தண்டட்டி,Thandatti

தண்டட்டி - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - ராம் சங்கையா
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
நடிப்பு - பசுபதி, ரோகினி, முகேஷ், விவேக் பிரசன்னா
வெளியான தேதி - 23 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழகத்து கிராமத்து மக்களின் வாழ்வியலைப் படமாக்கி நெகிழ வைக்கும் படங்கள் இந்தக் காலத்திலும் அவ்வப்போது வருகிறது என்பது மகிழ்ச்சியே. ஒரு அறிமுக இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு படம் வந்திருப்பது ஆச்சரியம்தான். இயக்குனர் ராம் சங்கையா ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கை, அங்கு வசிக்கும் ஒரு வயதான பெண்மணி, நேர்மையாக இருக்கும் ஒரு போலீஸ்காரர் என இந்த 'தண்டட்டி'யை தங்கமாகவே கொடுத்திருக்கிறார்.

தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி ரோகினி. வயது மூப்பு காரணமாக இறந்து போகிறார். அவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள். இறக்கும் முன்பு காணாமல் போய் கிடைத்த ரோகினி இறுதிச்சடங்கில் எந்த பிரச்சினையும் வரக் கூடாதென அவரது பேரன் போலீஸ்காரரான பசுபதியை அழைத்து வருகிறார். ரோகினி அணிந்திருக்கும் தண்டட்டியை அவருக்குப் பிறகு எடுத்துக் கொள்ள நான்கு மகள்களும், ஒரு மகனும் ஆசைப்படுகிறார்கள். இறுதிச் சடங்கு நடப்பதற்கு முன்பாக இரவில் ரோகினியின் தண்டட்டி யாராலோ திருடப்படுகிறது. அதை எடுத்தவர்கள் யார் என்பதை போலீஸ்காரர் பசுபதி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பெரிய ஹீரோக்களின் பின்னால் கமர்ஷியல் மாஸ் படம் என இந்த தமிழ் சினிமாவை வேறொரு பக்கம் அழைத்துக் கொண்டு செல்லும் சில இயக்குனர்கள் மத்தியில் ராம் சங்கையா போன்ற இயக்குனர்கள் இந்த மாதிரியான படத்தைக் கொடுத்து கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கிறார்கள். நமது மண்ணில் இன்னும் இப்படி சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது என்பதை யோசித்து படம் இயக்க வரும் புதிய இயக்குனர்களும் முயற்சிக்கலாம்.

தான் எடுத்து நடிக்கும் கதாபாத்திரத்தில் அந்தப் பாத்திரமாகவே மாறி அதற்கு உயிரூட்டி நடிப்பவர் பசுபதி. 'சார்பட்டா பரம்பரை' படத்திற்குப் பிறகு பசுபதிக்குக் கிடைத்துள்ள ஒரு அருமையான கதாபாத்திரம். சுப்பிரமணி என்ற போலீஸ்காரராக வழக்கம் போல யதார்த்தமாய் நடித்து நம் மனதில் இடம் பிடிக்கிறார். போலீசையே அனுமதிக்காத ஒரு ஊரில் அந்த ஊர்க்காரர்களின் மத்தியில் இருந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதில் அவருடைய கடமையுணர்ச்சி ரசிகர்களைக் கவரும்.

வயதான பெண்மணி 'தங்கப் பொண்ணு' கதாபாத்திரத்தில் ரோகினி. படம் முழுவதும் பிணமாக அமர்ந்து நடிப்பதென்பது கூட சாதாரண விஷயமல்ல. ஆடாமல், அசையாமல், கண்களைக் கூட சிமிட்டாமல் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். இருந்தாலும் சில பிளாஷ்பேக் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி என ரோகினியின் அனுபவ நடிப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

ரோகினியின் மகனாக விவேக் பிரசன்னா. கிராமத்துக் கதாபாத்திரத்தில் அவர் செட் ஆகவேயில்லை. அவரும் குடிகாரர் போல நடிக்க எவ்வளவோ முயற்சித்தாலும் படத்தில் தனித்துத் தெரிகிறார். ரோகினியின் பேரனாக முகேஷ் அவருடைய பாசத்தால் கண்கலங்க வைக்கிறார். ரோகினியின் தண்டட்டிக்கு ஆசைப்படும் மகள்களாக தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் அடிதடி, கைகலப்பில் இறங்கி கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார்கள். பிளாஷ்பேக்கில் இளமைக்கால ரோகினியாக அம்மு அபிராமி, சில காட்சிகள் என்றாலும் அழுத்தமாய் நடித்திருக்கிறார்.

கிடாரிப்பட்டி கிராமத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. கேஎஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கான அழுத்தத்தை இன்னும் அதிகமாய் கொடுத்திருக்கிறது.

இடைவேளைக்குப் பின் வரும் சில காட்சிகள் கொஞ்சம் இந்தத் தண்டட்டிக்குத் வேகத் தடையாக இருக்கிறது. சில காட்சிகள் கொஞ்சம் நாடகத்தனமாகவும் அமைந்துள்ளது. அவற்றைச் சரி செய்திருந்தால் இந்தத் தண்டட்டி 24 கேரட் தங்கமாக வந்திருக்கும்.

தண்டட்டி - தடம் பதிக்கும் தங்கம்…

 

தண்டட்டி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தண்டட்டி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓