காலங்களில் அவள் வசந்தம்,Kaalangalil aval vasantham

காலங்களில் அவள் வசந்தம் - சினி விழா ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அறம் என்டர்டெயின்மென்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராகவ் மிர்தத்
இசை - ஹரி எஸ்ஆர்
நடிப்பு - கவுசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோஷினி
வெளியான தேதி - 28 அக்டோபர் 2022
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 3/5

காதல் கதைகளை எப்படி சொல்ல வேண்டுமா அப்படி சொன்னால் அதில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் கூடப் பார்க்காமல் ரசிகர்கள் வரவேற்பார்கள். அறிமுக இயக்குனர், அறிமுக நாயகன் இணைந்த இந்தப் படம் காதல் படங்களுக்கு உரிய ரசனையுடன் சொல்லப்பட்டிருந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு இருந்த காதலைச் சொல்லாமல், கல்யாணம் செய்து கொண்ட பின் உள்ள காதலைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தத். இந்தக் காலக் காதல் எப்படியிருக்க வேண்டும் என்றும் ஒரு சின்ன 'அட்வைஸ்' கொடுத்திருக்கிறார். 'ஈகோ' பார்க்காமல், 'சாரி' சொல்லி 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு வாழ்ந்தால் இந்த '2 கே' காலத்து காதல்கள் சிறப்பாக இருக்கும் என்கிறார்.

பணக்கார வீட்டு இளைஞன் கவுசிக் ராம். ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என எழுதி வைத்து அதன்படி சில பெண்களைக் காதலிக்க முயல்கிறார். ஹெரோஷினியிடம் காதலை வெளிப்படுத்தி இருந்த சூழ்நிலையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. கவுசிக் அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகள் அஞ்சலி நாயர், கவுசிக் வீட்டிற்கு வந்திருக்க, கவுசிக்கைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியை நடத்தி வரும் அஞ்சலி அப்போதே கவுசிக்கைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். கவுசிக், அஞ்சலி இருவருக்கும் திருமணமும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கவுசிக்கின் பழைய வாழ்க்கை பற்றி அஞ்சலிக்குத் தெரிய வர, இருவருக்குள்ளும் பிரச்சினை ஆரம்பமாகி பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதல் படம் என்றாலே அந்தக் காதல் உணர்வுகளை அழகுடனும், ரசனையுடனும் வெளிப்படுத்த வேண்டும். இந்தப் படத்தில் கவுசிக், அஞ்சலி நாயர் இருவரும் நிஜமாகவே காதலித்தவர்கள் போல சின்னச் சின்ன முகபாவங்களைக் கூட சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காதல், மோகம், தவிப்பு, பிரிவு என இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் நெருக்கமான காட்சிகளுடன் முத்தக் காட்சிகளையும் வைத்து கொஞ்சம் எல்லையையும் மீறியிருக்கிறார் இயக்குனர்.

கவுசிக் ராமிற்கு இது முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியாது. முதல் காட்சியிலிருந்தே அவரை ரசிக்கும்படி செய்திருக்கிறார். பெண்கள் பின்னால் சுற்றித் திரியும் ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ அதைக் கொஞ்சம் ரசனையுடனே செய்கிறார். மழை, கிரிட்டீங் கார்டு, கேண்டில் டின்னர், டாட்டூ என இந்தக் கால 90ஸ், கிட்ஸ்களின் காதலை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் கவுசிக். சரியான பாதையில் சென்றால் கவுசிக்கிற்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் கிடைக்கும்.

'நெடுநல்வாடை' படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே இயல்பான நடிப்பால் கவர்ந்தவர் அஞ்சலி நாயர். 'டாணாக்காரன்' படத்திலும் குறிப்பிடும்படி நடித்திருந்தார். அந்தப் படங்களை எல்லாம் விட இந்தப் படத்தில் அஞ்சலிக்கு அவரது திறமையைக் காட்ட மிகச் சரியான வாய்ப்பு. அதை அற்புதமாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியை ஆரம்பித்து நிர்வகிக்கும் ஒரு பிசினஸ் உமன். தான் எடுக்கும் முடிவு சரியாகவே இருக்கும் என நினைத்து பார்த்த மாத்திரத்திலேயே கவுசிக்கைப் பிடித்துப் போய் கல்யாணம் செய்து கொள்கிறார். அது பிரச்சினையில் போகப் போக தன் முடிவு தவறாகிவிட்டதே என தவிக்கும் ஒரு கதாபாத்திரம். அஞ்சலிக்குப் பின்னணி குரல் கொடுத்திருப்பவருக்கும் பாராட்டுக்கள்.

இரண்டாம் கதாநாயகியாக ஹெரோஷினி. சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், அவரது கதாபாத்திரம் மூலம் உண்மைக் காதல் என்ன என்பதை வெளிப்படுத்துகிறார் இயக்குனர். மற்ற கதாபாத்திரங்களில் விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், மாத்யூ வர்கீஸ், ஜெயா சாமிநாதன் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஹரியின் பின்னணி இசை ஒரு காதல் படத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு, லியோ ஜான் பால் ஒளிப்பதிவு காலங்களையும், வசந்தங்களையும் சரியாகக் காட்டுகிறது.

இடைவேளைக்குப் பின் வரும் சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகிறது. கிளைமாக்சை திடீரென சினிமாத்தனமாக நகர்த்தி இருந்தாலும் அதிலும் ஒரு சுவாரசியத்தை வைத்து முடித்திருக்கிறார் இயக்குனர். 'பீல் குட்' மூவி என்ற வார்த்தை தமிழ் சினிமாவில் அடிக்கடி ஒலிக்கும். அப்படியான ஒரு படம்தான் இது. 'காதல் என்றால் என்ன ?' எனத் தெரிந்து கொள்ள 90ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.

காலங்களில் அவள் வசந்தம் - காதல் ஓவியம்

 

பட குழுவினர்

காலங்களில் அவள் வசந்தம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓