Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வேலாயுதம்

வேலாயுதம்,Velayutham
06 நவ, 2011 - 15:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வேலாயுதம்

 

தினமலர் விமர்சனம்விஜய் ரசிகர்களுக்கு, விஜய் படைத்திருக்கும் தீபாவளி விருந்து "வேலாயுதம்". லாஜிக் பார்க்காமல் போனால், விஜய்யின் மேஜிக்கை காட்சிக்கு காட்சி மற்றவர்களும் ரசித்துவிட்டு வரலாம்!

கதைப்படி, தமிழக உள்துறை மந்திரியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், தென் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் பாம் வைத்து, பல உயிர்களை தீர்த்துகட்ட திட்ட தீட்டி சென்னையில் ஊடுருவுகின்றனர். இதனிடையே பெரிய அளவில் கள்ளநோட்டு அச்சடிப்பது, விபச்சாரத்திற்கு பெண்களை கடத்தி விற்பது என எண்ணற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மந்திரி கும்பலின் முகத்திரையை கிழிக்க முயற்சிக்கின்றனர் பத்திரிக்கை நிருபர்களான ஜெனிலியாவும் அவரது சகாக்களும். தங்களை பற்றிய உண்மை அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப நினைக்கிறது ரவுடி கும்பல்! அதில் அதிர்ஷடவசமாக தப்பி பிழைக்கும் ஜெனிலியா, மந்திரி கும்பலின் குண்டு வெடிப்பு சதியை எச்சரிக்கை கடிதமாக எழுதி, அதை நிச்சயம் தடுப்பேன்...என்று எழுதி வைத்துவிட்டு, எதேச்சையாக அதனடியில் வேலாயுதம் என்று ஒரு பெயரையும் குறித்து வைத்துவிட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக பொதுமக்கள் சிலரது உதவியோடு மருத்துவமனையில் மரணபடுக்கையில் கிடக்கிறார்.

ஜெனிலியாவின் கற்பனை கதாபாத்திரமான வேலாயுதமாக, கிராமத்தில் பால் விற்கும் தொழில் செய்யும் வேலாயுதமான விஜய், எப்படி விஸ்வரூபமெடுக்கிறார்? ஆக்ஷ்ன் காட்சிகளில் எவ்வாறு அடித்து தூள் பரத்துகிறார்..? மந்திரி கும்பலுடன் கூட்டணி அமைத்து, நாச வேலைகளில் இறங்கும் தீவிரவாத கும்ப‌லை எதுமாதிரி எல்லாம் ஒழித்து கட்டுகிறார்...? என்பது தான் "வேலாயுதம்" படத்தின் மீதிக்கதை மட்டுமல்ல... மொத்த கதையும்கூட!

வேலாயுதமாக விஜய், தங்கை பாசத்துடன் கிராமத்தில் செய்யும் சேட்டைகளில் ஆகட்டும், சிட்டிக்கு வந்து தீவிரவாதிகளையும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் மந்திரி கும்பலையும் வேட்டையாடுவதிலாகட்டும் அக்மார்க் விஜய் முத்திரையை பதித்து, தன் பரமவிசிறிகளை மட்டும் திருப்தி படுத்தியிருக்கிறார். பிற தரப்பினரையும் திருப்திபடுத்த, அரசியலில் புது முடிவு எடுத்து திருப்திபட்டுக்கொண்ட மாதிரி, நடிப்பிலும் புதிய முயற்சியில் இறங்கலாம் விஜய்...! மற்றபடி காதல், மோதல், காமெடி, டிராஜிடி, சென்டிமெண்ட் எல்லாவற்றிலும் வழக்கம் போலவே ஸ்கோர் செய்து படத்தை ஜனரஞ்சகமாக தூக்கி நிறுத்த இயக்குநருடன் சேர்ந்து ரொம்பவே மெருகேட்டிருக்கிறார் விஜய்!

பெண் பத்திரிக்கை நிருபராக ஜெனிலியா, விஜய்யின் கிராமத்து முறைப் பெண்ணாக ஹன்சிகா மோத்வானி, விஜய்யின் பாசக்கார தங்கையாக சரண்யா மோகன், மூவரில் தங்கை சரண்யா மோகனுக்கே முக்கியத்துவமும், நடிக்கும் வாய்ப்பும் ஜாஸ்தி என்பதால் க்ளைமாக்ஸில் இறந்தும் நம் மனதில் நிற்கிறார்.

ஸ்பீடாக சந்தானம் பண்ணும் சேட்டைகள் வழக்கம் போலவே கொஞ்சம் காமெடி, நிறைய காமநெடி. பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி, பரோட்டா சூரி என எக்கச்சக்க பேர் படத்தில் உண்டென்றாலும், நல்ல போலீஸாக வரும் சாயாஜி ஷிண்டே உள்ளிட்டவர்களே நடிப்பில் மிளிர்கிறார்கள், தெரிகிறார்கள் என்பது வேலாயுதம் படத்தின் பலம், பலவீனம் இரண்டுமாகும்!

படத்தின் ஆரம்ப காட்சியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்... தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு, உள்துறை அமைச்சர் சதி என விஜயகாந்த் பட ரேன்ஜூக்கு பில்-டப்புகளை கொடுத்துவிட்டு, அடுத்த ரீலிலேயே தங்க‌ை பாசம், கிராமத்து பால்காரன் என படத்தின் முன்பாதி மொத்தமும் காமெடி விஜய்யையே காட்டி, பின்பாதி படத்தில் ஆக்ஷ்னில் அடித்து தூள் பரத்துவது என்னதான் எம்.ஜி.ஆர்., காலத்து புதிய டிரண்ட் என்றாலும், சற்றே போரடிப்பதும், அது விஜய்க்கு பொருந்தாமலிருப்பதும், "வேலாயுதம்" படத்தின் மைனஸ் பாயிண்டுகளில் ஒன்று. அதை முடிந்தவரை மறக்கடித்து, மழுங்கடித்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் இதமான இசையும், ப்ரியனின் பதமான ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல்!

ஒருபக்கம் வேகமாக ஓடும் ரயிலை நிறுத்துவது, பொது மக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது, மற்றொரு பக்கம் தங்கை பாசம், காதலி மீதான நேசம் என விஜயகாந்த் பாணியில், விஜய்யின் கொள்ளை பரப்பு படமாக, ஆஸ்கர் ரவிச்சந்திரனின் துட்டில், "வேலாயுதம்" படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா! பலே.பலே!!

ஆக மொத்தத்தில் "வேலாயுதம்" - விஜய்யின் "ஆயுதம்!"
-----------------------------------------------------குமுதம் விமர்சனம்தெலுங்கில் வந்த "ஆஸாத் தானே என்று அசால்ட்டாகப் போய் தியேட்டரில் உட்கார்ந்தால் படம் முழுவதும் ஆச்சரியங்கள்.

வெளிநாட்டு பயங்கரவாத சக்தியும் உள்ளூர் அரசியல்வாதியும் சேர்ந்து அரங்கேற்றப்போகும் விபரீதத்தை முன்கூட்டியே அறிந்துவிடுகிறார் நிருபர் பாரதி(ஜெனிலியா) அதைத்தடுக்கும் முயிற்சியில் நிராயுதபாணி ஆகிவிட்ட அவர் உருவாக்குகிற கற்பனை கேரக்டர்தான் "வேலாயுதம் அதே நேரத்தில் தங்கை கல்யாணத்துக்காக ஊரிலிருந்து சென்னைக்கு வந்திறங்குகிறார் பால்காரர் வேலாயுதம்(விஜய்) சதியை முறியடிக்க சாதாரண வேலாயுதம் சூப்பர் மேன் வேலாயுதமாவதுதான் கதை.

பாசக்கார அண்ணன். குறும்பு கொப்பளிக்கும் கிராமத்து ஆள், போக்கு காட்டும் காதலன், ஆக்ரோஷம் குறையாத சூப்பர்மேன் என பல முகங்கள் கொண்ட வேலாயுதத்தை விஜய் ரசித்துச் சுமந்திருக்கிறார். மொத்த கிராமமே விஜய்யைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போல பில்டப் செய்துவிட்டு, அப்படியே அதைத் தலைகீழாக முடிக்கிற அவரது அறிமுகக்காட்சியே அதகளம் . கொடுமைகளை நோக்கி விஜய்யை உசுப்பி விடுவதில் ஜெனிலியா கவனம் ஈர்க்கிறார்.

விஜய்யின் முறைப்பெண்ணாக வரும் ஹன்ஸிகா மோத்வாணி தளதள - பளபள பாசக்காரத் தங்கையாக வரும் சரண்யா மோகன் நடிப்பில் சின்னச் சின்ன வாய்ப்புகளைக் கூட தவற விடவில்லை. வில்லன் வைத்த வெடிகுண்டிலிருந்து ஊர்மக்களைக் காப்பாற்றிவிட்டு சரண்யா இறந்துபோகும் காட்சியில் சராசரி மாசாலக் கதை களம் பெறுகிறது. சந்தானம் சூரிபாண்டி, எம்.எஸ்.பாஸ்கர் சிங்கமுத்து எல்லோருமே காமெடியில் மிளிர்வது ஸ்கிரிப்ட்டின் வெற்றி.

வில்லன் கேரக்டர்களில் வருகிற இந்தி நடிகர்கள் இருவரும் கொடுத்த காசுக்கு மேலேயே பயமுறுத்துகிறார்கள். சூப்பர்மேன் டைப் படங்களில் அனைத்து மாமூல்களும் இதில் உண்டு. விறுவிறுப்பான திருப்பங்கள் படத்தை தக்க சமயத்தில் காப்பாற்றிவிடுகின்றன. குறிப்பாக வேலாயுதமாக வேஷம் போடும் வில்லனை எல்லோரும் நம்பிவிடும்போது. பார்வையற்ற பெண் மட்டும் அதைக் கண்டுபிடித்துவிடும் காட்சி "உங்களைக் காப்பற்ற வேறு ஓருத்தரை ஏன் எதிர்பார்க்குறீங்க? என மக்களை நோக்கியும் சாட்டைய சுழற்றும் சுபாவின் வசனத்துக்கு சபாஷ் போடலாம். போகிற போக்கில் விஜய் அரசியல் கமெண்ட் அடிக்கும்போது, ஏனோ தேர்தலையொட்டி அவர் கப்சிப் கடைப்பிடித்ததுதான் நினைவுக்கு வருகிறது.

ஓடும் ரயில் மீது விஜய்யும் வில்லனும் போடுகிற சண்டை விஷுவல் பிரமாண்டம், ப்ரியனின் கேமரா ஃபோகஸை தவறவிடவில்லை. முளைச்சு மூணு இலையும் விடலை பாடல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மெலடி கொடி பறக்கிற ஏரியா.

விஜய் என்கிற ஆக்ஷன் அஸ்திரத்தை ஏவும் பரபரப்பில் காமெடியையும் லாஜிக்கையும் மறக்கவில்லை இயக்குநர் ராஜா. அதனால் வேலாயுதம் சீறிப்பாய்கிறான்.

வேலாயுதம் - ஷார்ப். ஒகே...வாசகர் கருத்து (293)

deepa - chennai,இந்தியா
07 அக், 2012 - 18:12 Report Abuse
 deepa தளபதி அண்ணா படம் சூப்பர்
Rate this:
sarsen - RMD,இந்தியா
04 ஜூன், 2012 - 20:59 Report Abuse
 sarsen I Like this movie
Rate this:
ம.முனீஸ்வரன் - Madurai-Tirumangalam,இந்தியா
03 பிப், 2012 - 14:18 Report Abuse
 ம.முனீஸ்வரன் ok
Rate this:
ரதி - TIRUPUR,இந்தியா
31 ஜன, 2012 - 13:30 Report Abuse
 ரதி SUPER
Rate this:
மணிகண்டன் - coimbatore,இந்தியா
02 ஜன, 2012 - 15:20 Report Abuse
 மணிகண்டன் பிளாக் பஸ்ட்டர் பிலிம்.
Rate this:
மேலும் 288 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in