நடிகர்கள் : ராஜ்குமார் ராவ், கிர்த்தி கர்பந்தா
இயக்கம் : ரத்னா சின்ஹா
தயாரிப்பு : வினோத் பச்சன்
ராஜ்குமார் ராவ், கிர்த்தி கர்பந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்துடன் கூடிய பழிவாங்கல் கதை தான் ஷாதி மெயின் ஜரூர் ஆனா. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம்.
கதை கான்பூரில் தொடங்குகிறது. சுக்லா மற்றும் மிஷ்ரா என்ற இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் கதை தான் படத்தின் ஒன்லைன். கதைப்படி, ஆர்த்தி சுக்லா எனும் கிர்த்தி கர்பந்தாவுக்கும், சதேந்திரா மிஸ்ரா எனும் ராஜ்குமாருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். இது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். திருமணத்திற்கு முன்பாக ஒருவரை நன்கு புரிந்து கொள்கிறார்கள், அது காதலாகவும் வளர்கிறது. திருமணம் நடக்க இருப்பதற்கு ஒருநாள் முன்னர் மணமகள் கிர்த்தி, ஓடிவிடுகிறார். இதனால் திருமணம் நின்று விடுகிறது. கிர்த்தி மீது வெறுப்பில் உள்ளார் ராஜ்குமார்.
இந்தச்சூழலில் காலங்கள் உருண்டோட, ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர் சப்-ரெஜிஸ்டராக திரும்புகிறார் கிர்த்தி. ஒரு பில்டரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழ, அதை விசாரிக்கும் அதிகாரியாக ஐஏஎஸ் கலெக்டராக ராஜ்குமார் வருகிறார். அதன்பின் என்ன நடக்கிறது, கிர்த்தி திருமணத்திற்கு முதல்நாள் ஓட காரணம் என்ன, ராஜ்குமார், கிர்த்தியை பழிவாங்கினாரா... இல்லை பழைய பகையை மறந்து அவர் மீதான குற்றச்சாட்டை பொய்யாகியானாரா...? மீண்டும் இவர்கள் இணைய வாய்ப்பு எதுவும் அமைந்ததா...? என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
ராஜ்குமார் ராவ், ரொமான்ட்டிக்கான இடத்தில் காதல் மன்னனாகவும், ஐஏஎஸ்., அதிகாரியாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
ராஜ்குமாருக்கு இணையாக கிர்த்தி கர்பந்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களை போலவே கோவிந்த் நாம்தேவ், மனோஜ், விபின் சர்மா, கேகே.ரெய்னா உள்ளிட்டோரும் தங்களது ரோலை சரியாக செய்திருக்கின்றனர்.
ரத்னா சின்ஹா இயக்குநர். மேலோட்டமாக பார்க்கும் போது இயக்குநர் படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார். இருப்பினும் முதற்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் இல்லாதது, கதை மெதுவாக நகருவது சற்றே பலவீனம். ஆனால் அதை பெரிதாக எடுத்து கொள்ள முடியாத அளவுக்கு திரைக்கதை சிறப்பாக அமைந்திருக்கிறது. இசை சுமார் தான். ஒளிப்பதிவு ஓவிய பதிவு.
ஒரு குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் பாசம், காதல், பகை, பழிவாங்கும் படலம்... என ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை பார்த்த உணர்வை தந்திருக்கிறார் இயக்குநர். கூடவே ஒரு மெஸேஜையும் கொடுத்திருக்கிறார்.