனிஷா யாதவ். காதல் காட்சிகளில் மட்டும் நெரக்கத்தைக் காட்டாமல் தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் காதலன், மாடியில் கண்டுகொள்ளாமல் நிற்கும்போது வெறுமையாய் ஒரு பார்வை பார்‌கிறாரே, பலே!

வீட்டில் காதலன் இருக்கும்போது உறவினர் வந்துவிட, புத்திசாலித்தனமாக காதலனை கூரியர் பாயாக நடிக்க வைக்கும் காட்சி... அட!

அந்த நண்பர்கள் அரட்டை கொஞ்சம் பழசாக இருந்தாலும் கலகல.

ஜெயப்பிரகாஷ் மனத்தில் பதிகிறார். அதுவும் அந்தக் குழந்தையை ஆசிரமத்தில் விட்டபின், ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு தளர்வாய் நடந்துபோகும் காட்சி முத்திரை!

க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களுக்கு ஒரு குழந்தையை மட்டுமே காட்டி, அதைப் பாடல் காட்சியாகவும் திரைப்படுத்த ரொம்ப துணிச்சல் வேண்டும். அந்தக் குட்டிக் குழந்‌தைக்கு வெயில் சுடுவதைப் போல நமக்கும் மனம் சுட்டுப் பொசுக்குகிறது.

படத்துக்குப் பொருத்தமில்லாத தலைப்பை வைத்திருக்கிறார்கள்தான் என்றாலும் அதைச் சொல்லும யுவனின் பாடல் இனிமை.

‘‘டேய், நீ மாமா ஆயிட்டடா!’’ ‘‘கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா ஆகப் போறான்!’’ வசனம் பல இடங்களில் பளபளக்கிறது.

ஆதலால் காதல் செய்வீர் - அப்பாக்கள் நெகிழ்கிறார்கள். பையன்கள் சிரிக்கிறார்கள்.


குமுதம் ரேட்டிங் - நன்று.



---------------------------------------------




கல்கி விமர்சனம்


இன்றைய இளசுகளின் நட்பு, காதலாகி (?) காமத்தில் முடிவதும், அதில் ஆண் தப்பித்துவிட, பெண் மட்டும் எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்பதுதான் கதை.

ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணைப் பெற்றவர்கள் ஏன் இப்படி பதறுகிறார்கள்? பள்ளிக்குச் சென்று நேரத்தில் வந்துவி்ட்டாளா? கல்லூரிக்குச் சரியாகச் சென்றாளா? செல்போனில் யாருடன் நீண்டநேரம் பேசுகிறாள்? தோழி வீட்டுக்குப் போவது போல எங்கே போகிறாள்... இதற்கு பதில் சொல்லும் விதமாக இயக்குனர் சுசீந்திரன், ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் எடுத்துள்ளார்.

மனிஷா நடிப்பு நன்று. கர்ப்பமானதை அம்மாவுக்குத் தெரியாமல் மறைக்கும் பாடு, பின் ஆஸ்பத்திரி சென்று அந்தக் கருவைக் கலைக்க அல்லல்படுவது, வீட்டைவிட்டு காதலனுடன் பெங்களூருவுக்கு ஓடிவிட நினைத்து, ‘இந்தச் செய்தி கேட்டால் என் அம்மா, அப்பா தற்கொலை செய்துகொள்வார்கள்,’ என பாதிவழியில் திரும்பி வருவது... எல்லா வகையிலும் மனிஷாவுக்கு பாஸ் மார்க். நாயகன் ஏனோ மனதில் பதியவில்லை. என்ன தேர்வோ?

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் கடைசிபாடல் மனதில் நிற்கிறது. மற்றபடி ஏனோ தானோ!

மனிஷாவின் அப்பாவாக ஜெ.பி. அவர் மகளுக்காக காதலனின் தந்தையிடமும் அவரின் உறவுக்காரர்களிடமும் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்க, ‘பணம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி்‌க்கொள். உன் மகள் கர்ப்பத்தைக் கலைத்துவிடு’ என அவரிடம் பேரம் பேசும் காட்சி முகத்தில் அறையும் அவலம்!

ஏ.ஆர்.ஆண்டனி ஒளிப்பதிவு பளிச். இயக்குனரிடம் பல கேள்விகள் கேட்க வேண்டும் போல் உள்ளது. தீர்வாக எதைச் சொல்ல வருகிறார்?

காதலித்து, காதலியைத் தாயாக்கிவிட்டு, காதலன் வேறு ஒரு பெண்ணிடம் கடலை போடுவதாகக் காட்டியுள்ளதும், காதலி, தான் பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு எந்தச் சோகமும் இல்லாமல், மற்றவர் முன் மணமகளாக உட்கார்ந்து இருப்பதும்தான் தீர்வா?

அந்தப் புது மாப்பிள்ளையைக் காட்டும்போது ‘ஒரு ஏமாளி கிடைத்துவிட்டான்டா’ என்று தியேட்டரே சிரிக்கிறது. அந்தக் கேரக்டரை இப்படியா காட்டுவது? இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஒரு சதவிகிதம் நடக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தை இப்படியா கேவலமாகக் காட்டுவது? ஒன்றேமுக்கால் மணி நேரத்தில் எடுத்த படத்தை இன்னமும் கால்மணி நேரம் கூட்டி இண்டு மணி நேரம் எடுத்து, நல்ல தீர்வைச் சொல்லி இருக்கலாம்.

வழக்கு எண் 18/9 படத்தின் பாதிப்பும் சில இடங்களில் வருகின்றன. பெண்மையைக் கேவலப்படுத்துவது ஒரு பெருமையா? இப்படிப்பட்ட படங்கள் பார்த்தாலே நம் இளைஞர்கள் மேலும் வழிதவற வாய்ப்புண்டு. ஆனால், தயவுசெய்து படத்தைப் பாருங்க. ஆனால் யாரும் இதைப் பின்பற்ற வேண்டாம். படத்துக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லை. சுசீந்திரனிடம் இன்னும்‌ நல்ல படம் எதிர்பார்க்கிறோம்.



வாசகர் கருத்து (31)

vallinayagam - nellai,இந்தியா
24 செப், 2013 - 16:46 Report Abuse
vallinayagam சூப்பர் படம்.சாரி சூப்பர் பாடம்.
Rate this:
Abdullah Bin Aadham - kuala lumpur,மலேஷியா
24 செப், 2013 - 12:38 Report Abuse
Abdullah Bin Aadham 6 மெழுகுவத்திகள் படமும், ஆதலால் காதல் செய்வீர் படமும் மிகச்சிறந்த பாராட்டைப் பெற்றுள்ளது...
Rate this:
Ragavendiran - chennai,இந்தியா
23 செப், 2013 - 12:43 Report Abuse
Ragavendiran நிஜமாவே இப்படி எல்லாம் நடக்குதா நண்பா .....
Rate this:
Sathiyan Jesudass - Doha,கத்தார்
04 செப், 2013 - 23:31 Report Abuse
Sathiyan Jesudass குழந்தைவரம் வேண்டி கோவில்களுக்கு செல்லும் அம்மாக்கள் கண்களுக்கு, அம்மா வரம் தேடி காத்திருக்கும் குழந்தைகள் தெரிவதில்லை
Rate this:
rathamohan - Paandicheri,இந்தியா
02 செப், 2013 - 16:01 Report Abuse
rathamohan காதலுக்கும் காமத்துக்குகும் வித்தியாசம் தெரியாமல் தானே இந்த காலத்து பிள்ளைகள் வாழ்கிறார்கள்.
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in