அன்புள்ள கில்லி
விமர்சனம்
தயாரிப்பு - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட், மாஸ்டர் சேனல்
இயக்கம் - ராமலிங்கம் ஸ்ரீநாத்
இசை - அரோல் கொரேலி
நடிப்பு - மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன்
வெளியாகும் தேதி - 6 பிப்ரவரி 2022 (டிவி)
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
குழந்தைகளுக்கான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வமாகிவிட்டது. முன்பெல்லாம் குறைந்தது இரண்டு, மூன்று படங்களாவது வருடத்திற்கொரு முறை வரும். இப்போது இளைஞர்களை மட்டுமே குறிவைத்து படங்கள் வருகின்றன. குழந்தைகள் படம் என்றாலே அதை குடும்பத்துடன்தான் பார்த்து ரசிக்க முடியும். இந்த 'அன்புள்ள கில்லி' படமும் குழந்தைகளுக்கான ஒரு படம் தான்.
தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக கலர்ஸ் தமிழ் டிவியில் இன்று(பிப்., 6) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
படத்தில் அமிகோ என்ற நாய்தான் முக்கிய கதாபாத்திரம். அதைச் சுற்றித்தான் படத்தின் கதையே. படத்தில் நாயின் பெயர் கில்லி. குட்டியாக இருக்கும் போது அதைக் கண்டெடுப்பவர் மைத்ரேயா ராஜசேகர். பெற்றோர் இல்லாத மைத்ரேயா, நாய் கில்லியை மிகவும் பாசத்துடன் வளர்க்கிறார். வனத்துறை அதிகாரியாக இருந்தாலும் காட்டில் மிருகங்களை வேட்டையாடி யானைத் தந்தங்கள், புலித் தோல் ஆகியவற்றைக் கடத்தி விற்கிறார் மைம் கோபி. காட்டிற்குள் வேட்டையாட கில்லி போன்ற புத்திசாலியான நாய் அவருக்குத் தேவைப்பட கில்லியையே பிடித்து வரச் சொல்கிறார். அந்த முயற்சியில் தோல்வியடைகிறார். தன் நாயைக் கடத்த மைம் கோபி முயற்சித்தது தெரிந்த மைத்ரேயா, மைக் கோபி செய்யும் திருட்டுத்தனங்களை வெளிப்படுத்துகிறார். அதனால், கைதாகும் மைம் கோபி மைத்ரேயாவையும், நாயையும் பழி வாங்க நினைக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத், படத்தை குழந்தைகளுக்கான படமாகவே கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்கேற்றபடிதான் ஒட்டு மொத்த படமும் அமைந்துள்ளது. கொடைக்கானல் பின்னணி, கதாபாத்திரங்கள் எல்லாம் ஓகே தான். ஆனால், படம் பரபரப்பாக நகராமல் டிவி தொடர் போல நகர்வதைத் தவிர்த்திருக்கலாம்.
அறிமுக நாயகன் மைத்ரேயா அவரது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக அப்பாவித்தனமாக நடித்திருக்கிறார். ஒரு பக்கம் கார்டியனாக இருக்கும் அத்தை ஏமாற்ற, இன்னொரு பக்கம் அத்தையின் மகள் சாந்தினி காதலிப்பதாக சொல்லி ஏமாற்ற அவர் மீது பரிதாபம் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் பாசமாக வளர்த்த நாயும் காணாமல் போய்விட அதைத் தேட அவர் தவிக்கும் தவிப்பு என சென்டிமென்ட் நடிப்பில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.
மைத்ரேயாவை விழுந்து விழுந்து காதலிப்பவராக துஷாரா விஜயன். 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு முன்பாகவே இதில் நடித்திருப்பார் போலிருக்கிறது. குறைவான காட்சிகளில் தான் வருகிறார். மற்றொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன். மைத்ரேயாவைக் காதலிப்பது போல ஏமாற்றும் கதாபாத்திரம்.
மைத்ரேயாவிற்கு நல்லதை மட்டுமே நினைக்கும் மாமாவாக இளவரசு. ஆனால், அவரது மனைவி இந்துமதியோ, மைத்ரேயாவின் பணத்தை ஏமாற்றி அபகரிப்பதை மட்டுமே முக்கிய வேலையாக நினைக்கிறார். தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லி ரெடி. காமெடி செய்கிறோம் என நாஞ்சில் விஜயனும், ஆஷிக்கும் நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.
வனத்துறை அதிகாரியாக மைம் கோபி. வழக்கமான வில்லன் வேடமாக இருந்தாலும் அவருக்கே உரிய நடிப்பை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒருவர் அந்த நாய் அமிகோ தான். படத்தில் நாயை பேச வேறு வைத்திருக்கிறார்கள். அதற்கான பின்னணிக் குரலை நகைச்சுவை நடிகர் சூரி கொடுத்திருக்கிறார். சூரிக்கே உரிய சில டைமிங் வசனங்கள் நாய்க்குப் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. நாய்க்கு பின்னணிக் குரல் கொடுக்க வைத்த முதல் தமிழ்ப் படம் இதுதானாம். நாய் சிறப்பாக நடித்தற்கு நாயின் டிரைனருக்கும் பாராட்டுக்கள்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு கொடைக்கானலின் பசுமையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. அரோல் கொரேலியின் பின்னணி இசை ஓகே.
சில பல குறைகள் இருந்தாலும் குழந்தைகள் ரசிக்கும் படமாகக் கொடுத்தற்காகப் பாராட்டலாம்.
அன்புள்ள கில்லி - பாசப் போராட்டம்
அன்புள்ள கில்லி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
அன்புள்ள கில்லி
- நடிகை
- இயக்குனர்