டாணாக்காரன்,Taanakkaran

டாணாக்காரன் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு -பொட்டன்சியல் ஸ்டூடியோஸ்
இயக்கம் - தமிழ்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - விக்ரம் பிரபு, லால், அஞ்சலி நாயர்
வெளியான தேதி - 8 ஏப்ரல் 2022 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன என்பதை அழுத்தமாக சொல்வதற்கு உதாரணம் இந்த 'டாணாக்காரன்' படம். காவல் துறை சம்பந்தப்பட்ட எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. அவை எல்லாமே காவல் துறை அதிகாரிகளைப் பற்றிய படமாகவோ அல்லது காவல் நிலையம் பற்றிய படமாகவோ மட்டும் தான் வந்திருக்கின்றன. ஆனால், காவல் துறையில் உள்ள பயிற்சிப் பள்ளிகளைப் பற்றிய படமாக இதுவரை எந்த ஒரு படமும் வந்ததில்லை.

அப்படி ஒரு பயிற்சிப் பள்ளியில் நடக்கும் பயிற்சி முறைகள், அங்கு பயிற்சி கொடுக்கும் அதிகாரிகள் செய்யும் அரசியல்கள் என இப்படியெல்லாம்தான் அந்தப் பயிற்சிப் பள்ளிகள் நடக்கிறதா என நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் தமிழ் இதற்கு முன்பு காவலராக இருந்து பின்னர் தன் வேலையைத் துறந்து சினிமாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கோ, அல்லது அவரது நண்பர்களுக்கோ நடந்த விஷயத்தை இந்தப் படத்தில் கதையாக அமைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து காவலர் பயிற்சிப் பள்ளிக்கு பயிற்சிக்காக வருகிறார் விக்ரம் பிரபு. எம்.ஏ. படித்திருந்தாலும் அப்பாவின் ஆசையை நிறைவேற்றவே இந்த பயிற்சிக்கு வந்தவர். வந்த இடத்தில் அவருக்கும் காவலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஸ்குவாடு தலைவர் லாலுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. “என்னை மீறி எப்படி நீ காக்கிச் சட்டை போடுவாய் எனப் பார்க்கிறேன்,” என விக்ரம் பிரபுவிடம் நேருக்கு நேர் மிரட்டுகிறார் லால். அந்த மிரட்டலை மீறி விக்ரம் பிரபு பயிற்சியை முடித்து காக்கிச் சட்டை அணிந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் எடுத்துக் கொண்ட கதை, அதற்காக அவர் தேடிப் பிடித்த பொருத்தமான கதைக் களம், இயல்பான கதாபாத்திர அமைப்பு, அதற்குப் பொருத்தமான நடிகர்கள் தேர்வு என அவருடைய ஈடுபாட்டான தனி கவனத்திற்கு நமது தனி பாராட்டுக்கள். அடிக்கும் வெயிலில் ஒவ்வொருவரையும் ஓடவிட்டு, உடற்பயிற்சி செய்யவிட்டு நன்றாகவே பயிற்சி கொடுத்திருக்கிறார். படத்தில் நடித்தவர்கள் அப்படியே காவலர் தேர்வுக்குப் போனால் கூட தேர்வு பெற்று காவலர்களாகி விடுவார்கள். அந்த அளவிற்கு 'பென்டு' நிமித்தியிருக்கிறார்.

தனக்கான கதைகளை, கதாபாத்திரங்களைத் தேடி அதில் நடிப்பதுதான் ஒரு நடிகருக்குத் தேவையான முதல் திறமை. இக்கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து பலரும் மறுத்த நிலையில் விக்ரம் பிரபு தன் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தில் நடித்து நல்லதொரு தேர்ச்சி பெற்றிருக்கிறார். படத்தில் கதைப்படி அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை, ஆனாலும் என்ன நாம் பதக்கம் கொடுத்துவிடுவோம்.

நாயகனுக்குப் பிறகு படத்தில் அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் லால் கதாபாத்திரம். ஸ்குவாடு தலைவராக அவர் காட்டிய கம்பீரம், திமிர், மிடுக்கு, ஆணவம் என இன்னும் பலவற்றை சொல்லலாம். ஈசுவரமூர்த்தி கதாபாத்திரத்தில் அச்சு அசலாய் அப்படியே பொருந்திப் போகிறார்.

படத்தின் நாயகியாக அஞ்சலி நாயர். படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் வேண்டுமென்றே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் 'நெடுல்வாடை' படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் கவனிக்கப்பட்டவர், இந்தப் படத்திலும் கவனிக்கப்படுவார்.

மேலதிகாரிகளின் அரசியலால் பல வருடங்களாக ஒரே பதவியில் இருப்பவராக எம்எஸ் பாஸ்கர். குணச்சித்திர நடிப்பில் இப்போது இவர் தான் அந்தக் கால ரங்காராவ், பாலையா. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க நான் ரெடி என தயாராய் இருக்கிறார். போஸ் வெங்கட், மதுசூதன ராவ் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையில் ஒரே ஒரு பாடல்தான் இருக்கிறது. பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரே ஒரு பயிற்சிப் பள்ளியில் முழு படமும் நகர்ந்தாலும், பயிற்சிக் காட்சிகள், மைதானக் காட்சிகள் என நடிப்பவர்களுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் ஓடி நடந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இடைவேளை வரை நாம் இதுவரை பார்த்திராத காட்சிகள், கதாபாத்திரங்கள் என புதிதாகத் தெரிகிறது. இடைவேளைக்குப் பின் திரைக்கதை இப்படிதான் நகரும் என யூகிக்க முடிகிறது. லாலுக்கும், விக்ரமுக்கு மீண்டும் மீண்டும் ஏட்டிக்குப் போட்டியான காட்சிகள் அடுத்தடுத்து வருவது ஒரு அலுப்பைத் தருகிறது. பயிற்சிக்கு வந்த ஒருவர் மைதானத்திலேயே உயிரை விடுகிறார், அதற்கு முன்பு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவையெல்லாம் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களது மரணத்துக்குப் பிறகான அவர்களது குடும்ப நிலையைச் சொல்லாமல் கதை கடந்து போகிறது. அதனால், விக்ரம் பிரபு மீது நமக்கு அதிக அனுதாபம் வராமல் போய்விடக் காரணமாக அமைகிறது.

டாணாக்காரன் - '3 ஸ்டார்'காரன்…

 

டாணாக்காரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டாணாக்காரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓