ஹனு மான்
விமர்சனம்
தயாரிப்பு - பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரசாந்த் வர்மா
இசை - கௌரா ஹரி
நடிப்பு - தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, வினய்
வெளியான தேதி - 12 ஜனவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
தெலுங்கில் தயாராகி தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பக்தியும், காதலும், பாசமும், பேன்டஸியும் கலந்த ஒரு படம். மலை, அருவி, ஆறு, பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை என ஒரு அழகான ஊரான அஞ்சனாத்ரி என்ற ஊரில் நடக்கும் ஒரு கதை. இயக்குனர் பிரசாந்த் வர்மா பிரமாண்டத்தையும், ஆன்மிகத்தையும் எமோஷனுலுடன் இணைத்து ரசிக்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.
அக்கா வரலட்சுமி, தம்பி தேஜா சஜ்ஜா, அஞ்சானத்ரி என்ற ஊரில் வசிக்கின்றனர். தேஜாவுக்கு சிறு சிறு திருட்டுக்களைச் செய்வதில் ஒரு சுவாரசியம். அவருடைய சிறு வயதிலிருந்தே அம்ரிதா மீது ஒரு காதல். அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் ஊர்க்காவலனாக இருக்கும் ராஜ் தீபக் ஷெட்டி. அவரால் ஊர் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அவரை எதிர்ப்பவர்களை சண்டைக்கு அழைத்து கொல்பவர் ராஜ். வெளியூரில் படித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் அம்ரிதா, ஊர்க்காவலன் ராஜ் தீபக்கை எதிர்த்து குரல் எழுப்புகிறார். அம்ரிதாவுக்காக ராஜ் தீபக்குடன் மோதி அவரை வெற்றி கொள்கிறார் தேஜா. திடீரென சக்தி கிடைத்தவராக தேஜா மிகவும் பலசாலியான ராஜ் தீபக்கை எப்படி தோற்கடித்தார் என ஊரே ஆச்சரியப்படுகிறது. அதற்குக் காரணம் தேஜாவுக்குக் கிடைக்கும் அபூர்வ சக்தி கொண்ட ஒரு கல். அந்தக் கல் பற்றி தெரிய வரும் வினய், அதை அடையத் துடிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
ஹனுமான் ரத்தத்திலிருந்து உருவான அபூர்வ சக்தி கொண்ட அந்த கல், கதாநாயகன் தேஜாவிடம் கிடைக்கிறது. அதிலிருந்து வரும் ஒளி பட்டு தேஜா, மிகுந்த பலம் கொண்டவராக, சூப்பர் பவர் கொண்டவராக மாறுகிறார். பகலில் சூரிய ஒளி பட்டால் மட்டுமே அந்த சக்தி கிடைக்கும். அந்த அபூர்வ சக்தி கொண்ட கல்லை வைத்து ஊர் மக்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் தேஜா. கொஞ்சம் அப்பாவித்தனம், கொஞ்சம் குறும்புத்தனம், நிறைய காதல் என துடிப்பாய் நடித்திருக்கிறார் தேஜா. காதல், காமெடி, பாசம், ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தின் அடுத்த ஸ்டார் ஆக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.
தேஜாவின் காதலியாக அம்ரிதா ஐயர். வெளியூரில் டாக்டருக்குப் படித்துவிட்டு ஊருக்குத் திரும்புபவர். ஊர்க்காவலன் ராஜ் தீபக்கின் அராஜகத்தைத் தட்டிக் கேட்பவராக இருக்கிறார். மக்களுக்காகவும், ஊருக்காகவும் நல்லது செய்ய நினைக்கிறார். தன் உயிரைக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றியது தேஜா தான் என்று தெரிந்த பிறகே அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். தனி கதாநாயகியாக அம்சமான ஒரு இடத்தை அம்ரிதா விரைவில் பிடித்துவிடுவார்.
தேஜாவின் பாசமான அக்காவாக வரலட்சுமி சரத்குமார். தம்பிக்காக தனது திருமணத்தையே தள்ளி வைக்கும் ஒரு பாசமான அக்கா. கடைசியில் அவர் மீது நமக்கு அனுதாபம் வருமளவிற்கு அவரது கதாபாத்திரம் அமைந்துவிடுகிறது.
அபூர்வ கல்லை கைப்பற்ற நினைக்கும் வில்லனாக வினய். சூப்பர்மேன் கதாபாத்திரங்களின் மீது தீராத காதல் கொண்டவர். அதனால், சிறுவயதிலேயே தனது பெற்றோரைக் கொல்பவர். இடைவேளைக்குப் பின் தான் அவரது என்ட்ரி. ஏற்கெனவே தமிழில் சில படங்களில் அவர் செய்த வில்லத்தனத்தை இதிலும் செய்திருக்கிறார்.
கௌரா ஹரியின் பின்னணி இசை, ஷிவேந்திரா ஒளிப்பதிவு இரண்டும் இந்தப் படத்தின் பிரமாண்டத்திற்குத் துணை நிற்கிறது.
பக்திமயமான காட்சிகளில் விஎப்எக்ஸ் பயன்படுத்தி பிரமாண்டத்தைக் காட்டியிருக்கிறார்கள். அவை அனைத்துமே மிரட்டலாக இருக்கிறது. அதே சமயம் தெலுங்குப் படங்களுக்கே உரிய சில அமெச்சூர்தனமான காட்சிகள் இருக்கின்றன. பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டவர்கள், தெலுங்குக்கே உரிய சில கதாபாத்திரங்களைத் தவிர்த்து, அனைத்து மொழி ரசிகர்களுக்குமான கதாபாத்திரங்கள் சிலவற்றையும் உருவாக்கியிருக்கலாம்.
ஹனு மான் - ஆஹா.னுமான்….