ட்ராமா (மலையாளம்) - விமர்சனம்
நடிகர்கள் : மோகன்லால், ஆஷா சரத், கனிகா, திலீஷ் போத்தன், ரெஞ்சி பணிக்கர், அருந்ததி நாக் மற்றும் பலர்
இசை : பிஜிபால்
ஒளிப்பதிவு : என்.அழகப்பன்
டைரக்சன் : ரஞ்சித்
மலையாள சினிமாவில் ரொம்பவே கிளாசிக்கான கூட்டணியான ரஞ்சித் - மோகன்லால் டைரக்சனில் வெளியாகியுள்ள படம் தான் இந்த ட்ராமா.
லண்டனில் இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளை நடத்தி தரும் நிறுவனத்தின் பார்ட்னர்கள் மோகன்லாலும், திலீஷ் போத்தனும். லண்டனில் வசிக்கும் தனது மகள் கனிகாவை பார்க்கவந்த இடத்தில் அவரது தாய் ரோசம்மா மரணமடைகிறார். அவரது மகன்கள் மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் ஆளுக்கொரு நாட்டில் வசிக்கின்றனர். அதனால் மோகன்லால் ரோசம்மாவின் வாரிசுகள் வரும் வரை அவரது உடலை வேறு இடத்தில் வைத்து பாதுக்காக்கிறார்.
லண்டனிலேயே இறுதிச்சடங்கை நடத்த அண்ணன்கள் நினைத்தாலும், இன்னும் திருமணம் ஆகாத இளையமகன், தனது தாயின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கேரளாவுக்கு கொண்டுசென்று அடக்கம் செய்ய நினைக்கிறான். ஆனால் மூத்தவர்கள் பிடிவாதம் காட்டுகின்றனர். இந்தநிலையில் ரோசம்மாவின் உடலை பாதுகாக்கும் மோகன்லாலுக்கு அன்றிரவு வித்தியாசமான அனுபவம் ஒன்று ஏற்படுகிறது.
அதைத்தொடர்ந்து அவர் இளையமகனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி, ரோசம்மாவின் உடலை கேரளாவுக்கு அனுப்ப காய் நகர்த்துகிறார். சில பல எதிர்ப்புகள் வந்தாலும், அவர் எப்படி சாமர்த்தியமாக அதை சாதிக்கிறார் என்பதுதான் மீதிப்படம்.
சூப்பர்ஸ்டார் என்பதாலேயே எந்நேரமும் மாஸ் படங்களில் மட்டுமே மோகன்லாலை எதிர்பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு தெரிந்தது தான். இந்த கிளாஸ் படத்தில் அவர் என்ன பெஸ்ட் கொடுப்பாரோ அதை கொடுத்துள்ளார். நமக்குத்தான் கொஞ்சம் ஏமாற்றம். மோகன்லாலின் மனைவியாக சில காட்சிகளே வந்தாலும் ஊடல் கூடல் என தனது நடிப்பை நிறைவாய் செய்துள்ளார் ஆஷா சரத்.
மோகன்லாலின் நண்பராக வரும் திலீஷ் போத்தன், கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. பாசமுள்ள மகளாக கனிகா, பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும் மகன்களாக சுரேஷ் கிருஷ்ணா, டினி டாம் என மற்றவர்களும் கதைக்கு தோள் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக ரோசம்மாவாக நடித்திருக்கும் அருந்ததி நாக் மற்றும் மோகன்லாலுக்கு இடையேயான அந்த கால் மணி நேர காட்சி சுவாரஸ்யம் என்பதுடன் படத்தின் ஜீவனாகவும் அமைந்துள்ளது. கேரளாவில் இருந்துகொண்டே மோகன்லாலுக்காக கேம் ஆடும் அரசியல்வாதி கேரக்டரில் ரெஞ்சி பணிக்கர் கன கச்சிதம்,
பிஜிபாலின் பின்னணி இசை படம் முழுதும் கலவையான உணர்வுகளை கடத்தும் பணியை செவ்வனே செய்திருக்கிறது. லண்டனின் ஹைடெக்கான பகுதிகளை ஒதுக்கிவிட்டு அமைதியான ஏரியாக்களை அழகாக படம்பிடித்திருக்கிறது என்.அழகப்பனின் கேமரா.
இயக்குனர் ரஞ்சித் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்கிற மைன்ட்செட்டோடு செல்பவர்களுக்கு இந்த ட்ராமா நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.