டேனி,Danny

டேனி - சினி விழா ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - வரலட்சுமி, கவின், துரை சுதாகர், அனிதா சம்பத்
தயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - சந்தானமூர்த்தி
இசை - சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர்
வெளியான தேதி - 1 ஆகஸ்ட் 2020 (ஓடிடி)
நேரம் - 1 மணி நேரம் 35 நிமிடங்கள்
ரேட்டிங் - 1.5/5

ஒரு காவல்துறை சம்பந்தப்பட்ட படம் என்றால் அதுவும் த்ரில்லர் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை இதற்கு முன் வந்த சில சிறந்த காவல்துறை படங்களையாவது முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், இப்போதெல்லாம் படம் இயக்க வரும் இயக்குனர்கள் பலர் தமிழ் சினிமாவின் சிறந்த சில படங்களைக் கூட பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் வருகிறது. அது இந்த டேனி படத்தைப் பார்த்த பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதலாகிறது.

இயக்குனர் சந்தானமூர்த்தி பரபரப்பில்லாத ஒரு போலீஸ் கதையை எந்த விறுவிறுப்பும் இல்லாமல் கொடுத்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். கதையின் மையத்திலிருந்து விலகி தேவையில்லாத கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம், கூடுதல் காட்சிகள் என வைத்து கதையின் ஓட்டத்தை மடை மாற்றுகிறார். படத்தில் பாராட்டுக்குரிய விஷயமாக ஏதாவது கண்ணில் படுமா என படத்தில் வரும் நாய் டேனியை வைத்துத்தான் தேட வேண்டும் போலிருக்கிறது.

தஞ்சாவூர்தான் படத்தின் கதைக்களம். கிராமத்துப் பகுதிகளில் ஓரிரு கொலைகள் நிகழ்கின்றன. இன்ஸ்பெக்டராக பதவியேற்கும் வரலட்சுமி அந்த கொலைகளுக்கான விசாரணையை தானே ஏற்கிறார். அவர் விசாரிக்க ஆரம்பித்தபின் வரலட்சுமியின் தங்கையும் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையாளிகளை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தின் மொத்த நேரமே 1 மணி நேரம் 35 நிமிடங்கள் தான். அதில் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் வரலட்சுமியே வருகிறார். இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரலட்சுமி கம்பீரமாகத்தான் தெரிகிறார். அதை நடிப்பில் இன்னும் கூடுதலாகக் காட்டியிருக்கலாம். விசாரணை சம்பந்தப்பட்ட படம் என்பதால் அவர் பேசும் வசனங்களும் படத்தில் முக்கியமானவை. சில சமயங்களில் என்ன பேசுகிறார் என்பது புரியவேயில்லை. கொஞ்சம் நிறுத்தி நிதானமாக புரியும்படி பேசியிருக்கலாம்.

படத்தின் டைட்டில் ரோலில் நாய் தான் நடித்திருக்கிறது. ஓரிரு காட்சிகளில் மட்டும் நாய் கண்டுபிடிக்கும் விஷயத்தை படத்தின் திருப்புமுனையாக வைத்திருக்கிறார்கள். நாயை நன்றாக ஓடவிட்டு காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அதன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த இன்னும் சில காட்சிகளை சேர்த்திருக்கலாம்.

மற்ற கதாபாத்திரங்களில் நாயின் டிரைனர் ஆக கவின், சப் இன்ஸ்பெக்டர் ஆக துரை சுதாகர், வரலட்சுமியின் தங்கை ஆக அனிதா சம்பத் நடித்திருக்கிறார்கள். வினோத் கிஷன் தான் படத்தின் வில்லன். இன்னும் எத்தனை படங்களில் இவரை இப்படியே பார்ப்பது என்று தெரியவில்லை.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த்குமார் மட்டும் படத்தின் கதையை உள்வாங்கிக் கொண்டு தன்னுடைய கேமரா கோணத்தில் பல காட்சிகளை வித்தியாசப்படுத்தி இருக்கிறார். சாய் பாஸ்கர் பின்னணி இசை பரபரப்பை அதிகம் கூட்டவில்லை.

பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து அவர்கள் போக்கில் வளர்ப்பது ஆபத்து என்பதுதான் இந்த டேனி சொல்லும் கருத்து.

டேனி - குறைந்த பயிற்சி

 

டேனி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டேனி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓