வெல்வெட் நகரம்,Velvetnagaram

வெல்வெட் நகரம் - பட காட்சிகள் ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், மாளவிகா சுந்தர், அர்ஜய்
தயாரிப்பு - எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ
இயக்கம் - மனோஜ் குமார் நடராஜன்
இசை - அச்சு, சரண் ராகவன்
வெளியான தேதி - 6 மார்ச் 2020
நேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

த்ரில்லர், சஸ்பென்ஸ் கதைகள் என்றால் அதன் திரைக்கதை சிறப்பாக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் மட்டுமே படத்தை ரசிக்க முடியும். இப்போதெல்லாம் த்ரில்லர் படங்கள் என்று சொல்லி வரும் படங்களில் சஸ்பென்ஸ் என்பதே இல்லாமல் படத்தைக் கொடுத்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஆரம்பித்த விதத்தில் ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அதன்பின் ஒரே ஒரு வீட்டுக்குள்ளேயே மொத்த படத்தையும் நகர்த்தி நம்மை அப்படியே உறங்க வைத்துவிடுகிறார்கள்.

டிவி ஒன்றில் ரிப்போர்ட்டர் ஆக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். அவருடைய பள்ளித் தோழி நடிகையாக இருக்கும் கஸ்தூரி. மலைவாழ் மக்களின் நலனுக்காக சமூக சேவகராக இருக்கும் அவர் திடீரென கொல்லப்படுகிறார். கொலைக்கான பின்னணியில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் இருக்கும் என்ற சந்தேகத்தில் அது பற்றி விசாரிக்கக் களத்தில் இறங்குகிறார் வரலட்சுமி. ஆனால், அவர் வேறு ஒரு வளையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டாரா, கஸ்தூரியைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தாரா என்பதுதுன் படத்தின் மீதிக் கதை.

மலைவாழ் மக்கள், அவர்களின் இடங்களைப் பறிக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனம், அவர்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை கஸ்தூரி, அவருக்கு ஆதரவாக இருக்கும் வரலட்சுமி என படத்தின் ஆரம்பம் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. அதன்பின் வரலட்சுமி போய் தங்கும் வீட்டில் சில வித்தியாச பணம் பறிக்கும் கும்பல் வந்து தங்கி, வரலட்சுமி உள்ளிட்டவர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்ட, கதை ஆரம்பத்தை விட்டு வேறு திசையை நோக்கிப் பயணிக்கிறது. எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி, எங்கெங்கோ சென்று எப்படியோ படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

டிவி சேனல் ரிப்போர்ட்டர் ஆக வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் அப்படி ஒரு பரபரப்பு காட்டுகிறார். அட, ஏதோ பெரிதாக செய்யப் போகிறார் என்று பார்த்தால் பணயக் கைதியாக மாட்டிக் கொண்டு தள்ளாடுகிறார். கடைசி வரை எதுவுமே செய்யாமல் ஒரு பேட்டியுடன் தன் சாகசத்தை முடித்துக் கொள்கிறார்.

வரலட்சுமிக்கு அடுத்து படத்தில் கொஞ்சம் கவனத்தை ஈர்ப்பவர் மாளவிகா சுந்தர். பின்னணிப் பாடகியாக இருப்பவர் திரைக்கு முன் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

மாளவிகாவின் கணவராக முகிலன் என்ற கதாபாத்திரத்தில் பிரதீப் பெனிட்டோ ராயன். இவர் மட்டும்தான் அடிக்கடி ஏதோ கொஞ்சம் ஹீரோயிசம் செய்கிறார்.

பணம் பறிக்கும் கும்பலின் தலைவனாக அர்ஜய், அவருடைய உதவியாளர்களாக கண்ணன் பொன்னையா, ரமேஷ் திலக், சந்தோஷ் கிருஷ்ணா ஆகியோர்.

சரண் ராகவனின் பின்னணி ரொம்ப சுமார் ரகம். ஒரு வீட்டுக்குள்ளேயே அதிக நேர கதை நகர்ந்தாலும் கேமரா கோணங்களால் அதற்கான அலுப்பை நமக்குத் தராமல் சமாளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பகத் குமார்.

எடுத்துக் கொண்ட மையக் கருவை விட்டு விலகி, வேறு தளத்திற்குள் கதை நகர்ந்தால் ஒரு படம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்தப் படம் நல்ல உதாரணம்.

வெல்வெட் நகரம் - வெறும் நகரம்

 

பட குழுவினர்

வெல்வெட் நகரம்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓