தினமலர் விமர்சனம் » காஞ்சனா
தினமலர் விமர்சனம்
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் "முனி" படத்தின் பகுதி - 2 ஆக வெளிவந்திருக்கும் திகில் படம் தான் "காஞ்சனா".
பேய் என்றாலே அருகில் இருப்பவர் அண்ணியா, அம்மாவா என்று கூட பார்க்காமல், அவர்களது இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு அலறும் அளவு பயந்தாங்கொல்லி ஹீரோ ராகவா லாரன்ஸ். அவரது உடம்புக்குள்ளேயே ஆவி புகுந்ததென்றால் என்னாகும்...? ஏதாகும்...? என்பதுதான் "காஞ்சனா" படத்தின் மொத்த கதையும்! ஆனால் லாரன்ஸின் உடம்பில் புகுந்தது, காஞ்சனா எனும் திருநங்கையின் ஆவி. அது ஒரு நல்ல ஆவி, அதுவும் நல்ல காரியம் ஒன்றிற்காக பாடுபடும் ஆவி என்பதுடன், தீயவர்களை தீர்த்து கட்டும் ஆவி என்பதுதான் "காஞ்சனா" படத்தின் பலம். இதுமாதிரி ஒரு கலக்கல் பேய் கதையுடன் லட்சுமிராய் - லாரன்ஸின் காதல் கதையையும் கலந்து கட்டி, கோவை சரளா, தேவதர்ஷனி, ஸ்ரீமன் உள்ளிட்டவர்களுடன் காமெடியாக காஞ்சனாவை காட்சிபடுத்தி இருப்பதற்காகவே இயக்குநர் ராகவா லாரன்ஸை ஆஹா - ஓஹோ எனப் பாராட்டலாம்.
கிரிக்கெட்டில் சிக்ஸராக விளாசும் அளவு சூரர், லட்சுமிராய் உடனான காதலில் வீரர் என்று மற்ற விஷயங்களில் எல்லாம் வீராதி வீரராக, சூராதி சூரராக திகழும் ராகவா லாரன்ஸ், பேய் கதை சொல்லும் குழந்தைகளைப் பார்த்து மிரள்வதும், பாத்ரூம் போக கூட அம்மாவை துணைக்கு அழைத்துபோகும் அளவு பயந்த சுபாவம் கொண்டவராக உலா வருவதுமாக இருவேறு துருவங்களிலும், உச்சத்தை தொடும் அளவு நடித்து, ரசிகர்களை பேஷ், பேஷ் சொல்ல வைத்துவிடுகிறார்.
காமெடி, ஆக்ஷ்ன், த்ரில், திகில் எல்லாவற்றிலும் கலக்கி இருக்கும் லாரன்ஸ், லட்சுமிராய்வுடனான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திலும் ஆடி அசத்தியுள்ளார் என்பதை சொல்லவும் வேண்டுமா?! காஞ்சனாவின் ஆவி, ராகவா லாரன்ஸின் உடம்பிற்குள் புகுந்ததும், அவர் புடவை உடுத்திக்கொள்ளும் அழகும், மஞ்சள் பூசிக்கொள்ளும் அழகையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வாவ்! ராகவா லாரன்ஸ்க்குள் டான்ஸ், நடிப்பு மட்டுமல்ல மிகச்சிறந்த இயக்குநரும் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல...!
லாரன்ஸின் ஜோடியாக லட்சுமிராய், பேய் படத்தில் பிரமாத கவர்ச்சி விருந்து. கோவை சரளா, லாரன்ஸின் அம்மாவாக காமெடியில் காமநெடி இல்லாத கவர்ச்சி நெடி, நொடிக்கு நொடி ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி படத்திற்கு பலம் சேர்க்கிறது. கோவை சரளாவுக்கு துணையாக அவரது மருமகளாக வரும் சின்னத்திரை நாயகி தேவதர்ஷினியும், அவரது கணவராக வரும் ஸ்ரீமனும் காமெடியில் கலக்கு கலக்கென்று கலக்கி ரசிகர்களின் வயிற்றை வலிக்க வைக்கின்றனர் என்றால் மிகையல்ல!
வெற்றி கிருஷ்ணசாமியின் மிரட்டலான ஒளிப்பதிவும், தமனின் பயமுறுத்தும் பின்னணி இசையும் காஞ்னாவிற்கு மேலும் மகுடம் சேர்க்கின்றன. ஒருபக்கம் ஆவி - பேய் - பிசாசு என பயமுறுத்தினாலும் மற்றொருபக்கம் காமெடி, கவர்ச்சி நெடி என ஜனரஞ்சகமாக படம் தந்திருக்கும் ராகவா லாரன்ஸ், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என எல்லாவற்றிலும் வெற்றி பெற்று விடுகிறார்.
மொத்தத்தில் "காஞ்சனா" - "கலக்கலண்ணா!"