மெட்ராஸ்காரன்,Madraskaaran
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - வாலி மோகன் தாஸ்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஷேன் நிகாம், கலைசரன், நிஹரிகா, ஐஸ்வர்யா தத்தா
வெளியான தேதி - 10 ஜனவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஒரு ஆக்ஷன் கதைக்கான தலைப்பு போலத் தெரிந்தது. ஆனால், படம் முழுவதும் படத்தின் ஹீரோ இறங்கி அடிப்பார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம்தான் மிஞ்சியது. கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்புகள் கூட ஒரு படத்திற்கு ஆபத்துதான்.

தனது சொந்த ஊரில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என புதுக்கோட்டையில் தனது காதலி நிஹரிகாவைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஷேன் நிகாம். திருமணத்திற்கு முதல் நாளன்று நிஹரிகா கூப்பிட்டதால் அவரைப் பார்க்க காரில் செல்கிறார். போகும் வழியில் கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார். அதனால், அவரது வயிற்றில் உள்ள குழந்தை இறந்துவிடுகிறது. அதுவும் ஒரு கொலைதான் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல இரண்டு வருடம் சிறையில் இருக்கிறார். வெளியில் வந்த பின்புதான் அந்த குழந்தை இறப்புக்குத் தான் காரணம் அல்ல என்பது தெரிய வருகிறது. மீண்டும் ஊருக்குச் சென்று அதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு படத்திற்குத் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் புரிய வைத்திருக்கும் படம். ஒரு வரிக் கதையாக யதார்த்தமாக இருக்கும் படத்தை சுற்றி சுற்றி வரும் திரைக்கதையால் ரசிக்க முடியாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் இரண்டாம் பாதியில் திருப்பம் மேல் திருப்பம் வைத்து கிளைமாக்ஸ் நெருங்க புதிய கதாபாத்திரத்தை வேறு கொண்டு வருகிறார்கள்.

ஹீரோ ஷேன் நிகாம் அதிரடியாக இறங்கி ஏதோ ஆக்ஷன் செய்யப் போகிறார் என படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நமக்கு ஒரு எதிர்பார்ப்பு வருகிறது. ஆனால், அப்படியெல்லாம் அவர் எதுவுமே செய்யவில்லை. நேரம் வரட்டும், நேரம் வரட்டும் என காத்திருப்பது போலவே இருக்கிறது. விபத்து ஏற்படுத்தியதால் அவரது திருமணம் நின்று போன போதும், சிறைக்குச் சென்ற போதும், வந்த பின்பு அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்த போதும் அவர் மீது எந்த ஒரு அனுதாபமும் வரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவர் மீது அனுபதாம் வந்தால்தானே கதையுடன் நாம் ஒட்ட முடியும்.

அடுத்து கலையரசனை ஊரில் ஒரு ரவுடி போல காட்டுகிறார்கள். ஆரம்பத்திலேயே பெண் பின்னால் சுற்றும் ஒருவனின் கையை வெட்டுகிறார். அப்படிப்பட்டவர் ஷேன் நிகாம் விபத்து ஏற்படுத்தி தனது வாரிசைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்த போது கொஞ்சம் கோபப்படுவதுடன் விட்டுவிடுகிறார். இவருடைய கதாபாத்திரத்தில் தெளிவும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை.

படத்தில் உள்ள இரண்டு கதாநாயகிகளுக்கும் அதிகமான வேலை இல்லை. ஷேன் நிகாம் காதலியான நிஹரிகா கொனிடலா, கலையரசன் மனைவியான ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் துணை கதாபாத்திரங்கள் போல சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள்.

சாம் சிஎஸ் பின்னணி இசை என்றாலே இப்படித்தான் வாசித்துத் தள்ளுவார் என யோசிக்க வைத்துவிடுகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஊர் சம்பந்தப்பட்ட காட்சிகளை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.

ஒரு ஊரைச் சுற்றிய கதை அதனால் சாதித் தகராறு, அரசியல் தகராறு என ஏதோ சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. வெறும் முன் விரோதம் என்பதை மட்டும் காட்டிவிட்டு அதைச் சுற்றி என்னென்னமோ சொல்லி இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

மெட்ராஸ்காரன் - அப்பாவி…

 

மெட்ராஸ்காரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மெட்ராஸ்காரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓