கயிறு,Kayiru

கயிறு - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்
தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ்
இயக்கம் - கணேஷ்
இசை - விஜய் ஆனந்த், பிரித்வி
வெளியான தேதி - 13 மார்ச் 2020
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கதையுடனும், உருவாக்கத்திலும் ரசிக்கும்படியாக உள்ளன. இந்தப் படத்தில் ஒரு மனிதனுக்கும், மாட்டிற்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.

கடந்த வாரம் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி படம் ஒரு மனிதனுக்கும், குதிரைக்கும் இடையில் இருந்த பாசப்பிணைப்பை சொல்வதாகச் சொல்லி அதில் தேவையற்ற சர்ச்சைகளைப் புகுத்தி ரசிக்கவிடாமல் செய்துவிட்டனர். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எந்த சர்ச்சைகளையும் செருகாமல் ஒரு உணர்வுபூர்வமான படமாகக் கொடுத்து ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

பரம்பரை பரம்பரையாய் பூம்பூம் மாடு வைத்துக் கொண்டு ஜோசியம் சொல்லி பிழைப்பு நடத்துபவர் குணா. ஒரு பிரச்சினை காரணமாக சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு குடி பெயர்கிறார். அந்த ஊரில் காவ்யா மாதவ்வைப் பார்த்து காதல் கொள்கிறார். ஆனால், காவ்யாவின் அம்மா குணா, பூம்பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்துவதை விட்டு வேறு வேலைக்குச் சென்றால் தான் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்கிறார். குணா, காவ்யா திருமணத்திற்குத் தான்தான் இடைஞ்சலாக இருக்கிறோம் என நினைக்கும் குணாவின் மாடு நள்ளிரவில் கயிறை அறுத்துக் கொண்டு எங்கோ ஓடி விடுகிறது. மாட்டைக் காணாமல் தவித்துப் போய் தேடுகிறார் குணா. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

பூம்பூம் மாடு வைத்து பரம்பரைத் தொழில் செய்யும் இளைஞராக குணா. அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். கலர்கலரான சட்டைகள், கலர் வேட்டிகள், தலையில் தலைப்பாகை, எப்போதும் கையில் மாடு என கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதற்காக டிரைனிங் எடுத்திருப்பார் போலிருக்கிறது. சினிமாத்தனம் இல்லாத தோற்றத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக காவ்யா மாதவ். இவரும் சினிமாத்தனம் இல்லாத தோற்றத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பூக்காரப் பெண் எப்படியிருப்பாரோ அப்படியே இருக்கிறார். குணாவைப் பார்த்ததும் ஏன் காதல் கொள்கிறார் என்பதற்கான அழுத்தமான காரணம் எதுவும் இல்லை. இருப்பினும் தன் காதலில் உறுதியாக இருக்கிறார்.

பண்டிதர் ஆக நடித்திருப்பவர், காவ்யா மாதவ்வின் அம்மா, ஊரில் வெட்டியாக சுற்றித் திரியும் ஹலோ கந்தசாமி மற்ற கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆனந்த், பிரித்வி இசையில் பாடல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்கு பல இடங்களில் உயிரூட்டியிருக்கிறது. கிராமத்துக் காட்சிகளை இயல்பான அழகுடன் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒரு மாட்டின் மீது அதன் உரிமையாளர்கள், வளர்ப்பவர்கள் எவ்வளவு பாசமாக இருப்பார்கள் என்பதை நெகிழ்வுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் கிளைமாக்சில் ஆணித்தரமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

வழக்கமான சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்தப் படம் எப்படியோ, ஆனால், ஒரு ஆத்மார்த்தமான படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பிடிக்கும்.

கயிறு - இறுக்கத்துடன்...

 

பட குழுவினர்

கயிறு

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓