வனம்
விமர்சனம்
தயாரிப்பு - கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஸ்ரீகண்டன் ஆனந்த்
இசை - ரோன் எதான் யோஹசன்
நடிப்பு - வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சிதாரா
வெளியான தேதி - 26 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 3/5
இயற்கையை நாம் அழித்தால் ஒரு காலத்தில் அது நம்மையே அழித்துவிடும். அது பற்றி தெரிந்திருந்தும் இந்த மனித குலம் காடுகளையும், இயற்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த சமூக அக்கறையுடன் ஏற்கெனவே சில பல படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு வித்தியாசமான படம் தான் இந்த வனம்.
இந்த அற்புதமான தலைப்பையே இதுவரை யாரும் வைக்காமல் விட்டது ஆச்சரியம்தான். கதைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பு. இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் காடுகளின் முக்கியத்துவத்தை சிறப்பாக உணர்த்தி கூடவே மறுபிறவி, பழி வாங்கல் என பரபரப்பான த்ரில்லராகவும் கொடுத்திருக்கிறார்.
மலைவாழ் மக்கள் வசித்த இடத்தில் அவர்களை அப்புறப்படுத்தி, அந்தக் காலத்தில் ஜமீன்தார் வேல ராமமூர்த்தி, கவின் கலைக் கல்லூரி ஒன்றைக் கட்டியிருக்கிறார். அந்தக் கல்லூரியில் தற்போது படித்து வரும் மாணவர் வெற்றி. அக்கல்லூரி பற்றி டாகுமென்டரி எடுக்க வருகிறார் ஸ்மிருதி வெங்கட். வெற்றி தங்கியிருக்கும் அறையில் அவரது நண்பர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வெற்றியும், ஸ்மிருதியும் இறங்குகிறார்கள். அதை அவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இக்காலத்துக் கதையாக கவின் கலைக் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் பரபரப்பாக த்ரில்லராக நகர்கின்றன. பின்னர் பிளாஷ்பேக்கில் ஜமீன்தார் வேல ராமமூர்த்தி, வண்ணாத்திப்பாறை மலை கிராம மக்கள், அவர்கள் போற்றும் அனு சித்தாரா என இயற்கையுடன் வாழும் மக்களுக்கும், ஆணவம் கொண்ட ஜமீன்தாருக்கும் நடக்கும் கதை என அதுவும் பரபரப்பாக நகர்கிறது. இவற்றோடு மறுபிறவி என்ற ஒரு கான்செப்ட்டையும் நிகழ்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் சரியாக முடிச்சு போட்டிருக்கிறார் இயக்குனர்.
கல்லூரி மாணவராக வெற்றி. வழக்கமான ஆட்டம், பாட்டத்துடன் இருக்கும் கல்லூரி மாணவர் கதாபாத்திரமல்ல. ஓவியம் வரையும், சிற்பம் செதுக்கும் அசாத்திய திறமை கொண்ட அமைதியான கல்லூரி மாணவர். ஆழமான பார்வையுடன் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார் வெற்றி.
டாகுமென்டரி படமெடுக்கும் யூ டியூப் சேனல் நிர்வாகியாக ஸ்மிருதி வெங்கட். மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்ஜே பாலாஜி தங்கையாக நடித்தவர். ஒரு மெச்சூர்டான கதாபாத்திரம். இவரும் வெற்றியும் காதலிப்பது கூட கனிவான காட்சிகளாகவே படத்தில் இடம் பெற்றுள்ளது. தனி கதாநாயகியாக வலம் வரக் கூடிய அனைத்துப் பொருத்தங்களுடன் இருக்கிறார் ஸ்மிருதி.
பிளாஷ்பேக்கில் மலைவாழ் பெண்ணாக அனு சித்தாரா. தமிழில் இவர் அதிகப் படங்களில் நடித்ததில்லை என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் அறியப்பட்டவர். இயற்கை மீது அதிகப் பாசம் கொண்ட ஒரு பாந்தமான கதாபாத்திரத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து முடிவில் கண் கலங்க வைக்கிறார். சிறுமலை ஜமீன்தார் ஆக வேல ராமமூர்த்தி. ஆணவம், திமிர் அனைத்தும் கலந்த கதாபாத்திரம். பார்வையிலும் சேர்த்து மிரட்டுகிறார். கல்லூரி முதல்வராக அழகம் பெருமாள். இவர் யார் என்பது கிளைமாக்சுக்கு முன்பாகத் தெரிய வருவது யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம்.
த்ரில்லர் கதை என்றாலே இசையமைப்பாளர்கள் இறங்கி விளையாடலாம். இசையமைப்பாளர் ரோன் எதான் யோஹன் காட்சிக்குக் காட்சி பரபரப்பூட்டுகிறார்.
மலையும், மலை சார்ந்த இடங்களும் தான் படத்தின் கதைக்களம். அதனால், ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை. தன் மீதான பொறுப்பை உணர்ந்து படத்தை ஒரு விஷுவல் ட்ரீட்டாகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். பிளாஷ் பேக் காட்சிகளில் அந்த மலையின் அழகை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். நாமே நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கல்லூரி ஹாஸ்டல் சம்பந்தப்பட்ட இரவு நேரக் காட்சிகளில் தன் லைட்டிங் மூலம் பரபரப்பைக் கூட்டுகிறார்.
வழக்கமான ஹாரர் படங்களில் என்ன நடக்குமோ அப்படியான சில காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கிறது. ஜமீன்தார் காலத்தில் நடந்த மலைவாழ் மக்கள் இருப்பிட அழிப்பு பற்றி எந்தச் செய்திகளும் இல்லாமல் இருப்பது, கல்லூரியில் தற்போது நடக்கும் மரணங்களைப் பற்றி போலீஸ் விசாரித்தும் அவற்றை மீடியாக்கள் கண்டு கொள்ளாமல் போவது லாஜிக் மீறல்கள்.
சிறிய பட்ஜெட்டில் இப்படி எடுக்கப்படும் படங்கள் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களைச் சென்று சேர்க்கும் வழிகளை படக்குழு இன்னும் அதிகமாகச் செய்திருக்க வேண்டும். தற்போது வரும் மசாலாத்தனமான, அரைத்த மாவையே அரைக்கும் படங்களைப் பார்ப்பதை விட இந்த மாதிரி வித்தியாசமான கதை கொண்ட படங்களைப் பார்ப்பது ரசிகர்களுக்குத் திருப்தியைத் தரும்.
வனம் - வளம்