2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தமன்னா, முனிஷ்காந்த், சத்யன்
தயாரிப்பு - ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்
இயக்கம் - ரோகின் வெங்கடேசன்
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 11 அக்டோபர் 2019
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள மற்றுமொரு பேய் படம் தான் இந்த பெட்ரோமாக்ஸ். தெலுங்கில் வெளிவந்த ஆனந்தோ பிரம்மா படத்தின் தமிழ் ரீமேக் இது. பயமுறுத்தும் பேய்ப் படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது சிரிக்க வைக்கும் பேய்ப் படங்களும் வருகின்றன. அந்த வரிசையில் சிரிக்கவும் வைக்க வந்துள்ள படம் இது. ரீமேக் படம் என்பதால் இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கு அதிக வேலை இருந்திருக்காது. ஒரிஜனல் படத்தை சிதைக்காமல் அப்படியே கொடுத்திருந்தாலே போதும்.

கேரளா வெள்ளத்தில் அப்பா, அம்மா இறந்த காரணத்தால் தன்னுடைய வீட்டை விற்க சென்னைக்கு வருகிறார் மலேசியாவில் வசிக்கும் பிரேம். அந்த வீட்டில் பேய் இருப்பதாக கதை கட்டிவிட்டு அதைக் குறைந்த விலைக்கு வாங்க திட்டமிடுகிறார் மைம் கோபி. ஆனால், அந்த வீட்டில் பேய் இல்லை என்பதை நிரூபீத்துக் காட்ட முனிஷ்காந்த், பிரேமுக்கு உதவி செய்ய வருகிறார். உடன் காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகியோருடன் அந்த வீட்டிற்கு சென்று நான்கு நாட்கள் தங்கி பேய் இல்லை என்பதைப் புரிய வைக்க முயற்சிக்கிறார். அந்த வீட்டில் தமன்னா, அவருடைய அப்பா, வீட்டு சமையல்காரர், அவருடைய மகள் ஆகியோர் பேயாக இருக்கிறார்கள். அவர்கள் முனிஷ்காந்த்தையும் அவரது ஆட்களையும் விரட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள், அந்த வீட்டில் அவர்கள் பேயாக இருப்பது ஏன் என்பதற்கான விடைதான் படத்தின் மீதிக் கதை.

தமன்னாவிடம் ஒரு வாரம் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. சில பல காட்சிகளில் வந்து பயமுறுத்திவிட்டுச் செல்கிறார். தமன்னாவை எல்லாம் பேயாகப் பார்த்து யார் பயப்படப் போகிறார்கள். சில காட்சிகளில் அழகு தமன்னாவாக வந்து ஆடிவிட்டு, பாடிவிட்டு அவரது கடமையை முடித்திருக்கிறார். தமன்னாவும் இந்தப் படத்தில் இருக்கிறார், அவ்வளவுதான். அவர்தான் கதாநாயகி என்பதெல்லாம் விளம்பரத்திற்காக மட்டுமே.

படத்தின் கதாநாயகன் முனிஷ்காந்த் தான். ஏனென்றால் அவர்தான் அதிகமாக வசனம் பேசுகிறார். அவருக்கடுத்து நல்லவர் போல் நடிக்கும் வில்லன் பிரேம்.

முனிஷ்காந்த் சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும் காளி வெங்கட், சத்யன் ஆகியோரை விட திருச்சி சரவணகுமார் நன்றாக சிரிக்க வைத்து கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறார். அவரது மிமிக்ரி நகைச்சுவைக் காட்சிகள் சுவாரசியமாக அமைந்து சிரிக்க வைக்கின்றன.

இடைவேளைக்குப் பின் முனிஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் கூட்டணிக்கும் தமன்னா தலைமையிலான கூட்டணிக்கும் நடக்கும் பேய் - மனிதன் ஆட்டத்தில்தான் கலகலப்பு அதிகம். பேய்களையே நொந்து போக வைக்கிறது முனிஷ்காந்த் கூட்டணி. அந்தக் காட்சிகள்தான் படத்தைக் காப்பாற்றுகின்றன.

ஒரு பேய்ப் படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறது தொழில்நுட்பக் கூட்டணி.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் பேய்க் கதைகளை இன்னும் எத்தனை படங்களில்தான் பார்ப்பதோ ?. இடைவேளை வரை படத்தில் சிறப்பாகச் சொல்லும்படி ஒன்றுமேயில்லை. கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்தால் இடைவேளைக்குப் பின் ரசித்துவிட்டு வரலாம். படத்திற்கு எதற்கு பெட்ரோமாக்ஸ் எனப் பெயர் வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

பெட்ரோமாக்ஸ் - பாதி வெளிச்சம்

 

பட குழுவினர்

பெட்ரோமாக்ஸ்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓