காடப்புறா கலைக்குழு,Kadapura kalaikuzhu

காடப்புறா கலைக்குழு - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சக்தி சினி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராஜா குருசாமி
இசை - ஹென்றி
நடிப்பு - முனிஷ்காந்த், காளி வெங்கட், ஹரிகிருஷ்ணன், ஸ்வாதி முத்து
வெளியான தேதி - 7 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழகத்தில் உள்ள பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய படங்கள் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. 'கரகாட்டக்காரன்' படத்திற்குப் பிறகு அதை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் அப்படியான படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள ஒரு படம்தான் இது.

ஒரு அழுத்தமான கதையை இயக்குனர் ராஜா குருசாமி யோசிக்கவில்லை என்றாலும், நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிப் பதிய வைக்க வேண்டும் என யோசித்ததற்காகப் பாராட்டலாம். திருப்பம் நிறைந்த கதை இல்லை என்றாலும் சில உணர்வுபூர்வமான காட்சிகள்தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது.

காடப்புறா கலைக்குழு என்ற குழுவை நடத்தி வருபவர் முனிஷ்காந்த். திருமண வயதைக் கடந்தவருக்கு பெண் கிடைப்பது அரிதாக உள்ளது. அனாதையாக இருந்த ஹரிகிருஷ்ணனை சிறு வயதிலிருந்தே தத்தெடுத்து வளர்ப்பவர். மிகவும் நல்ல மனதுக்காரர். கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்பவர். ஊரில் அனைவரிடமும் பாசமாகப் பழகுபவர். ஊர் தலைவரான மைம் கோபி அடுத்து நடைபெற உள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் அஜய் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக இருக்கிறார் முனிஷ்காந்த். மைம் கோபி தேர்தலில் தோற்றுப் போக அதற்குக் காரணமான முனிஷகாந்தைக் கொல்ல நினைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முனிஷ்காந்த் கலைக்குழுவின் உரிமையாளராக இருந்தாலும், அவருக்கு சரியாக நடனமாட வராது. ஆனால், அதை ஆரம்பத்திலேயே சொல்லி சமாளித்துவிடுகிறார். பாசமான அண்ணன், ஊர் மக்களுக்கு அன்பானவர் என அவருடைய கதாபாத்திரத்தை அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். கதையின் நாயகனாக பொறுப்பாக நடித்திருக்கிறார் முனிஷ்காந்த்.

முனிஷ்காந்த் எடுத்து வளர்த்த தம்பியாக ஹரிகிருஷ்ணன். நாட்டுப்புறக் கலையில் எம்.ஏ, படிப்பவருக்கு அவரது கல்லூரியில் படிக்கும் ஸ்வாதி முத்து மீது காதல். முனிஷ்காந்த்தை எதிரியாக நினைக்கும் அதே ஊரைச் சேர்ந்த மேடைப் பாடகர் சூப்பர் குட் சுப்பிரமணியத்தின் தங்கைதான் ஸ்வாதி. தனது அண்ணனுக்கும், தங்களது கலைக்குழுவுக்கும் ஏதாவது ஒன்று என்றால் ஓடி வந்து சண்டை போடுபவர் ஹரி. அதுதான் மைம் கோபிக்கும், முனிஷ்காந்திற்கும் இடையிலான பிரச்சினையாகவும் மாறுகிறது. 'மெட்ராஸ்' படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிக்கு, இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகன் கதாபாத்திரம், இயல்பாக நடித்திருக்கிறார். காதல் நடிப்பில் ஸ்வாதி பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

முனிஷ்காந்த் கலைக்குழுவில் தவில் வாசிப்பவராக காளி வெங்கட். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை அப்படியே யதார்த்தமாய் பொருத்திக் கொள்பவர் காளி வெங்கட், இந்தப் படத்திலும் அப்படியே. கலைக்குழுவின் முக்கிய தூணே அவர்தான். ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் வில்லத்தன நடிப்பில் மைம் கோபி. பல படங்களில் பார்த்த கதாபாத்திரம்தான். ஸ்வாதியின் அண்ணன் பென்சில் மீசை பெருமாள் ஆக சூப்பர் குட் சுப்பிரமணி. இவரது கதாபாத்திரத்தில் இன்னும் நகைச்சுவையைச் சேர்த்திருக்கலாம். கலைக்குழுவில் பெண் கலைஞராக ஸ்வேதா ரமேஷ், யார் இவர் எனக் கேட்டு கவனம் ஈர்க்கிறார்.

கலைக்குழு பற்றிய கதை என்பதால் மனதில் நிற்கும்படியான பாடல்களைக் கொடுக்க இசையமைப்பாளர் ஹென்றி முயற்சித்திருக்கலாம். பாடல்களுக்கான இசை ரசிக்க வைத்தாலும் பாடல்கள் மனதில் பதியவில்லை. பல காட்சிகளில் லைட்டிங் மூலம் தனது திறமையைப் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி.

கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், அதற்கான பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்த விதம் பாராட்டுக்குரியது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசிக்கும்படியான படமாக இருக்கிறது. இருந்தாலும், கொஞ்சம் முயற்சித்திருந்தால் நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய அழுத்தமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்க முடியும்.

காடப்புறா கலைக்குழு - கிராமிய மண் வாசம்...

 

பட குழுவினர்

காடப்புறா கலைக்குழு

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓