Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வாகை சூட வா

வாகை சூட வா,Vaagai sooda vaa
15 அக், 2011 - 10:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வாகை சூட வா

  

தினமலர் விமர்சனம்களவாணி வெற்றிபட இயக்குநர் ஏ.சற்குணத்தின் மற்‌றுமொரு காந்தர்வ காதல் படைப்பு "வாகைசூட வா"! இதில் காதலுடன் செங்கல்சூளை அடிமைத்தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகளும் தொழிலாளர்களாக அடிமைகளாக வாழ்ந்த அவலம், அவர்களுக்கான கல்வி என 1966ம் ஆண்டுகளில் வாழ்ந்த கொத்தடிமை தனங்களையும், குழந்தை தொழிலாளர் அவலங்களையும் தோலுரித்து காட்டியிருப்பது தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத புதுமை!

கதைப்படி, தன் மகனுக்காவது அரசாங்கத்தில் உத்தியோகம் வாங்கி விட வேண்டுமென்பது, படித்துவிட்டு பத்திரம் எழுதும் வேலைபார்க்கும் பாக்யராஜின் வைராக்கியம். அதற்காக மகன் விமலை டீச்சர் டிரையினிங் படிக்க வைத்து காத்திருக்கிறார். அரசாங்க உத்தியோகத்திற்கு முன்னதாக தனியார் கிராமசேவா திட்டத்தின் கீழ் விமலுக்கு, கண்டெடுத்தான் காடு எனும் பொட்டல் காட்டில் வாத்தியர் உத்தியோகம் கிடைக்கிறது. அரசாங்க வேலை கிடைக்கும் வரை அந்த உத்தியோகத்தை பார்க்கலாம் என பொட்டி படுக்கையுடன் புதுக்கோட்டையிலிருந்து புறப்படும் விமலுக்கு, அந்த பொட்டல் காட்டில் எக்கச்சக்க ஆச்சர்யங்களும், அதிசயங்களும், அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றன. அவற்‌றை‌யெல்லாம் முறியடித்து விமல் எவ்வாறு...? அந்த பொட்டல் காட்டு கிராமத்து சிறுவர்களுக்கு பாடம் சொல்லி தருகிறார் என்பதுதான் "வாகைசூட வா" படத்தின் மொத்த கதையும். இதனூடே அக்கிராமத்தில் டீக்கடை நடத்தி, விமலுக்கு சமைத்தும் போடும் நாயகி இனியாவுடனான காதலையும் கலந்து கட்டி கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர். பலே, பலே..!!

தேங்காய் எண்ணெய் தேய்த்துபடி வாரிய தலைமுடி, மழுங்க ஷேவ் செய்த வழுவழு முகம், அதில் வரைந்த கோடு மாதிரியான மீசை, லூஸ் பிட்டிங்கில் ஃபேண்ட், சர்ட் என 1966-களில் வாத்தியாராக வாழ்ந்த இளைஞர்களை நம் கண்முன் நிறுத்த நிறையவே ஹோம் ஒர்க் செய்திருப்பார் போலும் விமல். அதனால், படத்தில் அப்பாத்திரமாகவே ஜொலிக்கிறார் மனிதர். அக்கிராமத்து மக்களிடமும், குழந்தை தொழிலாளிகளான மாணவர்களிடமும், குறிப்பாக கதாநாயகியிடமும் விமல் படும்பாடு நிறைய காமெடி, கொஞ்சமே கொஞ்சம் காமநெடி, என்பதும் கூட படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. விமலுக்கு விருதுகள் நிச்சயம்.

கதாநாயகி இனியா, நடிப்பில் கைதேர்ந்த நடிகைகளையே மிஞ்சும் வகையில் விஞ்சி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காசு, காசு என அலைந்து விமலுக்கு சாப்பிட களியையும், கருவாட்டையும் வைத்து ஏமாற்றுவதும், அவர் மீது காதல் வந்தபின்பு காசு பணத்தை பார்க்காமல், கறியும் சோறுமாக ஆக்கிபோடுவதுமாக படம் முழுக்க காதல் மொழி பேசி கலக்கி இருக்கிறார். சில இடங்களில் கண்ணீர் விடவும் வைக்கிறார் பேஷ், பேஷ்!

மகனை அரசாங்க உத்தியோகத்தில் அமர்த்தியே ஆகவேண்டும் என வைராக்கியத்தில் வாழும் பாக்யராஜ், எடக்கு-மடக்காக ஏதாவது கணக்கு போட்டு தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயலும் டூ-போர் ஏட்டு தம்பி ராமையா, ஆண்ட முதலாளி பொன்வண்ணன், அக்கிராமத்தில் செங்கல் மண்ணை கண்டுபிடித்து தன் உறவுகளை வாழவைத்து, பின் மனநோயாளி ஆகி மறையும் குருவிக்காரர் குமரவேல், வைத்தியர் நம்பிராஜன், மகளை விமலிடம் அழைத்து போய் ஒப்படைத்து, இவளுக்கு ஏதாவது சொல்லி கொடு என கதறும் பெண், பொட்டல்காட்டில் சத்தம் போட்டபடி உலாவரும் வெள்ளாந்தி சிறுவர்கள், பச்சைபசேலே தெரியாத பொட்டல் காடு, செம்மண் புழுதி பறக்கும் செங்கல்சூளை என 1966 காலகட்டத்தை படத்தில் கொண்டு வர இயக்குநருக்கு ரொம்பவே உதவி இருக்கிறார்கள் கலை இயக்குநர் சீனு, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகிய மூவரும். படத்தில் இந்த மூவரின் பங்கு பெரும்பாங்கு என்றே சொல்லலாம்.

இயக்குநர் ஏ.சற்குணத்தின் எழுத்து-இயக்கத்தில் பின்பாதியில் இருக்கும் வித்தியாசமும், விறுவிறுப்பும் முன்பாதியில் இருந்திருந்தால்,  "வாகைசூட வா" மேலும் ரசிகர்கள் மனதில் குடிகொண்டிருக்கும் என்றாலும், "வாகைசூட வா" "விருதுகளே ஓடிவா" என அறைகூவல் விடுத்திருக்கும் தரமான தமிழ்படம்.----------------------------------------------------------------குமுத‌ம் விமர்சனம்செங்கற்சூளை நெருப்பை மட்டுமே பார்த்த ஒரு பாமர கூட்டத்தின் இடையே அறிவுச்சுடர் ஏற்ற ஒருவன் நடத்தும் போராட்டமே "வாகை சூட வா

அந்தக் காலத்து பியூசி பெருமிதமும், அப்பாவித்தனமும் கலந்த ஆசிரியர் கேரக்டருக்காக விமல் ரொம்பவே உழைத்திருக்கிறார். ஒரு குக்கிராமத்தில்  மாட்டிக்கொண்டு அவர் படுகிற அவஸ்தைகள் சுவாரஸ்யத்தைக் கிளப்புகின்றன. யாருமே வராத வகுப்பறைக்கு ஓர் அம்மா தனது மகளை அழுகையும் ஆத்திரமுமாய் அழைத்து வரும்போது விமல் கொஞ்சமாவது அதிர்ச்சியைக் காட்டியிருக்கலாம்.

அறிமுக ஹீரோயின் இனியாவின் நடிப்பும் அழகும் மெய்ப்பிக்கின்றன. நான் பேச நினைப்பதெல்லாம் பாட்டை வைத்தே விமலுக்கும் இனியாவுக்கும் வளர்கிற காதல் மனதை வருடுகிறது.

கதையின் அறிவிக்கப்படாத ஹீரோக்களாக செங்கற்சூளையில் அலையும் அந்த அழுக்குச் சிறுவர்களை சொல்லலாம். முட்ட வருகிற கிடாயிடமிருந்து தப்பிக்கும் உத்தியில் பாதியை மட்டும் விமலுக்குச் சொல்லிக்கொடுத்து தவிக்கவிடும் சிறுவன், கருப்பட்டிக்காக இனியாவிடம் பொய் சொல்கிற பையன் என ஒவ்வொருவரும் கலக்கியிருக்கிறார்கள்.

ஆண்டையாக வருகிற பொன்வண்ணன் தன் சூளையில் தயாராகும் செங்கற்களைத் தலைக்கு மேலே தூக்கிப்போட்டு, தொழிலில் தனது ஆதிக்கத்தை நிறுவுகிற காட்சி ஒரு மிரட்டல் வில்லனுக்கான பகீர் அறிமுகம். அரசு வேலைக்காக விமலைக் கட்டாயப்படுத்திக் கிராமத்துக்கு அனுப்பும் அவரது அப்பாவாக வரும் பாக்யராஜுக்கு ஏனோ போதுமான வாய்ப்பு தரப்படவில்லை. விமலைக் கணக்குப் போட்டுக் குழப்பம் தம்பி ராமையா கலகலப்பால் ஈர்க்கிறார்.

விமலின் பாடங்களிலிருந்து விலகி ஓடுகிற சிறுவர்கள் கடைசியில், அதற்காக ஏங்குவதும் ஆண்டையின் ஆட்களிடமே மோதுவதும்  கண் கலங்க வைத்துவிடுகிறது. அதை நம்பி இடைவேளையும் தாண்டி படம் மெதுவாக நகர்வதுதான் திரைக்கதையின் பலவீனம்.

1966ஆம் ஆண்டை ஒவ்வொரு பிரேமிலும் பிரதிபலிக்கும் செய்யனெக்கெட்டிருக்கும் கலைவடிவமைப்பாளர் முதல் பாராட்டுக்குரியவர். கண்டெடுத்தான் காடு கிராமத்தை ஓம்பிராகாஷின் ஒளிப்பதிவு கண்ணில் நிறுத்துகிறது. "சரசர சாரக்காற்று அனா ஆவண்ணா பாடல்கள் அறிமுக இசையப்பாளர் ஜிப்ரோனுக்குச் சரியான விசிட்டிங் கார்டுகள்.

சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், ஒரு பாஸிட்டிவ் படம் கொடுக்கும் முயற்சியில் இயக்குனர் சற்குணம் வாகை சூடிவிட்டார்.


-------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்


செங்கல் சூளையில் பதத்துக்கும் அதிகமாக வெந்துவிட்ட செங்கல்லை "பொருக்குக் கல் என்பார்கள். அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. அதுபோல், வாழ்ககை தன் புறங்கையால் ஒதுக்கிவிட்ட செங்கல் சூளையில் வேலை பார்க்கும் மனிதர்களில் வாழ்வை, வியர்வையை, நெகிழ்வைச் சொல்லும் படம் "வாகை சூட வா.

ஏற்கெனவே "களவாணி என்கிற படத்தின் மூலம் தஞ்சையின் குறும்பைப் பதிவு செய்த இயக்குனர் சற்குணம், இந்தப் படத்துக்கும் தஞ்சை பக்கம்தான் கேமராவைத் திருப்பி இருக்கிறார். எனினும், "களவாணி வேறு: "வாகை சூட வா வேறு. களவாணி - காவிரி பாயும் தஞ்சைப் பகுதியின் செழுமை; வாகை சூட வா - காவிரி பாயாத தஞ்சையின் வறட்சி. அதற்கு, அவர் கண்டெடுத்திருக்கும் களம், கண்டெடுத்தான் காடு. வலங்கைமான் பக்கம். அறுபதுகளின் பிற்பகுதியில் நடக்கும் கதை என்பதால், காட்சிக்குக் காட்சி வறுமையும் அறியாமையும்.

கல்வி சொல்லிக் கொடுக்க வந்து பின்பு, தானும் கண்டெடுத்தான் காட்டு மனிதனாக மாறிப் போகும் நாயகன் விமல், நடை, உடை, பேச்சுக்களில் அட்டகாசப் பொருத்தம். கிராமத்துச் சிறுவர்களின் குறும்புகளில் மாட்டிக்கொண்டு திணறும்போது இன்னொரு பாக்யராஜைத் திரøயில் பார்க்க முடிகிறது.

நாயகி இனியா. கேரளம், தந்த நடிக்கத் தெரிந்த இனனொரு ஹீரோயின். அழுக்கு உடையும் அழுத்தமான பேச்சுமாக வலம் வரும் டீக்கடைப் பெண்ணாக கண்களில் பேசுவதிலிருந்து... காதல் பேசுவதுவரை மனசைக் கடைகிறார்.

கணினி கோலோச்சும் இந்த நூற்றாண்டிலம், மனக் கணக்கு போட்டு மனிதர்களைக் கிறுகிறுக்க வைக்கும் ஒரு சில பெரிசுகளைக் கிராமங்களில் பார்க்கலாம். அவர்கள் போடும் புதிர், வாழ்விலிருந்து பெற்ற அனுபவங்கள். அப்படி ஒரு கேரக்டர் (டூ நாலு எட்டு = கேரக்டர் பெயர்) தம்பி ராமையாவுக்கு. அவர் பாடுவதாக வரும் "தஞ்சாவூரு மாடத்தி பாடங்களில் உழைத்த மக்களின் சந்தோஷம் செங்கல் சூளை தொழிலாளர்களை ஆண்டைகள் ஏமாற்றுவது தெரிந்ததும், ஒரு தாய் தம் பிள்ளையை விமலிடம் படிக்க அனுப்பும் காட்சியிலிருந்து கதையின் சூடு ஆரம்பமாகிவிடுகிறது. நாலைந்து காட்சிகளில் வந்தாலும் பொன்வண்ணனின் ஆண்டை கதாபாத்திரம் அதிக காத்திரம்.

தமது சின்னச் சின்ன ஷாட்களில் காட்சிகளை ஹைகூ போல ஓம் பிரகாஷின் கேமரா அடுக்க, அதனை தம் பின்னணி இசையால் கோத்துக் கொடுக்கிறார் புதுமுகம் இசையமைப்பாளர் ஜிப்ரான். அதுபோல பாடல்களிலும் இசையின் ஆளுமை. "சரசரசாரைக் காத்து பாடலில் காதலோ காதல். இந்தத் தெளிவோடு இருந்தால் ஜிப்ரானின் இசை, காற்றோடு நிதமும் வரும் வரும். சின்னச் சின்ன அசைவுகளில்கூட இயக்கனர் சற்குணத்தின் பக்குவம். அ, ஆ எழுத கற்றுக் கொள்ளும் ஒரு குழந்தை, தான் அறுக்கும் செங்கல் மீது அ எழுதிப் பார்ப்பதும், விமல், ஊருக்குக் கிளம்பும்போது சிலேட் வாங்கிட்டு வாண்ணே என்று ஒரு சிறுவன் வழியனுப்பி வைப்பதும், அவர் அரசாங்க வேலையை உதறிவிட்டு செங்கல் சூளையில் கல்லறுக்க வருகையில், எடுத்த உடனே கல்லறுக்க முடியாது; முதல்ல மண்ணு மிதி, என்று சிறுவர்கள் கலாய்ப்பதுமென.. சற்குணம் கள உழைப்பில் பளிச் பளிச்.

செங்கல் சூளையின் சூழல் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கூடப் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. எதற்காக 1960களில் கதை நடக்கிறத? இன்னும் கொஞ்சம் கதையில் வேகம் தேவையோ? இனியாவின் காதலை விமல் ஏற்றுக் கொள்ள அழுத்தமான காட்சி இல்லையோ? பைத்தியக்காரர் கேரக்டரில் விட்டேத்தியான பார்வை ஏனோ? இப்படிக் கேள்விகள் எழுந்தாலும்... எடுத்துக்கொண்ட கதையில் யதார்த்தம் மீறாத மனத்தில் ஒட்டிக் கொள்கிறது.

வாகை சூட வா - வெற்றி வாகைவாசகர் கருத்து (135)

sasikumar - riyadh,இந்தியா
08 டிச, 2011 - 20:42 Report Abuse
 sasikumar good tamil movie. Please must watch.
Rate this:
ச.balasubramanian - chennai,இந்தியா
21 நவ, 2011 - 14:53 Report Abuse
 ச.balasubramanian வெரி குட் . பார்த்தவர்கள் பர்க்கதவர்களிடம் பார்க்க தூண்டுங்கள். அதுவே நாம் படத்துக்கு செயும் உதவி.ஒரு நாள் ரசிகன் vilippan
Rate this:
sangeetha - ndola,ஜாம்பியா
17 நவ, 2011 - 18:21 Report Abuse
 sangeetha good movie vimal acting very nice
Rate this:
கார்த்திக் - comimbatore,இந்தியா
13 நவ, 2011 - 12:12 Report Abuse
 கார்த்திக் பெஸ்ட் ஒப் லக் விமல்.....யு ஆர் தி ரியல் ஹீரோ இன் தமிழ்
Rate this:
kumar - Doha,கத்தார்
12 நவ, 2011 - 15:55 Report Abuse
 kumar தமிழில் ஒரு தரமான படம். அனைவரும் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கலை விருந்து. படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Rate this:
மேலும் 130 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in