அர்ச்சனா 31 நாட் அவுட் (மலையாளம்),Archana 31 not out
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; நியூஸ்பேப்பர் பாய் & சவரா பிலிம்ஸ்
இயக்கம் ; அகில் அனில்குமார்
இசை ; கோபி சுந்தர் & ரஜத் பிரகாஷ்
நடிப்பு ; ஐஸ்வர்யா லட்சுமி, இந்திரன்ஸ் மற்றும் பலர்
வெளியான தேதி ; 11.02.22
நேரம் ; 1 மணி 5௦ நிமிடங்கள்
ரேட்டிங் ; 2.5 / 5

அரசு பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அவரை பெண் பார்க்க வரும் வரன்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் அவரை திருமணம் செய்வதை தட்டிக் கழிக்கின்றனர். முப்பது முறை இதுபோல பெண் பார்க்கும் படலம் முடிந்த நிலையில் துபாயில் பணிபுரியும் இளைஞன் ஒருவர் ஐஸ்வர்ய லட்சுமியை திருமணம் செய்ய முன்வருகிறார். அவரது உறவினர்கள் இங்கே சம்பந்தம் பேசி முடிக்க, மாப்பிள்ளை துபாயிலிருந்து வீடியோ காலில் பெண்ணுடன் பேசி பழகுகிறார் திருமணத்திற்காக மிகப்பெரிய அளவில் செலவுகள் செய்து ஏற்பாடுகளை கவனிக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி.

நாளை காலை திருமணம் என்கிற நிலையில் முதல்நாள் இரவே மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார் என்கிற தகவல் ஐஸ்வர்யா லட்சுமிக்கு சொல்லப்படுகிறது. இந்த தகவலை வீட்டில் இருக்கும் பெற்றோர், உறவினருக்கு தெரிவித்து அவர்களை கஷ்டப்படுத்தவோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக்கொள்ளவோ விரும்பாத ஐஸ்வர்ய லட்சுமி, துணிச்சலாக புதிய முடிவு ஒன்றை எடுக்கிறார். அது என்ன என்பது கிளைமாக்ஸ்.

28 வயதான முதிர்கன்னி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி.. ஆடல் பாடல் ரொமான்ஸ் என எதுவுமே இல்லாமல் அன்றாட வாழ்க்கையை சங்கடத்துடன் கடத்தும் வலிமிகுந்த கதாபாத்திரம்.. அதற்கு அழகாக உயிர் கொடுத்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. பள்ளிகூடத்தில் டீச்சர் தோரணையுடன் காட்சியளித்தாலும், வீட்டில் இளம்பருவத்தை தாண்டிய, திருமணத்திற்காக ஏங்கி நிற்கும் ஒரு சராசரி பெண்ணாக நடிப்பில் இருமுகம் காட்டி பிரமிக்க வைக்கிறார் மணமகன் ஓடி விட்டார் என தெரிந்தபின்பு அவர் எடுக்கும் துணிச்சலான முடிவு அடடே என ஆச்சரியப்பட வைக்கிறது.

ஐஸ்வர்ய லட்சுமியை தவிர தெரிந்த முகம் என பார்த்தால் குணச்சித்திர நடிகர் இந்திரன்ஸ் சில காட்சிகளில் வந்தாலும் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். குறிப்பாக இந்திரன்ஸ் கதாபாத்திரம் யார் என்பதும் அவர் எதற்காக திருமண வீட்டிற்கு வந்து செல்கிறார் என்கிற காரணமும் கிளைமாக்ஸில் வெளிப்படும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஐஸ்வர்ய லட்சுமியின் வகுப்பு மாணவியாக வரும் அந்த துறுதுறு பெண் தனது மாமாவின் சாவியை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு பதிலுக்கு டீச்சரை திட்டுவதற்காக அழைத்து வருவது நல்ல காமெடி. கல்யாண வீட்டில் வயசான சீனியர் குரூப் ஒன்று சகட்டுமேனிக்கு அட்ராசிட்டி பண்ணுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் புதிதாக இருக்கிறது.

ஐஸ்வர்ய லட்சுமி போன்ற அழகு பெண்ணுக்கு முப்பது முறை திருமணம் தட்டி போவதற்கான காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை அனைத்தும் வேண்டுமென்றே சொல்லப்பட்டவை போலத்தான் தெரிகின்றன. அதேபோல துபாய் மாப்பிள்ளை அவ்வளவுநாள் மணப்பெண்ணுடன் வீடியோ காலில் பேசிவிட்டு திருமணத்திற்கு முதல்நாள் வேறு பெண்ணுடன் ஓடி வருகிறார் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. திருமண தினத்தன்று காலை வரை கூட மாப்பிள்ளையும் அவரது தரப்பும் பெண் வீட்டாரை வந்து சந்திக்கவே இல்லையே என்கிற சந்தேகம் நமக்கு தான் ஏற்படுகிறதே தவிர பெண் வீட்டாருக்கு அதுபற்றிய எந்த அலட்டலும் இல்லை என்பதும் மிகப்பெரிய குறை.

கல்யாண ஏற்பாடுகள் வரை சரியான தடத்தில் செல்லும் கதை, அதற்குப்பின் ட்ராக் மாறியது போன்ற உணர்வு. அதேசமயம் கல்யாணம் நின்று போனதை எதற்காக துக்க நிகழ்வாக அனுசரிக்க வேண்டும் அதையும் சந்தோசமாக கொண்டாட பழகுவோம் என்கிற புதிய கருத்தை சொல்லி குறைகளுக்கு மேல் பூச்சு பூசி இருக்கிறார் இயக்குனர்.

அர்ச்சனா 31 நாட் அவுட் : போங்கு ஆட்டம்

 

பட குழுவினர்

அர்ச்சனா 31 நாட் அவுட் (மலையாளம்)

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓