2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, அஜய் கோஷ்
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
வெளியான தேதி - 14 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் பக்திப் படங்கள் வந்து நீண்ட காலமாகிவிட்டது. இந்தக் காலத்து பெண்கள் கூட பக்திப் படங்களைப் பார்த்து ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இருப்பினும், ஒரு பக்திப் படத்தை நகைச்சுவை கலந்து கொடுத்தால் இந்தக் காலத்திய அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள் என ஆர்ஜே பாலாஜி நினைத்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர் அதிகம் மெனக்கெடவில்லை. கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட யு டியுப் நகைச்சுவை நிகழ்ச்சி போன்றுதான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாகர்கோவிலில் உள்ள லோக்கல் டிவி சேனலில் நிருபராகப் பணியாற்றுபவர் ஆர்ஜே பாலாஜி. அம்மா ஊர்வசி, மூன்று தங்கைகள், ஒரு தாத்தா. அப்பா சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டதால் குடும்பச் சுமை அவர் தலை மீது இருக்கிறது. பார்க்கும் பெண்கள் எல்லாம் முதிர் கண்ணனாக இருக்கும் பாலாஜியின் குடும்ப சூழலைப் பார்த்து பிடிக்கவில்லை என்கிறார்கள். குலதெய்வமான மூக்குத்தி அம்மனை சென்று வழிபட்டால் விடிவு பிறக்கும் என்கிறார்கள். குடும்பமே குல தெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபடுகிறது- பாலாஜியின் வேண்டுதலுக்கு மனமிரங்கி மூக்குத்தி அம்மனே நேரில் வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள 11,000 ஏக்கர் நிலத்தை சாமியார் அஜய் கோஷ் தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார். தங்கள் பகுதி நிலத்தைக் காக்க அம்மனும், நிருபரும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதற்கு முன்பே ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த 'எல்கேஜி' படம் ஒரு அரசியல் கிண்டல் படமாக அமைந்து ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையுடனும், விறுவிறுப்புடனும் இருந்து ரசிக்க வைத்தது. ஆனால், இந்தப் படத்தில் அவை இரண்டுமே ஆங்காங்கேதான் இடம் பெற்றுள்ளன, அதுவே படத்தின் பெரிய குறையாகவும் அமைந்துவிட்டது. படத்தின் கதைக்காக பெரிதாக யோசிக்கவில்லை. இடைவேளை வரை இருக்கும் கொஞ்சம் சுவாரசியம், இடைவேளைக்குப் பின் காணாமல் போய்விடுகிறது- டிவி பேட்டி அது இது என பல படங்களில் பார்த்ததை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள் இயக்குனர் பாலாஜி மற்றும் சரவணன்.

பாலாஜி தனக்குப் பொருத்தமாக இருக்கும் அப்பாவி ஆண்மகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். பேச்சிலும், கிண்டலிலும் குறைவில்லை, ஆனால் அதில் காமெடிக்குத்தான் பஞ்சம் இருக்கிறது. போலி சாமியார் என்றால் வழக்கம் போல இந்து சாமியார்களை மட்டும்தான் சினிமாவில் கிண்டலடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தமிழ்நாட்டின் இரு பிரபலமான சாமியார்களை கிண்டலடித்துள்ளது போல் தெரிகிறது.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா. தான் ஏற்று நடிக்கும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் வித்தை அறிந்தவர் நயன்தாரா. இந்தப் படத்திலும் அப்படியே. அம்மனாக அவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது. கண்களிலும், முகத்திலும் ஒரு ஜொலிப்பு தெரிகிறது. படம் முழுவதும் அவர் வரவில்லை, கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் போலத்தான் வந்து போகிறார்.

போலி சாமியாராக அஜய் கோஷ். இங்குள்ள சாமியார்களின் வீடியோக்களை அவரிடம் கொடுத்திருப்பார்கள் போலும், அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். இரு தினங்களுக்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்தில் ஊர்வசியின் சிறந்த நடிப்பைப் பார்த்தோம். இரண்டு நாள் இடைவெளியில் மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம், சிறப்பான நடிப்பு. பாலாஜியின் தாத்தாவாக மௌலி, அதிக வேலையில்லை. தங்கைகளாக நடித்திருப்பவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் எல்ஆர் ஈஸ்வரி பாடும் அம்மன் பாடல் மட்டுமே ரசிக்க வைத்துள்ளது. பின்னணி இசையில் சமாளித்துவிடுகிறார். நாகர்கோவிலின் இயற்கை அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். நயன்தாராவைப் படமாக்க ஸ்பெஷல் பில்டர் எல்லாம் போட்டிருப்பார் போலிருக்கிறது.

ஒரு வரிக்கதையாக இருந்தாலும், ஆழமில்லாத மேலோட்டமான திரைக்கதை பல இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்துகிறது. இன்னும் கொஞ்சம் 'ஹோம் ஒர்க்' செய்திருக்க வேண்டும்.

மூக்குத்தி அம்மன் - குறைவான முயற்சி

 

மூக்குத்தி அம்மன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மூக்குத்தி அம்மன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓