90 எம்எல்
விமர்சனம்
நடிப்பு - ஓவியா, மசூம் சங்கர், பொம்மு, மோனிஷா, ஸ்ரீகோபிகா
தயாரிப்பு - என்விஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - அழகிய அசுரா (அனிதா உதீப்)
இசை - சிம்பு
வெளியான தேதி - மார்ச் 1, 2019
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2/5
(18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)
தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இந்தப் படம் அதிர்ச்சியடைய வைக்கிறது. படம் முழுவதும் அடிக்கடி முத்தக் காட்சிகள், குடிக்கும் காட்சிகள், புகை பிடிக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், கொஞ்சம் அரைகுறையான ஆடைகள் என நாம் பார்ப்பது தமிழ்ப் படம்தானா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு பெண் இயக்குனர் இப்படிப்பட்ட படத்தை இயக்கியிருப்பதும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். ஆண்கள் இப்படிச் செய்தால் ஏற்றுக் கொள்ளும் சமூகம், பெண்கள் செய்தால் மட்டும் ஏன் தவறாகப் பார்க்கிறது என்று படத்தின் இயக்குனர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் பல பேட்டிகளில் இப்படத்தைப் பற்றி நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார்.
டிரைலரை மட்டும் பார்த்துப் பேசாதீர்கள், படத்தைப் பார்த்துவிட்டுப் பேசுங்கள் என்றார்கள். ஆனால், படத்தில் டிரைலரில் உள்ள அனைத்து விஷயங்களும் பரவிக் கிடக்கிறது.
பெண்களின் போராட்ட குணத்தை, பாசத்தை, காதலை படம் பார்க்கும் ரசிகர்களும் புகழ்ந்து தள்ளும் விதத்தில் பெண்களைப் பெருமைப்படுத்தும் எத்தனையோ சினிமாக்கள் வந்த தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படம் வந்திருப்பதை என்னவென்று சொல்வது ?.
தன் ஆண் நண்பருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓவியா, புதிதாக ஒரு அபார்ட்மென்ட்டிற்கு குடி வருகிறார். அந்த அபார்ட்மென்ட்டில் இருக்கும் நான்கு பெண்களுடன் பழக ஆரம்பிக்கிறார். அதில் ஒரு பெண்ணின் பிறந்த நாளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடிக்க ஆரம்பித்து நெருங்கிய தோழிகளாகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சினை, ஒருவரின் பிரச்சினையை மற்ற தோழிகள் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
தோழிகள் வட்டாரத்தில் ஓவியா தான் கேப்டன் போல இருக்கிறார். மற்றவர்களுக்கு குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பதில் இருந்து அவர்களது வாழ்க்கை முறையை மாற்றும் வரையில் அனைத்தும் ஓவியாவின் கைவண்ணமே. புகை பிடிப்பது, குடிப்பது என 2019ன் மாடர்ன் பெண்ணாகவே மாறியிருக்கிறார் ஓவியா. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திர வடிவமைப்பை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், ஓவியா எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்தக் கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
அவருடைய தோழிகள் வட்டாரத்தில் ஒவ்வொருவருக்கும் விதவிதமான கதாபாத்திரங்கள். திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் மசூம் சங்கர். ஒரு ரவுடியைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு தவிக்கும் பொம்மு. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவவரைக் காதலிக்கும் மோனிஷா. கல்யாணம் செய்து கொண்ட பின்னும் தாம்பத்தியத்தை அனுபவிக்காமல் இருக்கும் ஸ்ரீகோபிகா. அந்தந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இந்த புதுமுகங்களை சரியாகத் தேடிப் பிடித்திருக்கிறார் இயக்குனர். அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் எந்தத் தயக்கமும் இல்லாமல் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.
படத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு அதிக வேலையில்லை. மனைவி பொம்மு குடித்துவிட்டு கலாட்டா பண்ணுவதைத் தாங்க முடியாத ரவுடியாக ஒருவர். ஓவியாவுடன் லிவிங் டு கெதர் ஆக வாழும் ஒருவர். இந்தப் பெண்கள் கூட்டத்தைப் பார்த்து பழகத் துடிக்கும் அதே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் இரு இளைஞர்கள் ஆகியோர் தேவைப்படும் போது, 30 சதவீத ஆண்கள் இட ஒதுக்கீட்டில் வந்து போகிறார்கள்.
இடைவேளையில் ஒரு டிவிஸ்ட் வைத்து பேரதிர்ச்சையை வரவழைத்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் நன்றி சொல்கிறார்கள். படம் முழுவதும் குடி, புகை பற்றிய எச்சரிக்கை வாசங்களை நிரந்தரமாகவே வைத்திருக்கலாம்.
ஆண் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதைக் கூட தமிழ் சினிமாவின் ஆண் இயக்குனர்கள் ஒரு வரையறைக்குள், ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒரு பெண் இயக்குனரின் படத்தில் பெண் தோழிகள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள், என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை எந்த எல்லையும் இல்லாமல் அநியாய மீறலுடன் கொடுத்திருக்கிறார்கள். இனி, தமிழ் சினிமாவில் இந்தப் படத்தை உதாரணமாக வைத்து பல படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழை தாராளமாகக் கேட்பார்கள்.
படத்திற்கு இசையமைத்து கிளைமாக்சில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வழக்கம் போல காதலைப் பற்றி தன் அனுபவ வசனங்களை உதிர்த்து கைத்தட்டலையும், அன்பு முத்தங்களையும் எதிர்பாராமல் பெறுகிறார் சிம்பு.
ஆண்களே பார்க்கத் தயங்கும் இந்தப் படத்தை வெளியான முதல் நாளில் முதல் காட்சியில் பல இளம் பெண்களும் பார்க்க வந்திருந்தார்கள். தலைமுறை மாற்றம், இந்தப் படமும்தான்.
90 எம்எல் - படத்தைப் பார்ப்பதும் போதைதான்.
பட குழுவினர்
90 எம்எல்
- நடிகை
- இயக்குனர்